வைட்டமின் பி3 உட்கொண்டால் கருச்சிதைவு, பிறப்புக் குறைபாடு வாய்ப்புகள் குறையும் - ஆய்வு

  • 14 ஆகஸ்ட் 2017

வைட்டமின் பி3 உட்கொள்வதால் கருச்சிதைவு, பிறப்புக் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் குறையலாம் என்று எலிகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

காரணியையும், தடுக்கும் வழிகளையும் கண்டுபிடித்துள்ளதால் இதை இரட்டைச் சாதனை என்று சிட்னியின் விக்டர் சாங் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உலகில் ஆண்டுக்கு 7.9 மில்லியன் குழந்தைகள் குறைபாடுகளோடு பிறப்பதால் இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் பயனளிப்பதாக இருக்கும் என்று ஆய்வுக் குழு நம்புகிறது.

ஆனால் இக்கண்டுபிடிப்புகளை கருவுற்ற பெண்களுக்கான பரிந்துரையாக மாற்ற முடியாது என்று ஒரு வல்லுநர் குறிப்பிட்டுள்ளார்.

பலமுறை கருச்சிதைவுக்கு உள்ளான, அல்லது இதயம், சிறுநீரகம், முதுகெலும்பு, மேல் அன்னம் ஆகியவற்றில் குறைபாடுகளோடு குழந்தைகளைப் பெற்றெடுத்த நான்கு குடும்பங்களின் டி.என்.ஏ.க்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இரண்டு மரபணுக்களில் ஏற்பட்ட உருமாற்றங்களால் குழந்தைகளிடம் நிக்கோடினாமைட் அடினைன் டைநியூக்ளியோடைட் (NAD- நேட்) எனப்படும் இன்றியமையாத மூலக்கூறு போதிய அளவில் இல்லாமல் இருப்பதை இந்த ஆய்வு கண்டுபிடித்தது.

உறுப்புகள் இயல்பாக வளர்ச்சி அடையவும், செல்கள் ஆற்றலை உற்பத்தி செய்யவும் இந்த மூலக்கூறு மிகவும் அவசியம்.

இதே உருமாற்றங்களை ஆய்வுக்கூட எலிகளில் உருவாக்கினார் முன்னணி ஆய்வாளர் பேரா.சாலி டன்வுட்டி. அப்போது, கருத்தரித்த தாய் எலிகளுக்கு வைட்டமின் பி3 உள்ளடங்கிய நியாசின் மருந்தை செலுத்தியபோது இந்த உருமாற்றங்கள் சரியாவதை அவர் கண்டார்.

படத்தின் காப்புரிமை ORLANDO SIERRA/AFP/Getty Images

உடலில் 'நேட்' அளவுகளை அதிகரிக்கவும் கருச்சிதைவு, பிறப்புக் குறைபாடு ஆகியவற்றை முற்றாகத் தடுக்கவும் முடியும் என்று கூறிய அவர், குறைபாட்டுக்கான காரணியையும் அதைத் தடுக்கும் முறைகளையும் ஒரே ஆய்வில் கண்டறிவது அரிதானது என்றார்.

இந்தக் கண்டுபிடிப்பு உற்சாகம் தருவதாக இருந்தபோதும், இந்தக் கண்டுபிடிப்பை கருவுற்ற, வைட்டமின் பி3 குறைபாடுள்ள தாய்மார்களுக்கான பரிந்துரையாக மாற்றுவது இயலாது என்கிறார் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாய்-கரு மருத்துவத் துறையின் வல்லுநர் கேட்டி மோரிஸ்.

கருவுற்ற தாய்மார்களுக்குப் பரிந்துரைக்கப்படும் ஊட்டச்சத்து அளவைப்போல பத்து மடங்கு அதிகமான டோஸ் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது.

பல சிக்கலான காரணங்களால் கர்ப்பகாலக் கோளாறுகள் ஏற்படுவதால் அதிக அளவில் வைட்டமின் உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஓர் சாரமுள்ள ஆய்வு என்று குறிப்பிட்ட பிரிஸ்டல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜீன் கோல்டிங், நான்கு குடும்பங்களின் மரபணுக்களைக் கொண்டும் எலிகளிடமும் நடத்தப்பட்ட இந்த ஆய்வை மிகை மதிப்பீடு செய்யக்கூடாது என்று எச்சரித்தார்.

தற்போதைக்கு, கருவுற்றத் தாய்மார்கள் அவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் அளவான 18 மிலி கிராம் நியாசினை உள்ளடக்கிய கர்ப்ப கால பல்லூட்டங்களை (மல்டி விட்டமின்) உட்கொள்ளலாம் என்று பேராசிரியர் டன்வூடி தெரிவித்துள்ளார்.

ஊட்டச்சத்துகளை எல்லோரது உடலும் ஒன்றுபோல ஈர்த்துக்கொள்வதில்லை என்றும், உயர-எடைக் கணக்கீடும், நீரிழிவு நோயும் பெண்களின் உடல் நேட் மூலக்கூறுகளை உற்பத்தி செய்யும் விதத்தில் தாக்கம் செலுத்துவதாக அவர் கூறினார்.

போதிய அளவில் நேட் மூலக்கூறுகளை உற்பத்தி செய்துகொள்ளாத பெண்கள் யாரென்று நமக்குத் தெரியாது. அடுத்த கட்ட ஆய்வின் இலக்கு இதைக் கண்டுபிடிப்பதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்