பிளாஸ்டிக் சாலைகள்: இங்கிலாந்துக்கு வழிகாட்டிய இந்தியா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிளாஸ்டிக் சாலைகள்: இங்கிலாந்துக்கு வழிகாட்டிய இந்தியா

  • 25 ஏப்ரல் 2017

இந்தியாவில் சாலைகளின் பள்ளங்களை நிரப்ப பழைய பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதைப்பார்த்த பிரிட்டிஷ் தொழிலதிபர் அதை ஒரு தொழிலாக செய்து இங்கிலாந்தில் உள்ளூராட்சிகளுக்கு பிளாஸ்டிக் சாலைகளை போட்டு வருகிறார்.

இந்த பிளாஸ்டிக் சாலைகள் குறைவான செலவில் வலுவானவையாக இருப்பதோடு, ஏராளமாக குவியும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முடியாமல் திணறும் உள்ளூராட்சிகளின் பிரச்சனைக்கு தீர்வாக திகழ்வதாகவும் தெரிவித்தார்.

உலகில் மொத்தம் 40 மில்லியன் கிமீ சாலைகள் உள்ளன. அவற்றை உருவாக்க பல மில்லியன் பெட்ரோலிய கச்சா எண்ணெய் பயன்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் பொறியாளர் மெக்கார்ட்னியின் நிறுவனம் வீணாகும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி சாலைகள் அமைக்கிறது.

தனது இந்த முயற்சிக்கு இந்தியாவே வழிகாட்டியதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

வீணாகும் பிளாஸ்டிக்கை சாலைப்பள்ளங்களில் போட்டு எரியூட்டி சாலைப்பள்ளங்களை இந்தியர்கள் நிரப்புவதை இவர் நேரில் பார்த்தார். அதை தொழிற்சாலைகள் மூலம் செய்யும் வழியை இவர் உருவாக்கினார்.

பொதுவாக சாலைகள் 90% கல், ஜெல்லி, மணலும் அவற்றை இணைக்கும் 10% தாரும் இணைந்து போடப்படுகின்றன.

அந்த தார் கச்சா எண்ணெயிலிருந்து பெறப்படுகிறது. அதற்கு பதிலாக மிகச்சிறிய பிளாஸ்டிக் சில்லுகளை பயன்படுத்த முடியும் என்பதை இவர் செய்துகாட்டியிருக்கிறார்.

வீடுகள், தொழிற்சாலைகளில் வீணாகும் பிளாஸ்டிக் பொருட்களை சின்னஞ்சிறு சில்லுகளாக மாற்றி இப்படி பயன்படுத்தலாம்.

இந்த பிளாஸ்டிக் குப்பைகள் எல்லாமே வீணாக மண்ணில் கொட்டப்படுபவை. அதற்கு பதில் அவை இப்படி மறுசுழற்சியாக்கப்படுவது நல்லது என்கிறார் இவர்.

இங்கிலாந்திலுள்ள இரண்டு உள்ளூராட்சிகள் பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்தி சாலைகள் போட ஆரம்பித்துள்ளன.

மெக்கார்ட்னி நிறுவனம் சிறியது மற்றும் புதியது என்றாலும் தான்போடும் சாலைகள் மலிவானவை, வலுவானவை, சுற்றுச்சூழலுக்கும் நன்மை செய்யக்கூடியவை என்கிறார் அவர்.