இந்தியாவிலும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல்

உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் தாங்கள் ஒரு பெரிய ரான்சம்வேர் சைபர் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றன.

இந்த பிரச்னையைப் பற்றி பேசிய நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டனை சேர்ந்த விளம்பர நிறுவனம் டபள்யூ. பி பி (WPP) , ரான்சம்வேர் சைபர் தாக்குதலின் விளைவாக, தனது தகவல் தொழில்நுட்பப் பிரிவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ரான்சம்வேர் சைபர் தாக்குதலில், அறியப்படாத ஒரு கணினி வைரஸ் பயன்பாட்டாளரின் கணினி செயல்படுவதை முடக்கிவிட்டு, குறிப்பிட்ட அளவு டிஜிட்டல் பிட்காயின் முறையில் பணத்தை செலுத்தினால் மட்டுமே மீண்டும் கணினி செயல்படும் என்ற நிலைக்கு தள்ளுகிறது.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அரசு மின்சார வாரியம், கியெவ்வின் போன்ற நிறுவனங்கள், முக்கிய விமான நிலையம் ஆகியவை இந்த பிரச்னையை முதலில் அறிவித்தன.

செர்னோபில் அணுசக்தி ஆலையில் அதன் விண்டோஸ் அடிப்படையில் மூலம் இயங்கும் சென்சார்கள் மூடப்பட்ட பின்னர், கணினி இல்லாமல் நேரடியாக அதிகாரிகளை கொண்டு கதிரியக்க அளவை கண்காணிக்க வேண்டியிருந்தது.

இந்தியாவில் மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் உள்ள ஒரு டெர்மினலை நடத்தும் ஒரு தனியார் நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய கப்பல்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இணைய வைரஸ் தாக்குதலை சமாளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சகத்தின் அறிக்கை கூறுகின்றது.

இன்டர்போலின் ஈடுபாடு

அரசு நிறுவனங்கள், இந்த தாக்குதல் மீது விசாரணை நடத்திவருகின்றனர் என்றும் இதற்கு பொறுப்பானவர்களை கண்டறிய உறுதியுடன் இருப்பதாக''வும் அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோப்புகளை அணுக வசதி மீட்கப்படும் என்ற உத்தரவாதம் இல்லாததால்,தாக்குதலில் இருந்து வெளியேற கோரப்படும் பணத்தை செலுத்தவேண்டாம் என்று அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

2,000க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் பெரும்பாலும் உக்ரைன், ரஷியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் நடைபெற்றதாக தனது ஆய்வில் தெரியவந்துள்ளதாக, இணையத்தில் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் ரஷிய நாட்டைச் சேர்ந்த காஸ்பெர்ஸ்கி லாப் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்னையை கூர்ந்து கண்காணித்து வருவதாகவும், உறுப்பு நாடுகளை தொடர்புகொண்டு வருவதாகவும் சர்வதேச காவல்துறை இன்டர்போல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் வான கிரை ('WannaCry') தாக்குதலில் பயன்படுத்தப்படும் அதே பலவீனங்களை இந்த வைரஸ் தாக்குதல் பயன்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

''கடந்த ஆண்டு வெளியான ரான்சம்வேரின் ஒரு மாறுபட்ட வடிவம் என்று ஆரம்பத்தில் தோன்றியது," என கணினி விஞ்ஞானி பேராசிரியர் ஆலன் உட்வர்ட் கூறினார்.

பேட்யா(Petya) என்று அறியப்படும் ரான்சம்வேரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு பெட்ரவராப் என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அவ்வளவு தெளிவாக இல்லை,'' என்றார் அவர்.

தொடர்புடைய செய்திகள்:

சைபர் குற்றவாளிகளுக்கு, இந்த தாக்குதல் மிகவும் லாபகரமாக இருப்பதால், இந்த இணைய தாக்குதல் முடிவுக்கு வராது என ரெக்கார்டட் பியூச்சர் ( Recorded Future) என்ற இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரி பரீஸ்விச் பிபிசியிடம் தெரிவித்தார்.

தங்களது தரவுகளை பெறுவதற்காக, ஒரு தென் கொரியா நிறுவனம் ஒரு மில்லியன் டாலர் பணத்தை செலுத்தியது. அது பெரும் தொகை. "இது ஒரு சைபர் குற்றவாளிக்கு நீங்கள் வழங்கக்கூடிய மிகப்பெரிய ஊக்கத்தொகை,''என்றார் அவர்.

உலக அளவில் நடைபெற்ற வான கிரை ('WannaCry')என்று அறியப்பட்ட ரான்சம்வேர் தாக்குதல், ஐக்கிய ராஜ்யத்தின் தேசிய சுகாதார சேவை நிறுவனத்தில் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தியது. அதை அடுத்து இந்த புதிய தாக்குதல் வந்துள்ளது.

மாசசூசெட்ஸ்சை சேர்ந்த வெரா கோட் என்ற நிறுவனத்தில் உள்ள மூத்த பாதுகாப்பு வல்லுனர் கிறிஸ் வைசோபால்,வான கிரை ('WannaCry') பயன்படுத்திக்கொண்ட அதே விண்டோஸ் குறியீட்டு ஓட்டைகள் சில வழியாகவே இந்த தாக்குதலும் பரவியதாக தோன்றியது என்று கூறினார்.

வான கிரை ('WannaCry') தாக்குதல் வெகு விரைவாக சமாளிக்கப்பட்டதால், பல நிறுவனங்கள் அந்த ஓட்டைகளை அடைக்கவில்லை,'' என்றார் அவர்.

இந்த முறை குறிப்பாக உக்ரைன் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உக்ரைனில், பல பெட்ரோல் நிலையங்கள் தங்களது வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ள நிலையில், கீவ் மெட்ரோ அமைப்பு பணம் செலுத்தும் அட்டைகளை பெறுவதை நிறுத்தியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

உக்ரைனின் அரசாங்க அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதைக் காட்ட ஒரு படத்தை ட்விட்டர் தளத்தில் துணை பிரதமர் வெளியிட்டுள்ளார்.

"Ta-daaa! அமைச்சரின் அலுவலகத்தில் இணைய இணைப்பு இல்லை,''' என்று அவர் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்