ஏழு புதிய உலகங்கள் கண்டுபிடிப்பு: மனிதர் வாழ முடியுமா?

பூமிக்கு வெளியே இருக்கக்கூடிய உயிர்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய முன் நகர்வை தாம் செய்திருப்பதாக வானியல் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஏழு புதிய கோள்களை சர்வதேச விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தண்ணீர், திரவ வடிவத்தில் இருப்பதற்கு ஏதுவான சுற்றுச்சூழல் அவற்றில் நிலவுவதால் அங்கே உயிர்கள் வாழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேரண்டம் குறித்த நமது புரிதலை மாற்றியமைக்கவல்ல கண்டுபிடிப்பு இதுவென வானியலாளர்கள் கூறுகிறார்கள்.

ஏராளமான தொலைநோக்கிகள் வானின் ஒரு குறிப்பிட்ட இலக்கை கண்காணித்தன.

குறிப்பிட்ட்தொரு நட்சத்திரத்தின் முன் கோள்கள் சுற்றிவரும்போது ஏன் சில சமயங்களில் மட்டும் தொடர்ந்து ஒளி மங்குகிறது என்பதை ஆராய்ந்தபோது இந்த புதிய உலகங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

விஞ்ஞானிகள் இன்னமும் இவற்றை பார்க்கவில்லை. ஆனால் அவை அங்கே இருப்பது அவர்களுக்குத் தெரியும்.

நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே இருக்கும் புதிய உலகங்கள் குறித்து கடந்த 25 ஆண்டுகளாக செய்யப்பட்ட கண்டுபிடிப்புகளின் தொடர்ச்சி இந்த ஏழு புதிய உலகங்கள்.

இதுவரை மூவாயிரத்துக்கும் அதிகமான தொலைதூர புது உலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஒரே நேரத்தில் ஏழு புது உலகங்கள் கண்டிபிடிக்கப்பட்டிருப்பது தற்போதைய புதுமை. இவற்றில் திரவ வடிவில் தண்ணீர் இருக்கவல்ல சுற்றுச்சூழல் நிலவுவது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதில் மூன்றில் உயிர்வாழ்வதற்கேற்ற சூழல் நிலவுவதால் அங்கே உயிர்கள் இருக்கலாம் என்னும் ஆச்சரியமூட்டும் சாத்தியம் அதிகரித்துள்ளது.

ஆனால் அங்கே நம்மால் அவ்வளவு எளிதில் செல்ல முடியாது. 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் அவை இருக்கின்றன. ஏழு லட்சம் ஆண்டுகள் பயணித்தால் மட்டுமே அங்கு செல்லமுடியும்.

இந்த உலகங்கள் குறித்து தெரிந்துகொள்வதற்கு ஏராளமான செய்திகள் உள்ளன. ஓவியர்களின் கற்பனையில் காட்டப்படுவதைப்போல் அங்கே உயிர்கள் வாழ ஏதுவான சூழல் நிலவுகிறதா என்பது அதில் முதன்மையானது.

அதைக்கண்டறிய மிகப்பெரிய முயற்சி மேற்கொள்ளப்படும் என்கிறார்கள் வானியலாளர்கள்.

விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கும் புதிய மேம்பட்ட பிரம்மாண்ட தொலைநோக்கிகள், இந்த தொலைதூர உலகங்களை நெருங்கிப்பார்க்க உதவக்கூடும் என்பது நம்பிக்கை.

உதாரணமாக அங்கே பெருங்கடல்கள் இருக்கின்றனவா? உயிர்கள் இருப்பதற்கான சான்றுகள் தெரிகிறதா போன்ற கேள்விகளுக்கான விடை தேடுவதே வானியலாளர்களின் முன்னிருக்கும் முக்கிய சவால்கள்.