Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 02 மார்ச், 2011 - பிரசுர நேரம் 15:08 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
பாக் கிறிஸ்துவ அமைச்சர் கொலை
 
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாபாஸ் பட்டி
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாபாஸ் பட்டி

பாகிஸ்தானின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒரே கிறிஸ்தவரான சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாபாஸ் பட்டி துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் அவர் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த வழியில் காரில் வந்த முகமூடியணிந்த துப்பாக்கிதாரிகள் அவரைச் சுட்டிருந்தனர்.

இத்தாக்குதலை தாங்களே நடத்தியதாக தாலிபான்கள் கூறுகின்றனர். இந்த வருடத்தில் இதுமாதிரியாக நடந்துள்ள இரண்டாவது படுகொலை இது. ரோமன் கத்தோலிக்கரான ஷாபாஸ் பட்டி, பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய மதநிந்தனைச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரி வந்தவர் ஆவார்.

ஒருவர் மதநிந்தனைச் செய்ததாக சாட்சியம் சொன்னாலே போதும் அந்த சாட்சியத்தை நிரூபிக்கும் கூடுதல் தடயம் எதுவும் இல்லாமலேயே குற்றம் சாட்டப்படுபவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும் என்பதுபோல இந்த மதநிந்தனைச் சட்டம் அமைந்துள்ளது.

படுகொலை செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாபாஸ் பட்டி, அந்நாட்டின் ஒரே கிறிஸ்தவ அமைச்சராவார். தவிர பாகிஸ்தானில் சிறுபான்மை நலத்துறைக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக ஆக்கப்பட்ட முதல் கிறிஸ்தவரும் இவர்தான். சென்ற மாதம் தான் இவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் மாநிலத்திலுள்ள லாகூரில் 1968ல் பிறந்தவரான ஷாபாஸ் பட்டி 1985லேயே பாகிஸ்தான் சிறுபான்மையினர் கூட்டணி என்ற அமைப்பு உருவாவதில் பங்கு வகித்ததிருந்தார். பாகிஸ்தானின் மதச் சிறுபான்மையினருடைய பிரதிநிதியாகவே இவர் பலகாலமாகக் கருதப்பட்டு வந்துள்ளார்.

2002ஆம் ஆண்டு பாகிஸ்தான் மக்கள் கட்சியில் சேர்ந்த இவர் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல்கொடுத்து வந்திருந்தார்.

பாகிஸ்தானின் கிறிஸ்தவ விடுதலை முன்னணி என்ற அமைப்பின் தலைவராகவும், பாகிஸ்தானின் மனித உரிமைக் கவுன்சில் செயல் இயக்குநராகவும் இவர் இருந்துவந்தார்.

தனது பணிகளுக்காக மத சுதந்திரத்துக்கான சர்வதேச விருது ஒன்றையும் இவர் பெற்றிருந்தார். இந்த சர்வதேச விருதை வாங்கிய முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

வன்முறை வழியிலல்லாது உத்தியோகபூர்வ வழிகளில் மூலமாகவே சிறுபான்மையினரின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று நம்பியவர் இவர்.

குற்றவாளிக்கு மரண தண்டனைகூட விதிக்க முடியும் என்றுள்ள பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய மதநிந்தனைச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று வாதிட்டு வந்தவர் இவர்.

அண்மையில் இந்தச் சட்டத்தை எதிர்த்த பஞ்சாப் மாநில ஆளுநர் சல்மான் தஸீர் தனது மெய்க்காவலர் ஒருவராலேயே சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்தச் சட்டத்தை எதிர்த்த ஷாபாஸ் பட்டிக்கும், பாகிஸ்தானின் முற்போக்கு பெண் அமைச்சர் ஷெர்ரி ரஹ்மானுக்கும்கூட கொலை மிரட்டல்கள் வந்திருந்தன. சல்மான் தஸீர் கொல்லப்பட்ட சமயத்தில் பிபிசியிட கருத்து வெளியிட்டிருந்த ஷாபாஸ் பட்டி மிரட்டல்களைக் கண்டு தான் ஓய்ந்துவிடப்போவதில்லை என்று கூறியிருந்தார்.

தான் படுகொலை செய்யப்படும் பட்சத்தில், பிபிசியிலும் பிற ஊடகங்களிலும் ஒளிபரப்புவதற்கான வீடியோ செய்தி ஒன்றை இவர் உருவாக்கி வைத்திருந்தார்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள