புதிய மருந்துகளால் ஹெச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுள் அதிகரிப்பு - ஆய்வு தகவல்

ஹெச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால், அவர்களுக்கு தரப்பட்ட அண்மைய மருந்துகளால் அவர்கள் கிட்டத்தட்ட மற்றவர்களை போல சாதாரண ஆயுட்காலத்துடன் வாழ முடிவதாக தி லான்செட் என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை JIMMY ISAACS
Image caption ஹெச்ஐவி சிகிச்சைக்கு தரப்படும் புதிய மருந்தால் நீண்ட நாட்கள் வாழ முடியும் என்ற நம்பிக்கையுடன் ஜிம்மி ஐசக்ஸ்

கடந்த 2010-ஆம் ஆண்டில், ரெட்ரோ வைரல் எதிர்ப்பு சிகிச்சையை ஆரம்பித்த ஹெச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்ட 20 வயதினர், 1996-ஆம் ஆண்டில் இந்த சிகிச்சையை ஆரம்பித்தவர்களை விட 10 ஆண்டுகள் கூடுதலாக வாழ முடிகிறது என்று திட்டமிடப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

நீண்ட மற்றும் ஆரோக்யமான வாழ்க்கை வாழ்வதற்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையை ஆரம்பிப்பது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எய்ட்ஸ் - உண்மையை உலகறியச் செய்த தமிழ் மருத்துவ மாணவி

தங்களுக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பது தெரியாமலே ஏரளாமான மக்கள் இன்னமும் வாழ்ந்து வருவதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சிறப்பான பாதுகாப்பு செயல்பாடு

ஹெச்ஐவி தொற்று சிகிச்சையில் ஏற்பட்டுள்ள அசாதாரண வெற்றிக்கு புதிய மருந்துகளே காரணம் என்று குறிப்பிட்டுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் , இந்த புதிய மருந்துகளால் குறைந்த அளவே பக்கவிளைவுகள் ஏற்படுவதாகவும், உடலில் மீண்டும் ஹெச்ஐவி தொற்று தாக்குதல் ஏற்படாமல் தடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சிறப்பான பாதுகாப்பு செயல்பாடு கொண்ட இந்த புதிய மருந்துகளுக்கு எதிராக ஹெச்ஐவி வைரஸ் முன்னேறுவது மிகவும் கடினமாகும்.

படத்தின் காப்புரிமை SPL
Image caption புதிய மருந்துகளுக்கு எதிராக ஹெச்ஐவி வைரஸ் முன்னேறுவது மிகவும் கடினமாகும்.

ஹெச்ஐவி தொற்று வைரஸ் உடலில் முன்னேறுவதை தடுக்க மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை உள்ளடக்கி அளிக்கப்படுவது ரெட்ரோ வைரல் எதிர்ப்பு சிகிச்சையாகும்.

கடந்த 40 ஆண்டுகளில் பொது சுகாதாரத்துறையில் நிகழ்ந்த வெற்றி கதைகளில் ஒன்றாக இது அழைக்கப்படுகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், தனது துணையால் தனக்கு ஹெச்ஐவி தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதை 28 வயதாகும் ஜிம்மி ஐசக்ஸ் கண்டறிந்தார்.

ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு எய்ட்ஸ் உருவாகவில்லை: விஞ்​ஞா​னி​கள் கண்டுபிடிப்பு

கலப்புப் பாலின குழந்தைகளை காப்பாற்றிய செவிலித்தாய்

தினமும் ஒரு முறை மாலை ஆறு மணிக்கு மூன்று மருத்துக்களை உட்கொள்ளும் இவர், தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் இதனை தொடர வேண்டும்.

இது குறித்து அவர் கூறுகையில், ''எனது உடல்நிலை தற்போது மிகவும் நன்றாக உள்ளது. நான் ஆரோக்கியமாக முறையில் உணவு உண்கிறேன்; பானங்கள் அருந்துகிறேன்'' என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை AFP

மேலும், அவர் கூறுகையில், ''இது எனது பணியையும், சமூக வாழ்வையும் பாதிக்கவில்லை. 1990-களில் தரப்பட்ட மருந்துகள் ஏற்படுத்திய விளைவுகள் குறித்து பல மோசமான கதைகளை நான் அறிந்துள்ளேன். ஆனால், இது தொடர்பாக நான் சில ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பிறகு தற்போது இந்த மருந்துகள் முற்றிலுமாக மாறியுள்ளதை உணர்ந்தேன்'' என்று தெரிவித்தார்.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட 88,500 பேரிடம் நடத்தப்பட்ட 18 ஆய்வுகளை இந்த ஆராய்ச்சியாளர்கள் உற்று நோக்கினர்.

ஹெச்ஐவி பரவல் தடுப்புக்கு மத தலைவர்களின் முக்கிய பங்கு

1996 முதல் 2007-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தங்களின் ஹெச்ஐவி தொற்று சிசிச்சையை துவக்கியவர்களை விட, 2008 முதல் 2010-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தங்களின் ஹெச்ஐவி தொற்று சிசிச்சையை துவக்கியவர்களில் குறைவானவர்களே இறந்துள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மருத்துவ சாதனை

ராயல் கல்லூரியின் பொது பயிற்சியாளர்களின் தலைமை இயக்குநரான பேராசிரியர் ஹெலன் ஸ்டோக்ஸ்-லாம்பார்ட் கூறுகையில், ''ஒரு காலத்தில் ஹெச்ஐவி தொற்று குறித்து நிலவி வந்த கொடூரமான முன்கணிப்பு தற்போது சமாளிக்கும் வகையில்தான் உள்ளது. இது ஒரு வகையில் அசாத்திய மருத்துவ சாதனையாகும்'' என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Science Photo Library

''இறுதியாக ஹெச்ஐவி தொற்று வைரஸ் குறித்து நிலவி வரும் எஞ்சிய களங்கத்தை அகற்றுவது தொடர்பாக எதிர்காலத்தில் இந்த ஆய்வின் முடிவுகள் பெரும் பங்காற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். ஹெச்ஐவி தொற்று பாதிப்பு உள்ள நோயாளிகள் சிரமங்கள் இன்றி வேலைவாய்ப்பு பெறவும், மருத்துவ சான்றிதழ்கள் தேவைப்படும் நாடுகளில் அவற்றை எளிதில் பெறவும், நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும் இந்த ஆய்வின் முடிவுகள் உறுதியளிக்கும்'' என்று மேலும் தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் இன்னமும் கண்டறியப்படாத ஹெச்ஐவி தொற்றுள்ள நபர்களின் சதவீதம் தொடர்ந்து வீழ்ந்து கொண்டே இருக்கிறது.

ஆனால், ஹெச்ஐவி தொற்று வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களில் 8 பேரில் ஒருவருக்கு ஹெச்ஐவி தொற்று வைரஸ் இருப்பது இன்னமும் கண்டறியப்படாமலே உள்ளது என்று கருதப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்