பத்தே நொடிகளில் புற்றுநோய் திசுக்களை கண்டறியும் 'பேனா'

ஒரு கையடக்க கருவியின் மூலம் புற்றுநோய் திசுக்களை பத்தே நொடிகளில் அடையாளம் கண்டுவிட முடியும் என டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை University of Texas
Image caption புற்றுநோய் திசுக்களைக் கண்டறியும் 'மாஸ்பெக் பேனா'

இந்தக் கருவியானது வேகமாகவும், பாதுகாப்பாகவும் மட்டுமல்லாமல் கூடுதல் துல்லியத்துடனும் புற்றுநோய்க்கு கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை செய்ய உதவும் என அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

சிகிச்சைக்குப் பின்னர் எதாவது புற்றுநோய் அணுக்கள் உடலை விட்டு வெளியேறாமல் இருந்துவிடும் துயரத்தைத் தவிர்க்க இது உதவும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

சயின்ஸ் டிரான்ஸ்லேஷனல் மெடிசின் எனும் மருத்துவ சஞ்சிகையில் இந்தப் பரிசோதனைகள் குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்தத் தொழில்நுட்பம் 96% துல்லியமாகச் செயல்படுவதாக அக்கட்டுரை கூறுகிறது.

புற்றுநோய் அணுக்களின் தனிப்பட்ட வளர்சிதை மாற்றத்தை இந்த 'மாஸ்பெக் பேனா' எனப் பெயரிடப்பட்டுள்ள சாதனம் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. புற்றுநோய் திசுக்கள் வளர்வதிலும் பரவுவதிலும் காட்டும் வேகம், அவற்றின் உள்வேதியியல் ஆரோக்கியமான திசுக்களை விட முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.

இது எப்படிச் செயல்படுகிறது?

அறுவை சிகிச்சையின்போது புற்றுநோய் அணுக்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில் இந்தப் பேனாவால் ஒரு துளி நீர் செலுத்தப்படும். உயிரோடு இருக்கும் செல்களில் உள்ள ரசாயங்கள் அந்தத் நீர்த் துளியில் நுழையும். இப்போது அந்தத் நீர்த் துளி ஆய்வுக்காக பேனாவால் உறிஞ்சப்படும்.

ஒவ்வொரு நொடிக்கும் பல்லாயிரக்கணக்கான ரசாயனங்களை அளவிடக்கூடிய ஸ்பெக்ட்ரோமீட்டர் எனச் சொல்லப்படும் நிறமாலைமானியுடன் இந்தப் பேனா பொருத்தப்படும்.

இதன் ஆய்வுமுடிவுகளில் இருந்து கிடைக்கும் ரசாயன ரேகைகள் அந்தத் திசுக்கள் ஆரோக்கியமான திசுக்களா இல்லை புற்றுநோய் வந்த திசுக்களா என்பது குறித்து மருத்துவருக்கு தெரியப்படுத்தும்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
புற்றுநோய் எவ்வாறு பரவுகிறது என்பதை காட்டும் துல்லிய வீடியோ

புற்றுநோய் அணுக்களுக்கும், ஆரோக்கியமான அணுக்களுக்கும் இடையேயான எல்லையை கண்டுபிடிப்பதுதான் அறுவைச்சிகிச்சை நிபுணர்களுக்கு இருக்கும் சவாலாகும். சில கட்டிகளில் ஆரோக்கியமான திசுக்கள் மற்றும் புற்றுநோய் திசுக்கள் இடையேயான எல்லை வெளிப்படையாகத் தெரியும்; சிலவற்றில் மங்கலாகவே தெரியும்.

அறுவைச் சிகிச்சையின் போது புற்றுநோய் அணுக்கள் எதுவும் நீக்கப்படாமல் விட்டுவிடுவதை தவிர்க்க மருத்துவர்களுக்கு இந்தப் பேனா உதவியாக இருக்கிறது.

"எந்த அளவுக்கு மருத்துவத் தேவையில் இந்தத் தொழிலநுட்பம் உதவப்போகிறது என்பதை அறியும்போது உற்சாகமாக இருக்கிறது. நேர்த்தியாகவும் ,எளிமையாகவும் இருக்கும் இந்தப் பேனா இன்னும் குறுகிய காலத்துக்குள் மருத்துவர்களின் கையில் வந்துவிடும்," என பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார் டெக்சாஸ் பல்கலைகழகத்தின் வேதியியல் பிரிவின் உதவிப் பேராசிரியரான லிவியா எபெர்லின்.

தொடரும் சோதனைகள்

இந்தத் தொழில்நுட்பத்தின் ஆய்வுக்காக இதுவரை 253 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. அடுத்த வருடம் பயன்பாட்டுக்கு வரும்வரை இந்தக் கருவியை இன்னும் துல்லியமாக்க மேலும் சோதனைகளைத் தொடரத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பேனா மலிவான விலையில் இருந்தாலும் நிறமாலைமானியானது அளவில் பெரிதாகவும், அதிக விலை கொண்டதாகவும் இருக்கிறது. மருத்துவர் எபேர்லின் கூறுகையில் " நிறமாலைமானி நிச்சயம் இந்தத் தொழில்நுட்பத்துக்குத் தடையாக இருக்கும். அளவில் சிறிதாகவும், விலை சற்றே குறைவானதாகவும், ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் இருக்கும் நிறமாலைமானியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்"என்றார்.

படத்தின் காப்புரிமை Ronald Grant
Image caption கோப்புப் படம்

"எப்போதும் நோயாளிகளுக்கு துல்லியமான, வேகமான மற்றும் பாதுகாப்பான அறுவைச்சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். இந்தத் தொழில்நுட்பம் மூன்றையும் சாத்தியமாக்கியிருக்கிறது" எனக் கூறியிருக்கிறார் பெய்லர் மருத்துவக் கல்லூரியின் நாளமில்லாசுரப்பி அறுவைச்சிகிச்சை பிரிவின் தலைவரும் ஆராய்ச்சியாளர்களில் ஒருவருமான மருத்துவர் ஜேம்ஸ் சலிபர்க்.

அறுவைச்சிகிச்சையில் துல்லியத்தை கூட்டும் சமீபத்திய முயற்சியே இந்த மாஸ்பெக் பேனா.

மற்ற ஆய்வுகள் என்னென்ன?

லண்டனில் உள்ள இம்பெரியல் கல்லூரியின் ஒரு குழு ஏற்கனவே ஒரு கத்தியை உருவாக்கியிருந்தது. அறுவைச்சிகிச்சையின்போது வெட்டப்படும் திசுக்கள் புற்றுநோய் வந்தவைதானா என்பதை உறுதி செய்ய உதவும் வகையில் அந்தக் கத்தி வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஹார்வார்டு பல்கலைகழகத்தில் உள்ள இன்னொரு குழு மூளைப்புற்று நோய் வந்தவர்களுக்கு எந்த அளவுக்கு நோய் பாதித்த அணுக்களை அகற்ற வேண்டும் என்பதை அறிய லேசர்களை பயன்படுத்தியது.

"அறுவைச்சிகிச்சையின் போது ஒரு கட்டி புற்றுநோய் கட்டியா இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும் அதன் இயல்புகளை மருத்துவர்கள் மிக விரைவாக அறிந்துகொள்ளும் சாத்தியத்தை இன்னும் துரிதப்படுத்த இது போன்ற உற்சாகமூட்டும் ஆராய்ச்சிகள் உதவும்.

அறுவைச்சிகிச்சையின் போது எவ்வளவு விரைவாக தகவல்களை மருத்துவர்கள் தெரிந்து கொள்கிறார்களோ அதற்கேற்ப மிகச்சிறந்த சிகிச்சைகளை நோயாளிகளுக்கு விரைவில் வழங்கமுடியும்," எனத் தெரிவித்திருக்கிறார் இங்கிலாந்து புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த மருத்துவர் அயின் மெக்கர்த்தி.

பிற செய்திகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அதிகரிக்கும் நட்சத்திர ஆமை கடத்தல்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :