நாசாவின் சூரியனை தொடும் முயற்சி; மிஷன் பெயரை மாற்றியது ஏன் ?

படத்தின் காப்புரிமை NASA
Image caption 2018ல் இந்த விண்கலம் ஏவப்பட உள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி நிறுவனம் தனது சூரியனை தொடும் முயற்சிக்கு தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானி ஒருவரின் பெயரை சூட்டியுள்ளது.

நாசாவின் `சூரிய ஆய்வு முயற்சி` சூரிய காற்று குறித்து பல முன்னோடி ஆய்வுகளை நடத்தியுள்ள, யூஜீன் பார்க்கர் என்ற இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் அறிவியலாளரின் பெயரை தாங்க உள்ளது.

சூரியனின் மேற்பரப்பிலிருந்து ஒரு ஓடை போல பாயும் மின்னூட்டம் பொதிந்த துகள்கள்தான் சூரியக் காற்று என்று அழைக்கப்படுகின்றன.

சூரியனின் மேற்பரப்பிலிருந்து, சுமார் நான்கு மில்லியன் மைல்களுக்குள் இந்த விண்கலம் பயணிக்கும். இந்த பயணத்தின் போது சுமார் 2,500 செல்சியஸ் வெப்பத்தை விண்கலம் எதிர்கொள்ளும்.

2018 ஆம் ஆண்டில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.

'' ஆராய்ச்சியாளர் ஒருவரின் வாழ்நாள் காலத்தில் இதுபோன்ற பெயரை இதுவரை நாசா சூட்டியது கிடையாது,'' என்று நாசாவின் அறிவியல் பணி இயக்குநர் தாமஸ் ஸுர்புச்சேன் தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றம், பேராசிரியர் பார்க்கரின் 90வது பிறந்தநாள் வருவதற்கு சில தினங்களுக்குமுன் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சூரிய ஆய்வு விண்கலம் தற்போது பார்க்கர் சூரிய ஆய்வு விண்கலம் என அறியப்படுகிறது.

படத்தின் காப்புரிமை NASA
Image caption 'கோரோனா' எனப்படும் சூரியனின் வளிமண்டலத்தின் மேல் அடுக்கு குறித்து தெளிவான புரிதல் வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சி செய்யப்படுகிறது.

இந்த முயற்சி முதலில் 2009ல் அறிவிக்கப்பட்டது. தற்போது, அடுத்த ஆண்டு ஃப்ளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து டெல்டா 4 ஹெவி ராக்கெட்டால் விண்கலம் ஏவப்பட உள்ளது.

''சூரியனுக்கு கீழ் மிகச்சிறந்த, கவர்ச்சியான பணி இது என கூற விரும்புகிறேன்'' என்று நாசா விஞ்ஞானி நிகோலா ஃபாக்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

சூரியனின் வளிமண்டலத்தின் ஒரு பகுதி வழியாக இந்த விண்கலம் பயணிக்கும். இதுவரை மனிதன் தயாரித்த தயாரிப்புகளிலே சூரியனின் மேற்பரப்பிற்கு மிக நெருக்கத்தில் செல்லும் விண்கலம் இதுவாகும்.

'கோரோனா' எனப்படும் சூரியனின் வளிமண்டலத்தின் மேல் அடுக்கு குறித்து தெளிவான புரிதல் வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சி செய்யப்படுகிறது.

சூரிய காற்றின் தோற்றம் மற்றும் பரிணாமம் பற்றிய நமது அறிவை இது விரிவுபடுத்தும்.

கடுமையான வெப்பத்திலிருந்து விண்கலத்தைப் பாதுகாக்க ஒரு சிறப்பு வாய்ந்த கார்பன் கலப்பு தகடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் சூரியனுக்கு செல்வதற்கான அதன் சொந்த பயண முயற்சியான சோலார் ஆர்பிட்டாரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள் :

''அரசு ஊழியர் என்பவர் லட்சிய வேட்கையுடன், அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்''

'கழிப்பிடங்கள் இங்கே - தண்ணீர் எங்கே?' மோதி தொகுதியில் பொதுக்கழிப்பறைகள் நிலை

'மயில் எப்படி கர்ப்பமாகிறது?' ராஜஸ்தான் நீதிபதி புது விளக்கம்

மாட்டிறைச்சித் தடை: `திராவிட நாடு` கோரும் மலையாளிகள் !

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்