நாட்டில் ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்ததை மறைக்க இந்தியா முயன்றதா?

இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் மூவர் கொசுவினால் பரவும் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததை இந்திய சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளதாக வெள்ளிக்கிழமையன்று உலக சுகாதார நிறுவனம் (டபுள்யூஹெச்ஓ) தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Image copyrightSCIENCE PHOTO LIBRARY
Image caption கொசுவினால் பரவும் ஜிகா வைரஸ் தொற்று

2016-ஆம் ஆண்டு நவம்பர் முதல் பிப்ரவரி 2017 வரையிலான காலகட்டத்தில் நெருக்கமான சுற்றுப்புறம் இருந்த பகுதியில் மூவருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருந்ததாக குஜராத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏறக்குறைய 30 நாடுகளில் நிகழ்ந்த ஏரளாமான பிறப்பு குறைப்பாடுகளுடன் ஜிகா வைரஸ் தொற்றுக்கு தொடர்புள்ளது.

மைக்ரோசிஃபாலி எனப்படும் அசாதாரணமான வகையில் இருக்கக்கூடிய சிறிய தலைகள் மற்றும் தடை செய்யப்பட்ட மூளை வளர்ச்சியுடன் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பு குறைப்பாடுகள் இதில் உள்ளடங்கும்.

பெரும்பாலும், இந்த வைரஸ் கொசுக்களினால் பரவினாலும், பாலியல் உறவு மூலமாகவும் இது பரவக்கூடும்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்க காரணமான ஜிகா வைரஸ் தொற்று

இந்தியாவில் ஜிகா வைரஸ் தோற்று பாதிப்பு இருந்த நபர்கள் குறித்து ஐநா சுகாதார முகமை வெளியிட்ட அறிக்கையில், 22 மற்றும் 34 வயதான இரு பெண்கள் மற்றும் 64 வயதான ஒரு ஆண் ஆகிய மூவருக்கு இப்பதிப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிகா வைரஸ் தொற்று இருந்ததாக கூறப்பட்ட 34 வயது பெண், கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதியன்று மருத்துவ ரீதியாக குறைபாடு இல்லாத குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

இதில் தொடர்புடைய 22 வயது பெண்ணுக்கு, அவரது மகப்பேறின் 37-ஆவது வாரத்தில் ஜிகா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.

ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்த இந்த மூவரில் யாரும் நாட்டை விட்டு செய்யவில்லையென கூறப்படுகிறது.

''இவ்விரு கர்ப்பிணி பெண்களும் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட 64 வயது மூத்த குடிமகனுக்கு எவ்விதமான மருத்துவ சிக்கல்களும் இல்லவே இல்லை''என வார இறுதியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் குஜராத்தின் மிக மூத்த அதிகாரியான ஜெ. என். சிங் தெரிவித்தார்.

ஜிகா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லாததால், இந்த தொற்று பாதிப்பு தகவல்களை பொதுவெளியில் அரசு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்க காரணமான ஜிகா வைரஸ் தொற்று

ஆனால், ஜிகா வைரஸ் தொற்று பாதிப்புக்கள் கண்டறியப்பட்டவுடன் இதனை பொது மக்களிடம் தெரிவிக்காதது ஏன் என்ற அதிர்ச்சி மற்றும் திகைப்பு, தனியார் பொது சுகாதார அலுவலர்கள் மற்றும் நிபுணர்களிடம் பரவியுள்ளது.

அரசு பொய்யுரைத்ததா?

''இந்திய பொது சுகாதார வரலாற்றில் முன்னேப்போதும் இல்லாத ஒரு நடைமுறை இது. பல நெறிமுறை சிக்கல்களை இது உருவாக்கும். மக்களின் நம்பிக்கையை பெற அரசு முயற்சி செய்ய வேண்டும். மக்களிடையே அச்சம் எதனையும் பரவாமல் இப்பணியை செய்ய வேண்டும். இதுவே ஒரு நல்ல பொது சுகாதார கொள்கையாகும்'' என்று பிபிசியிடம் பேசிய டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவம் துறை பேராசிரியரான ரஜிப் தாஸ்குப்தா தெரிவித்தார்.

கடந்த மார்ச் 17-ஆம் தேதியன்று, நாடாளுமன்றத்தில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல், இதுவரை ஒருவருக்கு மட்டுமே ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது பரிசோதனை கூடத்தில் உறுதிசெய்யப்பட்டதாக தெரிவித்ததாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அரசு பொய்யுரைப்பதாக தெரிவித்த விமர்சகர்கள் , மூன்றாவது மற்றும் இறுதி ஜிகா வைரஸ் தொற்று ஜனவரி மாதத்தில் கண்டறியப்பட்டதாக குறிப்பிட்டனர்.

ஆனால், இது குறித்து மறுத்து பேசிய சுகாதாரத்துறை அதிகாரி, ''ஜனவரி மாதத்தில் பரிசோதனைக்காக இருவர் சோதனை செய்யப்பட்டதாகவும், பிப்ரவரி மாதத்தில் மூன்றாவது நபர் சோதனை செய்யப்பட்டார். இது குறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதிலளித்த போது ஒருவருக்கு மட்டுமே ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது'' என்று தெரிவித்தார்.

ஜிகா வைரஸ் தொற்று பாதிப்புகள் குறித்து அரசின் மெளனம் ஏன்?

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா ஆகியவை குறித்து தொடர்ந்து பொது மக்களுக்கு தகவல் அளித்து வந்த அரசு, ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து பல மாதங்களாக அமைதியாக இருந்தது வியப்பை ஏற்படுத்தியதாக அரசின் நிலை குறித்த விமர்சகர்கள் தெரிவித்தனர்.

சுகாதார கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்ட பின்னர், ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பில் அதிகரிப்பு எதுவுமில்லாத காரணத்தால் பொது மக்களுக்கு இதனை வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லையென தனது நிலைப்பாட்டில் அரசு உறுதியாக இருக்கிறது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption கருவில் இருக்கும் குழந்தைகளை ஜிகா வைரஸ் பாதிப்பதால் பெரும் கவலை

ஆனால், உள்ளூர் அதிகாரிகளிடம் இதனை தெரிவித்திருக்க வேண்டும். அவர்கள் சமூக அமைப்பிலும், ஊடகங்களிடம் இது குறித்து தெரிவித்திருப்பர் என்று பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஆனால், இது குறித்த அறிவிப்பை வெளியிடுவதை ஏன் அரசு .தாமதித்தது ?

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் சொந்த மாநிலமான குஜராத்தில் முதலீடுகளை ஊக்குவிக்க ஜனவரி மாதத்தில் முக்கிய சர்வதேச வணிக மாநாடு நடக்க இருந்ததால், மாநில பாஜக அரசு தங்கள் மாநிலத்தில் மூவருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருந்ததை ரகசியமாக வைத்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், இக்கூற்றை மாநில பாஜக அரசு மறுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Science Photo Library

'அரசின் இந்நிலைப்பாடு பொது சுகாதாரத்தையும், ஊடகங்களையும் அவமானப்படுத்துவதாக உள்ளது. ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள உள்ளூர் சமூகத்துக்கு இது குறித்து தெரியப்படுத்தியிருக்க வேண்டும்'' என்று தி இந்து நாளிதழின் சுகாதார மற்றும் அறிவியல் பிரிவு ஆசிரியரான வித்யா கிருஷ்னன் பிபிசியிடம் தெரிவித்தார்.

''இது போன்ற தகவல்களை வெளியிடாமலோ அல்லது தாமதப்படுத்துவதன் விளைவுகள் மிகவும் அச்சமளிக்கின்றன. தங்கள் நாட்டில் உள்ள நோய் பாதிப்புகள் மற்றும் நோய் பரவல்கள் குறித்து இந்தியா மறைக்க ஆரம்பித்தால், அதன் நம்பகத்தன்மை சர்வதேச அளவில் பாதிக்கப்படும்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2003-ஆம் ஆண்டில், தங்கள் நாட்டில் நிலவி வந்த சார்ஸ் வைரஸ் தொற்றை முழுமையாக மறைக்க முயன்றதாக சீனா மீது குற்றம்சாட்டப்பட்டது நினைவிருக்கலாம்.

இதையும் படிக்கலாம்:

மாட்டிறைச்சித் தடை: `திராவிட நாடு` கோரும் மலையாளிகள் !

மோதி அரசின் மூன்றாண்டு - எங்கே அந்த நல்ல நாட்கள்?

துயரங்களை ஓவியமாக வெளிப்படுத்திய காஷ்மீர் குழந்தைகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்