நீல் ஆம்ஸ்ட்ராங் பயன்படுத்திய தூசி பை 18 லட்சம் டாலருக்கு ஏலம்

அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ராங் பயன்படுத்திய சந்திர தூசி பை

பட மூலாதாரம், AFP/Getty Images

படக்குறிப்பு,

அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ராங் பயன்படுத்திய சந்திர தூசி பை 18 லட்சம் டாலருக்கு விற்பனை

சந்திரனில் இருந்து முதலாவது மாதிரிகளை சேகரிக்க அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் பயன்படுத்திய சந்திர தூசி பை, நியூ யார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 18 லட்சம் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.

சந்திர மாதிரிகள் வெளிப்புற மாசுக்களால் அசுத்தம் அடையாமல் இருப்பதையும், அதேபோல இந்த சந்திர மாதிரிகளால் வெளிப்புற பொருட்கள் அசுத்தம் அடையாமல் இருப்பதையும் தடுக்கின்ற இந்த பை, அப்பல்லோ 11 சந்திரப் பயணத்தில் பயன்படுத்தப்பட்டது.

இது பெயர் தெரிவிக்காத விற்பனையாளர் ஒருவரால் 'சாத்பீஸ்' ஏல நிறுவனம் மூலம் விற்பனைக்கு வந்தது.

வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த பையில், சந்திரனிலுள்ள துசியும், சிறிய கற்களும் காணப்படுகின்றன.

பட மூலாதாரம், Central Press/Getty Images

தனியார் கைகளில் இருக்கின்ற அப்பல்லோ 11 சந்திரப் பயணத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரேயொரு கலைப்பொருளான இந்த தூசி பை, யாருக்கு செந்தம் என்பது பற்றிய நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின்னர், இது ஏலத்திற்கு வந்திருக்கிறது.

சந்திரனுக்கு பயணம் மேற்கொண்ட விண்கலம் பூமிக்கு திரும்பிய பிறகு, ஏறக்குறைய அனைத்து கருவிகளும் ஸ்மித்சோனியன் அருங்காட்சியகங்களுக்கு அனுப்பப்பட்டன.

இருப்பினும், பொருட்களின் விபரப் பட்டியலில் காணப்பட்ட பிழையால், இந்த பையானது, ஜான்சன் விண்வெளி மையத்தின் பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு ஏலத்தின்போது, இது தவறாக இனம் காணப்பட்டதால், இல்லினாய் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவருக்கு வெறும் 995 டாலருக்கு விற்கப்பட்டது.

இந்த பையை திரும்ப பெற்றுக்கொள்ள நாசா முயற்சிகளை மேற்கொண்டது.

ஆனால். இந்த சந்திர தூசி பையானது வாங்கியவருக்கே சட்டபூர்வமாகச் சொந்தமானது என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க மத்திய அரசு நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்தார்.

அதன் பின்னர், இதனை வாங்கியவர் 'சாத்பீஸ்' ஏல நிறுவனம் மூலம் ஏலத்தில் விற்க இதனை கொண்டு வந்தார்.

அமெரிக்க ரகசிய விண்வெளி விமானம் என்ன செய்கிறது?

காணொளிக் குறிப்பு,

அமெரிக்க ரகசிய விண்வெளி விமானம் என்ன செய்கிறது?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :