Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்:
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
அமைச்சர் ஆ. ராசா ராஜினாமா
 
அமைச்சர் ஆ. ராசா
அமைச்சர் ஆ. ராசா
திமுகவைச் சேர்ந்த மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

2ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை தொலைத் தொடர்பு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் பதவி விலகியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையிலிருந்து டெல்லி வந்த அவர், நேரடியாக பிரதமரின் இல்லத்துக்குச் சென்று தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

பிரதமரிடம் தனது ராஜிநாமாவை சமர்ப்பித்துவிட்டு வெளியே வந்த ராசா செய்தியாளர்களிடம் பேசும்போது, தனது கட்சித் தலைவரின் அறிவுரையின்பேரில், அரசுக்கு ஏற்படும் தர்மசங்கடத்தைத் தவிர்க்கும் வகையில் பதவியை ராஜிநாமா செய்திருப்பதாகவும், அதற்காக தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்வதாக அர்த்தம் இல்லை என்றும், தன் மீது எந்தக் களங்கமும் இல்லை என்பதை நிரூபிக்கப் போவதாகவும் கூறினார்.

தொலைத் தொடர்புத்துறை தனது தலைமையில் பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டிருப்பதாகவும், மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் தொடர்ந்து உழைக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, சென்னையில் திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆ. ராசாவை பதவி விலகுமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக அறிக்கை

``1999 முதல், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை எந்த முறையைப் பின்பற்றி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை செய்து வந்ததோ அதே முறையைப் பின்பற்றிய ஆ. ராசாவை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலக்க வேண்டுமென்று, சில எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஸ்தம்பிக்கச் செய்து வருகின்றனர். நாடாளுமன்றத்தின் ஜனநாயக நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறவும், நாட்டு மக்களுக்குத் தேவையான பிரச்சினைகள், விவாதித்து முடிவெடுக்கப்படவும், வழிவகுத்திடும் வகையில், ஆ.ராசா அவர்களை அமைச்சர் பொறுப்பிலிருந்து இன்றிரவே விலகிக் கொள்ள வேண்டுமென்று, திமுக முடிவெடுத்து அவருக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி அவர்களின் விரிவான அறிக்கை தனியே வெளியிடப்படுகிறது’’ என்று திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக, கடந்த வாரம் முழுவதும் எதி்ர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் ஸ்தம்பித்தன.

2ஜி பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணை திங்கட்கிழமை இந்திய உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள