இளமையை மீட்க இளைஞர்களின் ரத்தத்தை முதியவர்களுக்கு செலுத்தும் புதிய சிகிச்சை முறையால் சர்ச்சை

சாகாவரம் அளிக்குமா இளைஞர்களின் இரத்தம்? படத்தின் காப்புரிமை HBO

வயதாவதை தவிர்க்க, இளைஞர்களின் ரத்தத்தை வயதானவர்களின் உடலில் செலுத்தும் புதிய சிகிச்சை முறையை அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் சோதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த புதிய நிறுவனம் ஒன்று, வயதான நோயாளிகள் தங்கள் உடலில் இளைஞர்களின் ரத்தத்தை ஏற்றிக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொருவரிடமும் எட்டாயிரம் அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டு, அவர்கள் உடலில் இளைஞர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 2.5 லிட்டர் பிளாஸ்மா (மனித இரத்தத்திலிருந்து சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், இரத்த அணுத்தட்டுகள் மற்றும் பிற அணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டவுடன், மீதமிருக்கும் ஒரு திரவம்) செலுத்தப்பட்டது.

வயதானவர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவது குறித்த சோதனை முயற்சியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களின் சராசரி வயது 60 ஆண்டுகள்.

`இந்த ஆய்வின் முதல் கட்ட முடிவுகள் உற்சாகம் அளிப்பதாக உள்ளன ` என ஸ்டாம்போர்டில் பயிற்சி பெற்ற ஆராய்ச்சியாளரும்,யு.எஸ் மருத்துவமனையின் நிறுவனருமான 32 வயதாகும் ஜெஸ்ஸி கர்மாசின் சண்டே டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

`தோற்றம் அல்லது நீரிழிவு நோய் அல்லது இதய செயல்பாடு அல்லது நினைவாற்றல் ஆகியவற்றை மேம்படுத்த இது உதவும். ஏனெனில் இவைதான் வயதாவதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் முக்கியமானவை. இந்த புதிய வகை சிகிச்சை சாகாவரத்தை அளிக்கும் என உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் அடிப்படையில் இது அதனைப் போன்ற ஒன்று` என அவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த புதிய மருத்துவ முறையானது ஸ்டாம்போர்டு பல்கலைகழகத்தில் கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வந்த ஆய்விலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது, வயதான எலி ஒன்றுக்கு இளைய வயதுடைய எலியின் ரத்தம் செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. இதில் வயதான எலியின் உள்ளுறுப்புகள், தசைகள் மற்றும், ஸ்டெம் செல்கள் ஆகியவை புத்துணர்ச்சியடைந்ததாக தெரிய வந்தது.

திரைப்பட விமர்சனம்: விவேகம்

மேலும் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றில், இளைஞர்களின் பிளாஸ்மா வயதானவர்களின் உடலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், எலிகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வுகள் எப்படி மனிதனுக்கு ஏற்புடையதாக இருக்கும் என பல ஆராய்ச்சியாளர்கள் விமர்சித்துள்ளனர்.

மேலும் இதில் பல நெறிமுறை தவறுகள் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

`மருத்துவ ரீதியாக அந்த சிகிச்சை பலனளிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.` என 2014-ஆம் ஆண்டு எலிகளுக்கு பாராபயோசிஸ் ஆய்வு நடத்திய ஸ்டாம்போர்டு நரம்பியல் துறை வல்லுநரான டோனி வைஸ் கோரே தெரிவித்துள்ளார்.

மேலும் ரத்த பரிமாற்றத்தால் படை, கல்லீரல் காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்படக்கூடிய அளவிலான தொற்றுகள் ஏற்படலாம் என விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சிகிச்சை முறை பல மோசடிகளுக்கும் வித்திடலாம் என மற்றவர்கள் கூறுகின்றனர்.

`இளைஞர்களின் ரத்தம் இளமையை அளிக்கும் என மக்களை நம்ப வைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அது மனித உடலில் செயல்படுமா என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. எலிகள் இளைமையாக தோற்றமளிக்க காரணமாக உள்ள அதன் உடற்கூறு அமைப்பை பற்றி அறிந்து கொள்ள நாம் தயாராக இருப்பதில்லை` என எம்.ஐ.டி ரெக்னாலஜி ரிவ்யூஸ் என்ற இணையதளத்தில் வைஸ் கோரே தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும் இளைஞர்களிடமிருந்து இரத்தத்தை பெற இவர்கள் வைத்திருக்கும் நெறிமுறைகள் இன்னும் மர்மமாகவே உள்ளது. மருத்துவ தேவைக்காக தானமாக அளிக்கப்படும் தங்களது இரத்தம், விலையுயர்ந்த, சோதனை மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படுவது குறித்து இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

அமெரிக்காவின் இரத்த பிளாஸ்மா தானம் குறித்த இணையதளங்கள், ஊக்கத்தொகையாக 20 முதல் 50 அமெரிக்க டாலர்களை அளிக்கின்றன . மேலும் இவை நோயாளிகள் குறித்த தகவலை வெளியிட்டு, பிளாஸ்மா தானத்தை முன்னிலைப்படுத்துகின்றன.

தங்கள் அன்றாட செலவுகளை சமாளிக்க அடிக்கடி பிளாஸ்மா தானம் செய்யும் அமெரிக்காவின் ஏழை மக்களின் எண்ணிக்கை துல்லியமாக தெரியாத நிலையில், மிகப்பெரிய செல்வந்தர்கள் வயது மூப்படைவதை தடுக்கும் ஆராய்ச்சிகளில் மில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு செய்துள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள கர்மாசின், தனது ஆராய்ச்சி அனைத்து நெறிமுறை ஆய்வுகளிலும் வெற்றி பெற்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவ சோதனையின் செலவு மற்றும் செயல்முறை குறித்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள அவர், கட்டணம் செலுத்தும் பங்கேற்பாளருக்கு, போலியான சிகிச்சை அளிப்பது தவறானது என தெரிவித்துள்ளார்.

தன்னுடைய நோயாளிகள் அனைவரும் தனது சிகிச்சையின் பலனை உடனடியாக அனுபவித்ததாக வாதாடும் அவர், ஒரு முறை சிகிச்சை பெற்றதில், நல்ல மாற்றத்தை உணர்ந்த பலரை பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த சிகிச்சை முறை வெளியிலிருந்து உள்ளே செய்யப்படும் பிளாஸ்டிக் சர்ஜரி போன்றது என அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்