Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 29 ஜுலை, 2008 - பிரசுர நேரம் 16:48 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
செய்தியறிக்கை
 
பேச்சுக்களில் உடன்பாடில்லை
பேச்சுக்களில் உடன்பாடில்லை

ஜெனிவா உலக வர்த்தக பேச்சுக்கள் தோல்வி

உலக வர்த்தகத்தை தாராளமயமாக்கும் நோக்கிலான ஜெனிவா பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்ததாக அதில் கலந்துகொண்ட இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

டோகா சுற்றுக்கள் என்று அழைக்கப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒன்பதாவது நாளை இன்று எட்டியிருந்தது.

வளர்ந்த நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதியாவதில் இருந்து தமது உள்ளூர் வர்த்தகத்தை பாதுகாப்பதற்கு வளர்ந்துவரும் நாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற அளவுக்கு நீடித்த நிலையில் இந்த பேச்சுக்கள் நின்று போயின.

இந்த விவகாரம், அமெரிக்காவை, சீனாவுக்கும், இந்தியாவுக்கும் எதிராக முரண்படச் செய்தது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் முறிந்து போகக் கூடிய சாத்தியக்கூறுகள் ஏற்பட்டால் அது பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஐரோப்பிய வர்த்தக ஆணையாளர் பீட்டர் மண்டெல்சன் முன்னதாக தெரிவித்திருந்தார்.


இந்தியா- பாக் இராணுவ மோதலைத் தணிக்க உயரதிகாரிகள் பேச்சு

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பாகிஸ்தானிய சிப்பாய்கள்
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பாகிஸ்தானிய சிப்பாய்கள்
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே, இரு நாட்டு இராணுவத்தினருக்கும் திங்கட்கிழமை ஏற்பட்ட மோதல் காரணமாக, சற்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், போர் நிறுத்த உடன்படிக்கை, முதல் முறையாக மிகப்பெரிய அளவில் மீறப்பட்டிருப்பதாக இந்தியத் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது.

பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள நவ்கம் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே, இந்தியத் தரப்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் கோபுரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் வீரர்கள் எச்சரித்ததை அடுத்து இரு தரப்பினருக்கும் மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில், இந்தியச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார்.

இரு நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கான உயர் அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்ற கூட்டத்தை அடுத்து நிலைமை மேலும் பதற்றமடையால் தடுக்கப்பட்டது.

இந்த மோதல் தொடர்பாக இன்று புதுடெல்லியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, போர் நிறுத்த உடன்படிக்கை மீறப்படுவது அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளார்.

நேற்றைய சம்பவம் தொடர்பாக பிபிசியிடம் பேசிய இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் ஏ.கே. மாதூர், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தான் வீரர்கள் சுமார் 300 மீ்ட்டர் தூரம் இந்தியப் பகுதிக்குள் வந்திருப்பதை சுட்டிக்காட்டி, பாகிஸ்தானிடம் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், இந்தப் புகாரை பாகிஸ்தான் மறுத்திருக்கிறது.


சர்வதேச அபய ஸ்தாபன விமர்சனத்தை சீனா நிராகரித்துள்ளது

பீஜிங்கில் சீன சிப்பாய்கள்
பீஜிங்கில் சீன சிப்பாய்கள்
சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான சர்வதேச அபய ஸ்தாபனம், தமது நாட்டில் நிலவும் மனித உரிமைகள் குறித்து வெளியிட்டிருக்கும் விமர்சனத்தை சீனா நிராகரித்துள்ளது.

சீனா குறித்து அறிந்தவர்கள் யாரும் அந்த விமர்சனத்துடன் உடன்பட மாட்டார்கள் எனக் கூறியுள்ள சீன வெளியுறவு அமைச்சகம், சீனாவின் உள் விவகாரங்களில் யாருடைய தலையீடும் இருக்கக் கூடாது என்று மீண்டும் கூறியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னமும் பத்து நாட்களே உள்ள நிலையில், சீனாவில் மனித உரிமைகள் நிலவரங்களில் எந்த முன்னேற்றத்தையும் காணக் கூடியதாக இல்லை என்று சர்வதேச அபய ஸ்தாபனம் கூறியிருந்தது.


பைக்கால் ஏரியின் அடியை எட்டிய ரஷ்ய நீர்மூழ்கி

பைக்கால் ஏரியின் அடியை எட்டிய நீர்மூழ்கி
பைக்கால் ஏரியின் அடியை எட்டிய நீர்மூழ்கி
உலகின் மிகவும் ஆழமான நன்நீர் ஏரியான தெற்கு சைபீரியாவில் உள்ள பைக்கால் ஏரியின் அடிப்பாகத்தை இரண்டு சிறிய நீர் முழ்கிக் கப்பலில் சென்ற ரஷ்ய விஞ்ஞானிகள் எட்டி விட்டதாக இந்த முயற்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏரியின் அடிப்பாகத்தை அடைய நீர்முழ்கிக் கப்பல்கள் தரையில் இருந்து ஆயிரத்து எழுநூறு மீட்டர் தூரம் முழ்கிச் சென்றன. இந்த தூரம் முன்பு கணிக்கப்பட்டதை விட அதிகமானது.

ஆனால் இது குறித்து சுயாதீனமாக உறுதிசெய்யப்படவில்லை.

புவிப்பந்து வெப்பமடைவது குறித்து ஆவணப்படுத்துவதற்காக
புவிப்படிமானம் மற்றும் உயிரியில் ரீதியான பலவகையான சோதனைகளை மேற்கொள்ளவிருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பைக்கால் ஏரியில் இங்கு மட்டுமே காணப்படும் நூற்றுக்கணக்கான நீர் வாழ் உயிரினங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள