அமெரிக்காவில் நுழைய ஆஃப்கனின் ரோபோட்டிக் மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு

  • 6 ஜூலை 2017

அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் ஆஃப்கன் நாட்டை சேர்ந்த முற்றிலும் மாணவிகளை மட்டும் உள்ளடக்கிய ஒரு ரோபோட்டிக் வல்லுனர் குழு தங்கள் படைப்பு ஒரு போட்டியில் கலந்து கொள்வதை ஸ்கைப் மூலம் காணவுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

அதிபர் டிரம்ப் சமீபத்தில் ஆறு இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவினுள் நுழைய தடை விதித்தார். ஆனால் அப்பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் இல்லை.

போட்டியில் பங்கேற்பதற்கான பட்டியலில் இடம்பெற்ற இரான், சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளை சேர்ந்த அணிகளுக்கு அமெரிக்காவினுள் நுழைய அனுமதி தரப்பட்டது.

தனிப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து விவாதிக்க முடியாது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராட் நகரில் இருந்துகொண்டு, வாஷிங்டனில் நடைபெற்ற போட்டியில், பந்துகளை வகைப்படுத்திப் பிரிக்கும் தங்கள் ரோபோ பங்கேற்றதை அந்த ஆறு மாணவிகள் கொண்ட குழு காணொளி இணைப்பு மூலம் பார்த்தது.

"எங்களுக்கு ஏன் விசா மறுக்கப்பட்டது என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஏனெனில் போட்டியில் பங்கேற்கும் பிற நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது," என்று ஃபதேமா கதேர்யான், 14, ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார்.

தாங்கள் விசாவுக்காக விண்ணப்பிப்பதற்காக ஆஃப்கன் தலைநகர் காபுலில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு இரு முறை பயணித்த அக்குழுவின் உறுப்பினர்களில் அவரும் ஒருவர்.

படத்தின் காப்புரிமை BERTRAND GUAY/AFP/Getty Images

"எல்லா நாட்டினரும் அப்போட்டியில் கலந்துகொள்ள முடிந்தது. ஆனால் எங்களால் முடியவில்லை. இது ஆஃப்கானிஸ்தான் மக்களுக்கு ஒரு தெளிவான அவமரியாதை ஆகும்," என்று அவரின் சக குழு உறுப்பினர் லிடா அசிசி, 17, கூறினார்.

"ஃபர்ஸ்ட் க்ளோபல்" என்ற அமைப்பு நடத்தும் அந்த போட்டியில் 164 நாடுகளை சேர்ந்த குழுக்கள் ரோபோட்டிக் விளையாட்டு தொடரில் பங்கேற்றன.

அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை ஊக்குவிப்பதை அந்த லாப நோக்கமற்ற அமைப்பு இலக்காகக் கொண்டுள்ளது.

அந்த மாணவிகளுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது குறித்து தன் கருத்துக்களை அந்த அமைப்பின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஃபர்ஸ்ட் க்ளோபலின் தலைவர் ஜோ செஸ்டக், அமெரிக்க அரசின் முடிவால் தாம் மிகவும் "வருத்தமுற்றுள்ளதாக" கூறியுள்ளார்.

"உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளவர்களை கணக்கில்கொண்டே பெரும்பாலான நேரங்களில் விசா முடிவுகள் எடுக்கப்படும்," என்று எழுதியுள்ள அவர், "அந்த நாட்டவர்களுக்கு கிடைக்கும் குறைவான எண்ணிக்கையிலான விசாக்கள் இப்பிரச்சனை மேலும் சிக்கலாக்கிவிட்டது," என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு ஆஃப்கன் மாணவிகளின் குழு அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும். அவர்களின் ஸ்கைப் அழைப்பின் காணொளியும் அந்நிகழ்வில் பெரிய திரையில் ஒளிபரப்பப்படும்.

காம்பியா நாட்டை சேர்ந்த ஒரு குழுவாலும் அமெரிக்காவினுள் நுழைய விசா பெற முடியவில்லை.

சோஃபியா என்னும் ரோபோ `பெண்`

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இருபத்தி ஓராம் நூற்றாண்டின் இனிய இயந்திரா

பிற செய்திகள்

லண்டனில் வலம்வரும் குட்டி ரோபோ கார்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
லண்டனில் வலம்வரும் குட்டி ரோபோ கார்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்