ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'ரகுராம் ராஜன் தெரிவித்த 'சகிப்புத்தன்மை' பற்றிய கருத்துக்கள் நியாயமானவையே'

இந்தியா சர்வதேச முதலீடுகளைத் தேடும்போது, சமூக சூழலில் சகிப்புத்தன்மை இல்லாத நிலை இருந்தால் அது முதலீடுகளைப் பாதிக்கும் எனவே இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் அது குறித்துத் தெரிவித்த கருத்துக்கள் நியாயமானவையே என்கிறார் ஊடகவியலாளர் மோகன் குருசாமி.

படத்தின் காப்புரிமை
Image caption மோகன் குருசாமி- 'ரகுராம் ராஜன் எடுத்த முடிவுகள் சிறப்பானவை'

ரகுராம் ராஜனின் பதவிக்காலம் குறித்த சர்ச்சையை அடுத்து, அவர் தனக்கு பதவி நீட்டிப்பு கோரப்போவதில்லை என்றும், செப்டம்பரில் தற்போதைய பதவிக்காலம் முடியும்போது, சிகாகோ பல்கலைக்கழகத்தில் தனது கல்விப்பணியைத் தொடரப்போவதாகவும் இன்று அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், அவரது அறிவிப்பு குறித்தும், அவரை எதிர்த்து பாஜகவின் சுப்ரமணிய சாமி போன்றோர் தெரிவித்த கருத்துக்கள் பற்றியும் பிபிசி தமிழோசையிடம் பேசினார் பிரபல ஊடகவியலாளர் மோஹன் குருசாமி.

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு பதவிக் காலம் வரும் செப்டம்பரில் முடிவடைய இருக்கும் நிலையில், அவருக்கு உரிய நேரத்தில் பதவி நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படாததே அவர் அமெரிக்கா திரும்ப முடிவு செய்தற்கான காரணம் என்கிறார் மோகன் குருசாமி.

படத்தின் காப்புரிமை AFP

ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்தே, அவர் திறமையாக செயல்பட்டார், வங்கிகளின் வராக்கடன்களை கடுமையாக ஒழுங்குபடுத்தினார், இது இந்திய பெருநிறுவனங்களின் பகையை அவருக்குத் தேடித்தந்தது, என்றார் மோகன் குருசாமி.

ஆனால் இந்தியப் பொருளாதாரம் தனிநபரைச் சார்ந்தது அல்ல, யார் ரிசர்வ வங்கியின் ஆளுநராக இருந்தாலும், பொருளாதார அமைப்பு செயல்படும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறதே என்று கேட்டதற்கு, யார் இருந்தாலும் செயல்படலாம், ஆனால் ரகுராம் ராஜனுக்கு இருந்த சர்வதேச அந்தஸ்தும் நம்பகத்தன்மையும் முக்கியமானவை என்றார். மேலும் அவர் தனது பதவிக்காலத்தில் எடுத்த முடிவுகள் மற்றும் கோடிட்டுக்காட்டிய பிரச்சனைகள் இனி அலட்சியப்படுத்தமுடியாதவை என்றும் அவர் கூறினார்.

இந்திய அரசியல் நிலவரம் குறித்து ரகுராம் ராஜன் தெரிவித்த சில கருத்துகள் சர்ச்சையை உருவாக்கின, அவர் இந்தியாவில் “சகிப்புத்தன்மை”யற்ற நிலை இருப்பதாக தெரிவித்த கவலைகள் மேலும் சர்ச்சையைத் தூண்டின என்ற கருத்து குறித்து கேட்டபோது, இது போன்ற பிரச்சனைகள் பொருளாதாரத்தைப் பாதிக்கும் நிலை வரும்போது, அதைப் பற்றி பயமின்றி கருத்துக்கூற ரகுராம் ராஜனுக்கு உரிமை உண்டு என்றார் மோஹன் குருசாமி.

ரகுராம் ராஜன் மீது பாஜக தலைவர் சுப்ரமணியம் ஸ்வாமி தெரிவித்த குற்றச்சாட்டுகள் பற்றி கேட்டபோது, சுப்ரமணியம் ஸ்வாமி யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடாத ஒரு நபர் என்றார் மோஹன் குருசாமி.