பெரு நாட்டில், நதியில் செத்து மிதக்கும் 10,000க்கும் மேற்பட்ட தவளைகள், விசாரணை தொடக்கம்
பெரு நாட்டின் தென் பகுதியில், இறந்த 10,000க்கும் மேற்பட்ட தவளைகளின் உடல்கள் ஒரு நதியில் மிதக்கின்றன. அந்தத் தவளைகளின் இறப்பு குறித்த விசாரணையை அந்நாட்டின் சுற்றுச்சூழல் முகமை நடத்தி வருகிறது.
ஒரு உள்ளூர் பிரச்சாரக் குழு, கோட்டா நதி மாசடைந்திருப்பதுதான் இந்த இறப்புகளுக்குக் காரணம் என்று கூறியுள்ளது.
அந்தக் குழு, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை கட்டுவது குறித்த கோரிக்கைகளை அரசு புறக்கணித்தது என்று கூறியது.
டிட்டிகாக்க நீர் தவளைகள் அருகிவரும் உயிரினம் ஆகும். இந்தத் தவளைகள், பெரு மற்றும் பொலிவியா ஆகிய நாடுகள் பகிர்ந்து கொள்ளும் பெரிய நன்னீர் ஏரி மற்றும் அதன் கிளைகளில் தான் வாழ்கின்றன.