Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்:
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
மிருசுவில் வழக்கு: நேரடி ஆய்வு
 
நீதிபதிகள் பார்வையிட்டபோது பிடிக்கப்பட்ட படம்
நீதிபதிகள் பார்வையிட்டபோது பிடிக்கப்பட்ட படம்

இலங்கையின் 'மிருசுவில் பொதுமக்கள் படுகொலை' சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்திவரும் கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று பார்வையிட்டிருக்கின்றது.

மிருசுவில் காட்டுப் பகுதியொன்றில் கடந்த 2000 ஆம் ஆண்டு 8 பொதுமக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருந்தார்கள். இந்த மரணங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 5 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இதனையடுத்து கொலைகள் நடைபெற்ற இடம், கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்டிருந்த இடம், அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்ட நீதிமன்ற வளாகம் ஆகியவற்றை இந்த நீதிபதிகள் மூன்று பேரும் வியாழனன்று பார்வையிட்டு அதற்கான விபரக் குறிப்புக்களைப் பதிவு செய்திருக்கின்றனர்.

ஒரு கொலைச்சம்பவம் தொடர்பாக கொழும்பில் விசாரணைகளை நடத்தி வரும் மேல் நீதிமன்றம் ஒன்று சம்பவ இடத்தைப் பார்வையிடுவதற்காக சட்டமா அதிபர் திணைக்களம், மற்றும் பிரதிவாதிகள் சகிதம் வடபகுதிக்குச் சென்றிருப்பது இதுவே முதற்தடவையாகும்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர மற்றும் எச்.என்.பி.பி.வராவௌ, சுனில் ராஜபக்ச ஆகிய மூன்று நீதிபதிகளும் பிரதி சட்டமா அதிபர் சரத் ஜயமான மற்றும் அதிகாரிகளுமே மிருசுவில் பகுதிக்குச் சென்றிருந்தனர்.

இந்த வழக்கின் ஆரம்ப விசாரணைகளை நடத்திய அப்போதைய சாவகச்சேரி மாவட்ட நீதவான் அன்னலிங்கம் பிரேம்சங்கர், சந்தேக நபர்கள் மீதான அடையாள அணிவகுப்பை நடத்திய அப்போதைய பதில் நீதவான் சுப்பிரமணியம் கந்தசாமி, இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் தரப்பில் ஆரம்ப விசாரணைகளை நடத்திய பொலிஸ் பொறுப்பதிகாரி சமரக்கோன் பண்டார ஆகியோர் நீதிபதிகள் குழுவினருக்கு சம்பவங்கள் நடைபெற்ற இடங்களை அடையாளம் காட்டினர். அப்போது சாவகச்சேரியின் தற்போதைய நீதவான் எம்.கணேசராஜா அவர்களும் அங்கு பிரசன்னமாக இருந்தார்.

இந்த வழக்கின் பிரதிவாதிகளான ஐந்து இராணுவத்தினர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்ட இடத்தையும் பார்வையிட்ட நீதிபதிகள் குழுவினர், இந்த வழக்கின் ஆரம்ப நீதிமன்ற விசாரணைகளை நடத்திய அப்போதைய சாவகச்சேரி நீதவான் அன்னலிங்கம் பிரேம் சங்கரின் சாட்சியத்தையும் பதிவு செய்திருக்கின்றனர்.

நீதிபதிகள் குழுவினருடன் இந்த வழக்கின் பிரதிவாதிகளான ஐந்து இராணுவத்தினரும் மிருசுவில் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்கள். இந்த விஜயத்தையொட்டி, மிருசுவில் மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் எதிரிகளான ஐந்து இராணுவத்தினருக்கும் எதிராக 17 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள