சிறுவர், சிறுமிகளை வெவ்வேறு விதங்களில் பாதிக்கும் மன அழுத்தம் - ஆய்வு

மிகுந்த மன அழுத்தம் ஏற்படுத்தும் நிகழ்வுகள்,சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் மூளைகளை வெவ்வேறு வழிகளில் பாதிக்கும் என ஸ்டான்பஃர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

படத்தின் காப்புரிமை Thinkstock

குறிப்பாக, அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் மூளையில், இன்சுலா ( insula) என்று அழைக்கப்படும், உணர்ச்சிகள் மற்றும் பிறர் உணர்வுகளைப் புரிந்து கொண்டு பகிர்ந்து கொள்ளும் தன்மை ஆகியவைகளுடன் தொடர்புள்ள ஒரு பகுதி அளவில் சிறியதாக இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மூளையில், இன்சுலாவின் அளவு வழக்கத்தை விடப் பெரிய அளவில் இருந்தது.

இந்தத் தகவல், சிறுவர்களை விட, அதிர்ச்சிக்கு பிறகான மன அழுத்தம் ஏற்படுத்தும் சீர்கேடுகளால் (post-traumatic stress disorder) ஏன் சிறுமிகள் கூடுதலாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்குவதாக அமைந்திருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு வேதனைமிக்க அல்லது அச்சுறுத்தலான நிகழ்வு ஏற்பட்ட பிறகு, சிறுவர்கள், சிறுமிகளுக்கு இடையில், காணப்படும் அறிகுறிகள் வேறுபட்டதாக இருக்கும் என்றும் இதன் விளைவாக அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை வெவ்வேறு வழிகளில் இருக்க வேண்டும் என்று இந்த கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

ஸ்டான்பஃர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவ துறையைச் சேர்ந்த இந்த ஆராய்ச்சிக் குழு, அதிர்ச்சிக்கு பிறகான மன அழுத்தம் ஏற்படுத்தும் சீர்கேடுகளால் (PTSD) அவதிப்படும் சிறுமிகளுக்கு, வழக்கத்தை விட மிக விரைவாக அவர்களின் மூளையில் உள்ள இன்சுலா என்ற பகுதி முதுமை அடையும் பாதிப்பால் அவதிப்படலாம் என்று கூறியுள்ளது. இன்சுலா என்ற பகுதி தான் உணர்வுகள் மற்றும் வலிகளைப் புரிந்து உணர்த்தும் பகுதியாகும்.

இன்சுலா அல்லது இன்சுலார் கோர்டக்ஸ் ( insular cortex) என்று அறியப்படும் பகுதி மூளையில் அமைந்துள்ள மிக பல்வேறு வகைப்பட்ட மற்றும் சிக்கலான ஒரு பகுதியாகும். இது மூளையின் உள்ளே ஆழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது. அது பல இணைப்புப் பகுதிகளை கொண்டது.

படத்தின் காப்புரிமை Science Photo Library

உணர்வுகளைப் புரிய வைப்பது மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் இருந்து வரும் சமிக்ஞைகளைக் கண்டறிவதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யவதற்காக, ஒன்பது முதல் 17 வயதுள்ள 59 குழந்தைகளின் மூளைகளை ஸ்கேன் செய்தனர். இந்த ஆய்வறிக்கை மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறித்த ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்விற்கு, 14 சிறுமிகள் மற்றும் 16 சிறுவர்கள் அடங்கிய குழுவில் குறைந்தது ஒரு முறை மிகுந்த மன உளச்சல் அல்லது அதிர்ச்சி ஆகியவற்றை அனுபவித்தவர்கள் மற்றும் இரண்டாவது குழுவில் இது போன்ற பிரச்சனைகளைச் சந்திக்காத 15 சிறுமிகளும், 14 சிறுவர்களும் இருந்தனர்.

இரண்டாவது குழுவோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், முதல் குழுவைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட குழுவில் இருந்தவர்களின் மூளைகளில் இன்சுலா பகுதியின் முகப்புப் பகுதியின் அளவு மற்றும் கொள்ளளவு மாறி இருந்ததற்கான ஆதாரங்கள் இருந்தன. இரண்டாவது குழுவில் இருந்த பாதிக்கப்படாதவர்களின் இன்சுலா பகுதியின் அளவு வழக்கம் போலவே இருந்தது.

தீவிரமான அல்லது நீண்ட கால மன அழுத்தத்திற்கு ஆளானது காரணமாக அவர்களின் இன்சுலா பகுதி மாறியுள்ளது என்றும் இந்த மாற்றம் அதிர்ச்சிக்கு பிறகான மன அழுத்தம் ஏற்படுத்தும் சீர்கேடுகள் வளர்வதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைக் காண்பிக்கிறது என ஆராச்சியாளர்கள் தெரிவித்தனர்.

வெவ்வேறு எதிர்வினைகள்:

மன உளச்சல் ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு, சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மத்தியில் , உடல் ரீதியாகவும், உணர்வுகள் ரீதியாகவும் ஏற்படும் வித்தியாசமான வெளிப்பாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது முக்கியம் என முன்னணி ஆய்வு ஆசிரியர் மேகன் க்ளாபுண்டி கூறியுள்ளார்.

''அதிர்ச்சிக்குள்ளான இள வயதினருக்குச் சிகிச்சை அளிப்போர் பாலின வேறுபாடுகளைக் கணக்கில் கொள்ளவது முக்கியம்,'' என்றார்.

சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் வெவ்வேறு விதத்தில் அதிர்ச்சிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. அவர்களுக்கு வெவ்வேறு சிகிச்சைகள் அளிக்கபட்டால், அவர்கள் பயன்பெற வாய்ப்புள்ளது என எங்களது கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன,,'' எனஅவர் கூறினார்.

அவர் மேலும், "சிறுமிகள் வழக்கத்தைவிட மிக முன்னதாகவே பருவமடைவதில், இந்த அதிக மன அழுத்தம் பங்காற்றக் கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன,'' என்றார்.

மூளையில் உள்ள இன்சுலா பகுதியோடு தொடர்புடைய மற்ற பகுதிகளை ஆய்வு செய்து வருவதாகவும், அவற்றில் இதை ஒத்த மாற்றங்களைக் கண்டுபிடிக்க முடியுமா என்று முயன்று வருவதாகவும் மருத்துவர் களாபுண்டி தெரிவித்தார்.

அதிர்ச்சிக்கு பிறகான மனஉளச்சல் சீர்கேடு என்றால் என்ன ?

அதிர்ச்சிக்கு பிறகான மனஉளச்சல் சீர்கேடு என்பது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில் ஈடுபட்டதால் ஏற்படும் உளவியல் விளைவுகளை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. பெரிய கார் விபத்தாக இருக்கலாம், ஒரு இயற்கை பேரழிவு, துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அல்லது கொடூரமான குற்றம் போன்ற நிகழ்வுகளாக இருக்கலாம்.

பல இளவயதினர் மிகவும் கவலையேற்படுத்தக்கூடிய நிகழ்வுகளில் இருந்து அதிர்ச்சிக்கு பிறகான மனஉளைச்சல் சீர்கேட்டினை அனுபவிக்காமல் கூட மீள்பவர்கள் உள்ளனர். ஆனால் சிலர் இந்த மன உளைச்சல் சீர்கேட்டைப் பெறுகின்றனர்.

அறிகுறிகளில் கீழ்வருவன அடங்கும்:

நடந்த சம்பவங்களை எண்ணிப்பார்ப்பது மற்றும் சிக்கலான கனவுகள்

மன உளச்சலில் இருந்து விடுவிக்கும் நிகழ்வுகளைத் தவிர்ப்பது

கவலை, ஓய்வெடுக்க முடியாமல் இருப்பது

உறக்கம் வருவதில் பிரச்சனை

உணவு எடுத்துக் கொள்வதில் பிரச்சனை

வேதனைமிக்க நிகழ்வுகள் ஏற்பட்ட சில வாரங்களுக்கு இது போன்ற அறிகுறிகள் இருப்பது வழக்கமானது தான். ஆனால் ஒரு மாதத்தைக் கடந்தும் அவை தொடர்ந்தால், உங்களது மருத்துவரை நீங்கள் சந்திப்பது அவசியம். அவர் உங்களது எண்ணங்கள் மற்றும் நடத்தை ஆகியவற்றை சரிப்படுத்த சில சிகிச்சை அளிப்பார் என இளம் வயதினருக்கான தொண்டு அமைப்பான, ‘ யங் மைண்ட்ஸ்’ என்ற அமைப்பு கூறுகின்றது.