`தொடுதிரை ஸ்மார்ட்ஃபோனில் விளையாடும் குழந்தைகளின் தூக்கம் குறையும்'

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்களில் விளையாடும் கைக்குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களில் விளையாடாத குழந்தைகளைவிட குறைவான தூக்கத்தைதான் பெறுவார்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடுதிரை

பட மூலாதாரம், AFP

குழந்தைகள் ஒரு நாளில் ஒரு மணிநேரம் தொடுதிரை கொண்ட டிஜிட்டல் சாதனங்களில் விளையாடினால் அவர்கள் சாதாரணமாக தூங்குவதைவிட 15 நிமிடங்கள் குறைவாக தூங்குவார்கள் என்று சயின்டிபிக் ரிபோர்ட்ஸ் என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியான ஆய்வு பரிந்துரை செய்கிறது.

ஆனால், தொடுதிரையை பயன்படுத்தி விளையாடும்போது குழந்தைகள் மிக வேகமாக நடப்பது,ஓடுவது மற்றும் கை, கால்களை கொண்டு செய்யும் செயல்களை எளிதாக வளர்த்துக்கொள்வார்கள் என்று கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆய்வு தற்போதைய சமயத்திற்கு தேவையான ஒன்றாக பார்க்கப்பட்டாலும், இதையே நம்பியிருக்ககூடாது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடுதிரை பயன்பாடு என்பது எல்லாவீடுகளிலும் பெருமளவு அதிகரித்துள்ளது. அதே சமயம், அதை பயன்படுத்தும்குழந்தைகளின் வளர்ச்சி தொடர்பான புரிதலில் பற்றாக்குறை உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

மூன்று வயதுக்கு குறைவான வயதுள்ள குழந்தைகளை கொண்ட 715 பெற்றோர்களிடம் லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பிர்க்பெக் ஆராய்ச்சி பிரிவு ஆய்வு செய்தது.

குழந்தை எவ்வளவு நேரம் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் சாதனத்தில் விளையாடுகிறது மற்றும் குழந்தையின் தூங்கும் பாங்கு போன்ற விவரங்கள் கேட்கப்பட்டன.

75 சதம் குழந்தைகள் தொடுதிரையை தினமும் பயன்படுத்துகின்றனர் என்றும், அதில் 51 சதம்குழந்தைகள் ஆறு மாதம் முதல் 11 மாத குழந்தைகள் என்றும் 92 சதவீத குழந்தைகள் 25 முதல் 36 மாதங்கள் ஆன குழந்தைகள் என்றும் தெரியவந்துள்ளது.

தொடுதிரையை பயன்படுத்தி விளையாடும் குழந்தைகள் இரவு நேரத்தில் குறைவாகவும் பகல் நேரத்தில் அதிகமாகவும் தூங்குவதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஒரு மணிநேர தொடுதிரை ஸ்மார்டஃபோன் பயன்பாட்டிற்கும் 15 நிமிடங்கள் குறைவாக அவர்கள் தூங்குகிறார்கள் என்று கூறப்படுகிறது.

ஒரு நாளில், குழந்தை 10 முதல் 12 மணிநேரம் தூங்குவதால், 15 நிமிடங்கள் என்பது பெரிய அளவு இல்லைதான். ஆனாலும் குழந்தை வளரும்போது அதன் வளர்ச்சிக்கு தூக்கம் அவசியம். ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்,'' என பிபிசியிடம் பேசிய ஆராய்ச்சியாளர்களின் ஒருவரான மருத்துவர் டிம் ஸ்மித் தெரிவித்தார்.

இந்த ஆய்வு , உறுதியானது அல்ல என்றும் தொடுதிரை பயன்பாட்டிற்கும், குழந்தைகளின் தூக்கம் குறைவதற்கும் உள்ள தொடர்பை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது என்றும் கூறுகிறார் மருத்துவர் ஸ்மித்.

பட மூலாதாரம், Getty Images

அதேசமயம், தொடுதிரையை பயன்படுத்தும் குழந்தைகள் கை,கால்,உடல் அசைவுகளை தொடுதிரைபயன்பாடு அதிகரிப்பதாக அவர் தெரிவிக்கின்றனர்.

அப்படியானால், குழந்தைகள் விளையாட தொடுதிரை சாதனங்களில் கொடுக்கப்படவேண்டுமா?

தற்போது இது மிக குழப்பமான ஒன்றாக உள்ளது. இது தொடர்பான அறிவியல் ஆய்வு ஆரம்ப கட்டத்தில் உள்ளது. உண்மையில் தொழில்நுட்பத்தில் நாம் தற்போதும் பின்தங்கி உள்ளதால், உடனடியாக தெளிவான பிரகடனம் செய்யமுடியாது, என்கிறார் மருத்துவர் ஸ்மித்.

தொலைக்காட்சி முன் எவ்வளவு நேரம் குழந்தை செலவு செய்வதை அனுமதிக்கின்றோமோ அதே நேரத்தை அளவிட்டுக் கொள்வது சிறந்தது என்கிறார்.

இதன்மூலம் சாதனங்களை பயன்படுத்துவதில் மொத்தம் எவ்வளவு நேரம் குழந்தைகள் செலவு செய்யலாம் என்பது வரையறுக்கப்படுகிறது. வயதுக்கு ஏற்றவற்றை அவர்கள் பயன்படுத்துகிறார்களா மற்றும் தூங்கும் நேரத்தில் வெள்ளிச்சமான திரையை பயன்படுத்துவதை குறைப்பது போன்றவற்றை முறைப்படுத்தலாம் என்கிறார்.

குழந்தைகளின் தூக்கம் மற்றும் தொடுதிரை பயன்பாடு இரண்டிற்கும் இடைப்பட்ட இணைப்பு தொடர்பாக, தேவையான சமயத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டாலும், இந்த ஆய்வு ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது, என்கிறார் கோவென்ட்ரி பல்கலைக்கழகத்தில் அறிவாற்றல் வளர்ச்சி ஆராய்ச்சியாளர் மருத்துவர் ஆனா ஜாய்ஸ்.

பட மூலாதாரம், Getty Images

குழந்தைகள் தொடுதிரையை பயன்படுத்துவதை பெற்றோர்கள் முறைப்படுத்துவது மற்றும் தூங்கும் நேரத்தில் தேவைப்பட்டால் மற்ற சாதனங்களை நீல நிற வெளிச்சத்தில் பயன்படுத்துவது போன்ற இதற்கு முந்தைய ஆய்வுகளில் வெளிச்சத்திற்கு வந்த குறிப்புக்களை பெற்றோர் கருத்தில் கொள்வது அவசியம் என்கிறார் அவர்.

தொடுதிரை பயன்பாடு தூக்கத்தை பாதிக்கும் என்பது குறித்து நாம் இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ளாதவரை அதை முழுமையாக தடுக்கக்கூடாது,'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது எனக்கு இளம் குழந்தைகள் இருந்தால், இந்த ஆய்வு முடிவுகளை அடுத்து நிச்சயம் தூக்கத்தின் அளவு குறைந்ததாக எண்ணமாட்டேன், ''என்கிறார் தி ஓபன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கெவின் மெக்கான்வெ.

''இந்த ஆய்வில் உள்ள குழந்தைகள் தினமும் தொடுதிரையை சுமார் 25 முறை பயன்படுத்தினால், சுமார் ஆறு நிமிடங்கள் குறைவாக தூங்குவார்கள்,'' என்கிறார் அவர்.

இதுவும் சுவாரஸ்யமாக இருக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்