முக்கிய தகவல்களை கசியவிட்டு மீட்புப் பணம் கேட்டு பிரபல நிறுவனத்தை மிரட்டும் ஹேக்கர்கள்

கேம் ஆஃப் த்ரோன்ஸ்
படக்குறிப்பு,

எச்.பி.ஒ நிறுவனத்தின் முக்கியத் தகவல்கள் மற்றும் வேறு தொடர்களின் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர்

கேம் ஆஃப் த்ரோன்ஸின் கதை உள்ளிட்ட பொழுதுபோக்கு நிறுவனமான எச்.பி.ஒ நிறுவனத்தின் முக்கியத் தகவல்களை கசியவிட்ட ஹேக்கர்கள் (கணினி வலையமைப்பை உடைத்து நாசம் செய்பவர்கள்) மீட்புப்பணத்தை அளிக்குமாறு ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஒளிபரப்பில் இதுவரை வெளியாகாத தற்போதைய தொடரின் ஐந்தாவது பகுதியின் கதையை அண்மையில் கசியவிட்டுள்ளனர்.

எச்.பி.ஒ நிறுவனத்தின் முக்கியத் தகவல்கள் மற்றும் வேறு தொடர்களின் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர்.

ஹேக்கர்கள் மொத்தம் 1.5 டிபி தரவு இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், எச்.பி.ஒ நிறுவனம் இதை நம்புவதாக இல்லை.

வையர்டு செய்தி இணையதளத்தில், "எச்.பி.ஒ தோற்றுவிட்டது" என்ற வாக்கியத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், சட்டப்பூர்வமான தகவல்கள், பணி ஒப்பந்தங்கள், நிறுவனத்தின் மற்ற தகவல்களும் வெளியாகியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'தி அசோசியேட்டட் பிரஸ்' வெளியிட்டுள்ள செய்தியில், கசிந்துள்ள தரவுகளில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் நடித்துள்ள நடிகர்களின் தனிப்பட்ட தகவல்களும் இருப்பதாக தெரிவித்துள்ளது.

மீட்புப் பணம் வழங்குமாறு ஹேக்கர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், எச்.பி.ஒ தலைமை நிர்வாகி ரிச்சர்ட் பிளப்பளரை ஹேக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும் எவ்வளவு பணம் வேண்டும் என்று பொது வெளியில் குறிப்பிடவில்லை.

"எங்கள் கோரிக்கை தெளிவானது மற்றும் மாறாதது: தரவுகள் வெளியிடுவதை நிறுத்த எங்களுக்கு xxxx டாலர்கள் வேண்டும்", என்று குறிப்பிட்டுள்ளனர்.

"எச்.பி.ஒ நிறுவனம் 12 மில்லியன் டாலர்கள்களை ஆய்வுக்காகவும், 5 மில்லியன் டாலர்கள் விளம்பரத்திற்காகவும் செலவிட்டுள்ளது. இதனால், எங்களையும் ஒரு விளம்பரத்திற்கான காரணியாக கருதி செலவிடுங்கள்" என்றும் அந்த வீடியோ குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த குறிப்பில் தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், பணத்தை வழங்க மூன்று நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாக ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :