Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 29 ஜுலை, 2008 - பிரசுர நேரம் 16:56 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
செய்தியரங்கம்
 
இலங்கை- இந்திய வெளியுறவுச் செயலர்கள்
இலங்கை- இந்திய வெளியுறவுச் செயலர்கள்

சார்க் வெளியுறவுச் செயலர்கள் அமர்வு

தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு ஒன்றியத்தின் (சார்க்) தலைவர்களின் 15 வது உச்சி மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

அதற்கு முன்னோடியாக அந்த நாடுகளின் வெளியுறவுச் செயலர்களின் மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது அமர்வுக்கான தலைமைப் பொறுப்பை இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனனிடம் இருந்து இலங்கை வெளியுறவுச் செயலர் பாலித கோகன்ன ஏற்றுக்கொண்டார்.

இந்த உச்சி மாநாட்டின் போது அவதானி நாடுகளை எவ்வாறு ஆக்கபூர்வமாக பங்களிக்கச் செய்வது, உணவுப் பிரச்சினையை பிராந்திய ஒத்துழைப்புடன் சமாளிப்பது, பொருளாதார விடயங்கள் குறித்த மேலதிக நடவடிக்கைகள் மற்றும் மாநாட்டின் பிரகடனத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் ஆகியவை குறித்து, இந்த வெளியுறவுச் செயலர்கள் சந்திப்பில் அலசப்பட்டதாக, சார்க் செயற்குழுவின் தலைவரும், இலங்கை வெளிநாட்டமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கான தலைமைப் பணிப்பாளருமான கிரேஸ் ஆசிர்வாதம் தமிழோசைக்கு தெரிவித்தார்.

அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மடு ஆலயத்துக்கு மன்னார் ஆயர் விஜயம்

மடு ஆலயத்தில் ஆயர்
மடு ஆலயத்தில் ஆயர்
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்து, இராணுவத்தினரின் வசம் வந்துள்ள மடுக்கோவில் பகுதியைப் பார்வையிடுவதற்கு கத்தோலிக்கத் திருச்சபையினருக்கு இன்று செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசையுடன் அங்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு திரும்பியுள்ள, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு அவர்கள் ஆலயத்தின் திருத்த வேலைகள் யாவும் இராணுவத்தினரால் செய்யப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தாங்களே இந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என இராணுவத்தினரிடம் கேட்டிருந்த போதிலும் அதற்கான அனுமதி வழங்கப்படாமல் தமக்கும் தெரிவிக்காமல் இராணுவத்தினரே அனைத்து வேலைகளையும் செய்திருப்பதை அங்கு தாங்கள் கண்டதாகவும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.

எனினும் மடுக்கோவில் இன்னும் தம்மிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பாதுகாப்புக்காக விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய தேவன்பிட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த மடுமாதாவின் திருச்சொரூபமும் கடந்த வாரம் மன்னார் ஆயர் இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும் தற்போது மடுக்கோவில் ஆயர் இல்லத்திடம் ஒப்படைக்கப்படாததன் காரணமாக ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள மடுக்கோவிலின் ஆவணி மாதத் திருவிழா இம்முறை நடைபெறுவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.


அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்
அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றிலே இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானுக்கும், துணை அமைச்சர் முத்து சிவலிங்கம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் நுவரெலிய நீதிமன்றம் 6 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற சதாசிவம் அவர்களுடனான அலுவலக உரிமை குறித்த வழக்கு ஒன்றில், முன்னதாக நீதிமன்றம் அந்த அலுவலகத்தை சதாசிவம் பயன்படுத்த அனுமதித்திருந்தது.

ஆயினும், அந்த உத்தரவை குற்றவாளிகள் மீறியதாகக் கூறி சதாசிவம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட தற்போதைய வழக்கிலேயே இவர்கள் மூவருக்கும் இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கச்சதீவு உடன்படிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா
இந்திய மீனவர்கள் இழந்த உரிமைகளை மீண்டும் பெற்றுத் தரும் வகையில், கச்சத்தீவு உடன்படிக்கையை இந்தியா மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

கொழும்பில் நடைபெறும் சார்க் உச்சிமாநாட்டின்போது, இது தொடர்பாக இலங்கை அரசுடன் இந்தியப் பிரதமர் பேச்சு நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா.
இந்தியா – இலங்கை இடையிலான கடல் பகுதியில், கடல் கண்ணிவெடிகளைப் பரப்ப இலங்கையை இந்தியா அனுமதிக்கக் கூடாது என்றும், இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


நாசாவுக்கு வயது ஐம்பது

நாசா நிறுவனத்தின் தலைவர் மைக்கல் கிரிபின்
நாசா நிறுவனத்தின் தலைவர் மைக்கல் கிரிபின்
அமெரிக்காவின் விண்வெளிப் பயணத்தை முன்னேடுத்துச் செல்லும் நாசா எனப்படும் அந்நாட்டின் விண்வெளி ஆய்வு நிலையம் துவக்கப்பட்டு இன்றோடு 50 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலக நாடுகள் ரஷ்யாவின் பக்கமாகவும், அமெரிக்காவின் பக்கமாகவும் இரண்டாகப் பிளவுபட்டு நின்ற நிலையில், இந்த இரு நாடுகளும் தங்கள் வல்லமையை பறைசற்ற இராணுவத்தையும், தொழில்நுட்பத்தையும் உபகரணங்களாகப் பயன்படுத்தின.

இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான போட்டிகள் விண்வெளியிலும் பெரிய அளவில் வெளிப்பட்டன.

ஸ்புட்னிக் 1 என்று பெயரிடப்பட்ட முதல் செயற்கைக் கோளை அப்போதைய சோவியத் யூனியன் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி விண்ணில் ஏவியது.

விண்வெளி முயற்சிகளில் முன்னணியில் நாசா திகழ்கிறது
விண்வெளி முயற்சிகளில் முன்னணியில் நாசா திகழ்கிறது
நவம்பர் 3 ஆம் திகதி ஸ்புட்னிக் 2 விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த அமெரிக்கா எடுத்த முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது,

1957 ஆம் ஆண்டின் டிசம்பர் 6 ஆம் திகதியன்று அமெரிக்காவின் செயற்கைக் கோள் ராக்கெட் ஏவுதளத்திலேயே வெடித்து சிதறியது.

இந்த நிலையில் 1958 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதியன்று அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஜசன்ஹோவர் நேஷனல் ஏரோநாடிக்ஸ் அண்ட் ஸ்போஸ் ஆக்ட் என்ற சட்டத்தை கைச்சாத்திட்டார்.

இந்த சட்டத்தினால் உருவாக்கப்பட்ட அமைப்பான நாசா அதன்பிறகு பல விண்வெளி சாதனைகளுக்கு பொறுப்பானது.

இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள