Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 02 ஜூன், 2011 - பிரசுர நேரம் 16:30 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
தயாநிதிமாறன் மீது புதிய ஊழல் புகார்
 
தயாநிதி மாறன்
தயாநிதி மாறன்

திமுகவைச்சேர்ந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்
முன்பு தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, அமைச்சர் என்கிற முறையில் அவருக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படும் 323 தொலைபேசிகளை தனது குடும்ப நிறுவனமான சன்தொலைக்காட்சிக்குழுமத்திற்கு சட்டவிரோதமாக பயன்படுத்தியதில் சுமார் 400 கோடிவரை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எஸ் குருமூர்த்தி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி அவர் மீது நட்வடிக்கை எடுப்பதற்கு மத்திய புலனாய்வுத்துறை நடுவணரசிடம் அனுமதி கேட்டதாகவும், ஆனால் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு இந்த விடயத்தில் மேல்நடவடிக்கை எடுக்காமல் பிரச்சினையை கிடப்பில் போட்டுவைத்திருப்பதாகவும் குருமூர்த்தி குற்றம் சாட்டுகிறார்.

இது குறித்து பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த குருமூர்த்தி, இந்த விடயத்தில் தனது அமைச்சர் பதவியை தயாநிதி மாறன் தவறாக பயன்படுத்தியதாக மத்திய புலனாய்வுத்துறையே கூறியும் கூட, இந்திய நடுவணரசு இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

குருமூர்த்தியின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் சன் தொலைக்காட்சி நிறுவனத்திடம் தொடர்பு கொள்ள பிபிசி தமிழோசை சார்பாக முயன்றோம். இது வரை தொடர்பு கிடைக்கவில்லை.

தயாநிதியின் மறுப்பு

ஆனால் வியாழனன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தயாநிதி மாறன், இது தன்னையும், தனது குடும்பத்தையும், தனது கட்சியையும் அவதூறு செய்யும் நோக்கத்துடன் எழுதப்பட்ட ஒரு கட்டுரை என்றும் , தனது இல்லத்தில் தனக்கு வழங்கப்பட்ட இணைப்புகளில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் வழங்கப்பட்ட இணைப்புகளின் மூலம் தனக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைந்த அளவு தொலைபேசி அழைப்புகளையே தான் செய்ததாகவும் கூறினார்.

மேலும், இதே பிரச்சினை குறித்து 2009ம் ஆண்டு இந்த பத்திரிகையின் சகோதரப்பத்திரிகை ஒன்றில் இதே போன்ற ஒரு கட்டுரை எழுதப்பட்டதாகவும் அதற்கு தான் ஒரு வழக்கறிஞர் மூலமாக நோட்டிஸ் அனுப்பியதாகவும், பின்னர் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா 2009 ஆம் ஆண்டு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியபோது, இதே குற்றச்சாட்டுகளை மீண்டும் திரும்பி கூறியதால், அவர்மீதும் ஒரு வழக்கு தொடர்ந்து அது தற்போது நிலுவையில் இருப்பதாகவும், இந்த மாதிரி வழக்குகள் நிலுவையில் உள்ள ஒரு விவகாரத்தை மீண்டும் மீண்டும் இந்தப் பத்திரிகை எழுதுவது நீதிமன்ற விவகாரத்தில் தலையிடுவது போல் ஆகும் என்றும் கூறியிருக்கிறார்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள