http://www.worldservice.com/tamil

நடிகர் சிவாஜி மறைந்து 10 ஆண்டுகள்

தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் மறைந்து ஜூலை 21ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றன. சுமார் 300 படங்களில் நடித்த சிவாஜி கணேசன், தனது தனித்துவமான நடிப்பினால் பெரும்புகழ் பெற்றவர்.

தமிழ் வசனங்களை திறம்பட உச்சரிப்பதிலிருந்து, மானுட உணர்ச்சிகளின் பல்வேறு வடிவங்களை தனது முகபாவத்தின் மூலமும், உடல் அசைவுகளின் மூலமும் வெளிப்படுத்துவதில் பெயர்பெற்றவராகக் கருதப்பட்ட அவர், தமிழ்த் திரையுலகில் இன்றும் பெரிதும் மதிக்கப்படுவதாக திரை விமர்சகர்கள் கருதுகின்றனர்.

எழுத்தாளர் வாமனன் செவ்வி

அவரது நடிப்புப் பாணி, அவருக்கு பின்னால் வந்த நடிகர்கள் கமலஹாசன் மற்றும் ரஜனிகாந்த் போன்ற நடிகர்களால் பெரிதும் உள்வாங்கப்பட்டது என்று கூறும் தமிழ்த் திரையுலக வரலாறு குறித்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் புத்தங்கங்களை எழுதிவரும் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான வாமனன், கமல் மற்றும் ரஜனி ரசிகர்கள், அவர்களது நடிப்பை நுணுக்கமாகப் பார்ப்பதன் மூலம் சிவாஜி நடிப்பின் சாயலைப் பார்க்கலாம் என்று கூறுகிறார்.

நடிப்புக்கலைக்கு ஒரு அகராதியைப் போல அவர் விளங்குகிறார் என்றும் வாமனன் கூறுகிறார் .

ஆனால் காலத்தைக் கடந்து தற்போதைய தலைமுறைத் திரை ரசிகர்கள் சிவாஜி கணேசனின் நடிப்பை பெரிதும் விரும்புகிறார்களா என்பது கேள்விக்குறிதான் என்று வாமனன் ஒப்புக்கொள்கிறார்.

நடிப்பு என்பதைப் பற்றி ஆராய விரும்புவர்கள், “அந்த நாள்” போன்ற படங்களில் சிவாஜி கணேசனின் நடிப்பைப் பார்த்து படித்துக்கொள்ள பார்க்கலாம், ஆனால் பொதுவாக வேகமாக இயங்கிவரும் தற்போதைய உலகில் இளைஞர்கள் நேரடியாக சிவாஜி கணேசனின் படத்தை பார்ப்பதற்காகவென்று திரையரங்குகளுக்கு செல்வதில்லை என்றார்.

சிவாஜி போன்ற ஒரு கடந்த கால நடிகரை நிறைவாகப் புரிந்துகொள்ளும் அளவுக்கு தற்போதைய ரசிகர்களுக்கு நேரமில்லை என்கிறார் வாமனன்.