சாட்-நேவ் வழிகாட்டி மூளையை பாதிக்கும்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மூளையை பாதிக்கும் சாட்-நாவ் வழிகாட்டி?

  • 4 ஏப்ரல் 2017

Sat Nav எனப்படும் செயற்கைக்கோள் வழிகாட்டியை பயன்படுத்தும்போது மனித மூளையின் குறிப்பிட்ட செயற்பாடு நின்றுபோவதாக லண்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அது மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கணிசமான வாகன ஓட்டுநர்களுக்கும் பொதுமக்களுக்கும் சாட்-நாவ் எனப்படும் செயற்கைக்கோள் திசைகாட்டியின் உதவியில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் செல்ல முடியாது.

இப்படி சாட்-நாவ் வழிகாட்டலை கேட்டு வாகனம் ஓட்டும் பழக்கம் மூளையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக University College London நரம்பியல் நிபுணர்களின் ஆய்வு தெரிவித்திருக்கிறது.

உலகிலேயே மிகவும் சிக்கலான, குறுகலான சாலைக்கட்டமைப்பைக் கொண்டிருக்கும் லண்டன் சோஹோ பகுதியின் வரைபடத்தைக்கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் பங்கேற்பாளர்களிடம் அந்த பகுதியில் வழிகண்டுபிடிக்கும்படி கூறப்பட்டு அவர்களின் மூளைச்செயற்பாட்டை எம்ஆர்ஐ ஸ்கேன்னர் மூலம் விஞ்ஞானிகள் கண்காணித்தனர்.

அந்த ஆய்வில், மனித மூளைச்செயற்பாட்டை கூர்ந்து கண்காணித்ததாக பிபிசியிடம் தெரிவித்தார் யுனிவர்சிடி காலேஜ் லண்டனின் நரம்பியல்துறை மருத்துவர் ஹூகோ ஸ்பையர்ஸ். "ஆய்வின் பங்கேற்பாளர்கள் சாலைகளின் வழியைத்தேடும்போது அல்லது நினைவுபடுத்திக்கொள்ளும்போது அவர்கள் மூளையின் எந்த பகுதி தன்னிச்சையாக செயற்படுகிறது என்பதை கூர்ந்து கவனித்தோம்", என்றார் அவர்.

அதே நபர்கள் சாட் சாட்-நாவைப் பயன்படுத்தி வழிதேடும்போது அவர்கள் மூளையின் திசையறியும் பகுதியான ஹிப்போகாம்பஸ் தன் செயற்பாட்டை நிறுத்திவிடுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

"நினைவாற்றல் மூலம் திசையறிய முயலும்போது வழக்கமாக பயன்படும் மூளையின் குறிப்பிட்ட பகுதி அப்போது செயற்படவில்லை. அதாவது நீங்கள் சாட்-நாவை பயன்படுத்தும்போது உங்கள் மூளையின் குறிப்பிட்ட இந்த பகுதியின் செயற்பாட்டை நிறுத்திவிடுகிறீர்கள்", என்றார் மருத்துவர் ஹூகோ.

லண்டன் வாடகைக்கார் ஓட்டுநர்கள் பல்லாயிரக்கணக்கான சாலைகள், முக்கிய இடங்களை நினைவில் வைத்திருக்கவேண்டும் என்பதால் அவர்கள் மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதி மற்ற மனிதர்களைவிட அதிகம் வளர்ச்சியுற்றிருப்பதாக முந்தைய ஆய்வு கண்டறிந்திருந்தது. அந்த ஆய்வின் முடிவை தற்போதைய ஆய்வு உறுதி செய்திருப்பதோடு, அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

மனித மூளை என்பது நீரை உறிஞ்சும் ஸ்பாஞ்ச் போன்று வெகு எளிதாக தகவல்களை உள்வாங்கி தேக்கிவைக்கவல்லது என்கிறார் வெஸ்ட் லண்டன் நாலெட்ஜ் ஸ்கூலைச்சேர்ந்த மார்க் பக்ஸ்டர்.

அப்படி தேக்கிவைத்த தகவல்களைப் பயன்படுத்தி எந்த சாலையில் செல்ல வேண்டும், எதில் செல்லமுடியாது, எதில் சென்றால் நேரம் குறைவு என்பதையெல்லாம் மூளை நமக்கு வழிகாட்டும்.

"நாள்பட நாள்பட மனித மூளையின் இந்த தகவல் களஞ்சியம் பெரிதாகிக்கொண்டே போகும். லண்டன் வாடகைக்கார் ஓட்டுநர்கள் இருபத்தி ஆறாயிரம் சாலைகளையும் அதே அளவான முக்கிய இடங்ளையும் நினைவில் வைத்திருப்பது மட்டுமல்ல மீண்டும் அதை நினைவின் அடுக்கிலிருந்து மீட்டு எடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல", என்கிறார் வெஸ்ட் லண்டன் நாலெட்ஜ் ஸ்கூல் பயிற்றுவிப்பாளர் மார்க் பக்ஸ்டர்.

அடுத்ததாக இந்த ஆய்வின் மருத்துவ தாக்கங்கள் என்ன என்பதை விஞ்ஞானிகள் ஆராய உள்ளனர். உதாரணமாக மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதியின் பயன்பாடு குறைவது அல்சைமர்ஸ், டிமென்ஷியா போன்ற மூளை நோய்கள் உருவாக காரணமாக இருக்கிறதா என இவர்கள் ஆராயவிருக்கிறார்கள்.

ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். செயற்கைக்கோள் உதவியோடு செயற்படும் சாட்-நாவ் திசைகாட்டியை நீங்கள் செயற்படவைத்தால் உங்கள் மூளையின் முக்கியமான பகுதி செயலை நிறுத்திவிடுகிறது என்பதை முதல்முறையாக விஞ்ஞானிகள் ஆதாரத்தோடு நிரூபித்துள்ளனர்.