பேஸ்புக் உங்கள் பதிவுகளை தணிக்கை செய்கிறதா?

  • 23 மே 2017

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அந்த சமூக ஊடகத்தில் எந்த விஷயங்களைப் பார்க்கின்றனர் என்பதை அந்நிறுவனம் எப்படி தணிக்கை செய்கிறது என்பது அந்நிறுவனத்தின் ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன என்று பிரிட்டனிலிருந்து வெளிவரும் `தெ கார்டியன்` பத்திரிகை கூறுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஃபேஸ்புக்கில் போடப்படும் பதிவுகள் மிகவும் வன்முறையான தகவல்களா, பாலியல்ரீதியானவையா, இன வெறியைத் தூண்டுபவையா, வெறுப்பை உமிழ்பவையா அல்லது பயங்கரவாதத்தை ஆதரிக்குமாறு இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்க ஃபேஸ்புக் நிறுவனம் பயன்படுத்து அளவுகோல்களை இந்த கையேடு காட்டுவதாக இந்தப் பத்திரிகை கூறுகிறது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் நெறியாளர்களுக்கு மிக அதிக வேலைப் பளு இருப்பதால், இந்த பதிவுகளைப் பற்றி முடிவு செய்ய ஒரு சில விநாடிகளே அவர்களுக்குக் கிடைக்கின்றன என்று கார்டியன் பத்திரிகை கூறுகிறது.

பேஸ்புக் தனது ஊழியர்களுக்கு வழிகாட்ட தற்போது பயன்படுத்தும் ஆவணங்களை ஒத்தே இந்த கார்டியன் பத்திரிகை பார்த்த ஆவணங்களும் இருப்பதாக பிபிசிக்கு தெரியவருகிறது.

சமூக ஊடக பெரு நிறுவனங்கள் இது போன்ற நச்சுத்தன்மையுடைய பதிவுகளை சமாளிக்கத் தவறுகின்றன என்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதற்கு பின்னர் இந்த ஆவணங்கள் கசிந்துள்ளன.

கவனமான கண்காணிப்பு

பேஸ்புக் தளத்தில் என்ன தகவல்களை பதியலாம், எதை பதியக்கூடாது என்பதை, பேஸ்புக் நிறுவனம் தனது நெறியாளர்களுக்கு சொல்லித்தருவதற்காகப் பயன்படுத்தும் நூற்றுக்கும் மேற்பட்ட கையேடுகள் தன்னிடம் உள்ளதாக கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

வெறுப்பு பேச்சு, பழிவாங்கு வகையிலான ஆபாசம், தானாக காயப்படுத்திக்கொள்வது, தற்கொலை, நரமாமிசம் மற்றும் வன்முறை அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட முக்கியமான பல்வேறு விஷயங்கள் தொடர்பான விவரங்கள் அந்த கையேடுகள் கொண்டுள்ளன.

பதிவுகளை மதிப்பிடுவதற்கு பேஸ்புக் நிறுவனம் பயன்படுத்தும் கொள்கைகள் `நிலையானவையாக` இல்லை என்றும், `விசித்திரமாக` இருப்பதாகவும், கார்டியன் பத்திரிகையால் பேட்டி காணப்பட்ட பேஸ்புக் நெறியாளர்கள் கூறினர்.

பாலியல் விவகாரங்கள் குறித்த பதிவுகள் அனுமதிக்கப்பட முடியுமா அல்லது கூடாதா என்பதை முடிவு செய்ய இருக்கும் வழிமுறை மிகவும் குழப்பமான வழிமுறைகளில் ஒன்று என்று அவர்கள் கூறினர்.

டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றும் உரிமைகளுக்கான ` தெ ஓப்பன் ரைட்ஸ் குரூப்` என்ற அமைப்பு, இந்த அறிக்கை பேஸ்புக் அதன் சுமார் இரண்டு பில்லியன் பயன்பாட்டாளர்கள் மீது எந்த அளவுக்கு செல்வாக்கை செலுத்த முடியும் என்பதைக் காட்டுவதாக்க் கூறியது.

எது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது, எது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது என்பதைப் பற்றிய பேஸ்புக்கின் முடிவுகள் கருத்து சுதந்திரத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்தக் குழு கூறுகிறது.

'' இந்த முடிவுகளை எடுப்பது சிக்கலான மற்றும் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது என்பதை இந்த ஆவண கசிவு வெளிப்படுத்தியுள்ளது,'' என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

''பேஸ்புக் ஒருவேளை சரியான முடிவுகளை எடுக்கமுடியாமல் இருக்கலாம். ஆனால் இது விவகாரம் தொடர்பான வெளிப்படைதன்மை தேவை,'' என்றும் கூறப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

''கருத்து சுதந்திரத்துக்கு உதவும் அதே வேளையில் பேஸ்புக் தளத்தை மேலும் பாதுகாப்பானதாக உருவாக்க நாங்கள் கடுமையாக உழைக்கின்றோம்,'' என தனது அறிக்கையில், பேஸ்புக் நிறுவனத்தின் உலகளாவிய கொள்கை மேலாண்மை பிரிவின் தலைவர் மோனிகா பிகெர்ட் தெரிவித்துள்ளார்.

''இந்த முடிவுகளை எடுப்பதில் ஆழமாக சிந்தித்து, பல சமயங்களில் கடினமான கேள்விகளுக்கு சரியான தேர்வை செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் தீவிரமாக உள்ளோம்,'' என்றும் அவர் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய பதிவுகளை மனித மதிப்பீட்டாளர்கள் பார்ப்பார்கள், அதே சமயம் செயற்கை அறிவு வழிமுறைகளை கொண்டு படங்கள் மற்றும் பிற கருத்துக்களை பதிவிடும் முன்பு சரிபார்த்து வெளியிடுவது என்பதையும் பேஸ்புக் செய்கிறது.

அதே போல ஏதாவது பதிவுகள் அல்லது பக்கங்கள் மோசமான கருத்துக்களை, விவரங்களைக் கொண்டிருப்பதாக ஒரு பயன்பாட்டாளர் கருதினால், அதை அவர் தெரிவிப்பதையும் பேஸ்புக் ஊக்குவிக்கிறது.

வெறுக்கத்தக்க பேச்சு, சட்டவிரோத மற்றும் ஆபத்தான உள்ளடக்கம் கொண்ட பதிவுகள் பரவுவதை பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக நிறுவனங்களால் சமாளிக்க முடியவில்லை என்பது 'வெட்கப்படவேண்டிய'' ஒன்று என மே மாதத்தின் தொடக்கத்தில் ஐக்கிய ராஜ்யத்தின் செல்வாக்கு மிக்க நாடாளுமன்ற உள்துறை அமைச்சக தேர்வு குழு கடுமையாக விமர்சித்தது.

படத்தின் காப்புரிமை AP

''சமூக வலைத்தளங்களில் இருக்கும் உள்ளடக்கங்களை கண்காணிக்க அந்த வலைத்தளங்கள் பணம் செலுத்த வைப்பதை அரசு பரிசீலிக்கலாம்,'' என்று அந்தக் குழு கூறியது.

இதனை அடுத்து உடனடியாக தனது தளத்தில் பதிவாகும் தகவல்களை சரிபார்க்க 3,000த்திற்கும் மேற்பட்டவர்களை பணியில் அமர்த்த உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்தது.

''பேஸ்புக் எவ்வாறு வேலைசெய்தது என்பதை ஒரு சில வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றாலும்கூட , அது கூட பயத்தைத் தரக்கூடியவையாக உள்ளது,'' என்று குழந்தைகள் மீதான கொடுமைகளை தடுக்கும் தேசிய அளவிலான பிரிட்டிஷ் தொண்டு நிறுவனம் தெரிவித்தது.

''இந்த நிறுவனம் 3,000 மதிப்பீட்டாளர்களை வேலைக்கு எடுப்பதைத் தாண்டி மேலும் அதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் ,'' என்று அந்த நிறுவனத்தின் செய்திக்குறிப்பு கூறுகின்றது.

"பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக நிறுவனங்கள், சிறுவர்களை பாதுகாப்பாக வைத்திருக்காதபோது, வெளியிலிருந்து ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் மற்றும் சிறார்களைப் பாதுகாக்கத் தவறும் போது அபராதம் விதிக்க வேண்டும்." என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய கட்டுரைகள்:

மன நலத்தைப் பாதிக்கும் சமூக ஊடகங்களில் இன்ஸ்டாக்ராமுக்கு முதல் இடம் - ஆய்வு

இணைய தாக்குதலில் லாசரஸ் குழுமத்துக்கும் பங்கு உண்டா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்