மனிதர்களின் பாலின இயல்பை கண்டறியும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் சர்ச்சை

செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம், STANFORD UNIVERSITY

முக அடையாளத்தை வைத்து ஒருவர் தன்பாலின ஈர்ப்பு உள்ளவரா அல்லது எதிர்ப்பாலின ஈர்ப்பு உள்ளவரா என்பதை கண்டறியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒரு மென்பொருளின் வடிவமைப்பாளர்களுக்கும், மாற்றுப் பாலுணர்வு உள்ளோர் உரிமைக்காகப் போராடும் இரு அமைப்புகளுக்கும் இடையே விவாதத்தை உருவாக்கியுள்ளது.

மனிதர்களால் பிரித்தறிய முடியாத மனிதரின் பாலின இயல்பை அவர்களின் முக அம்சங்கள் மூலம் கண்டறியும் மென்பொருளை தாம் உருவாக்கியுள்ளதாக அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த முயற்சியானது "ஆபத்தானது" என்றும் "குப்பை அறிவியல்" என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளோ இது சடங்கான எதிர்வினை என்று கூறியுள்ளனர்.

இந்த ஆய்வுத் திட்டத்தின் முடிவுகள் ஜர்னல் ஆஃப் பெர்சனாலிடி அன்ட் சோஷியல் சைக்காலஜி என்னும் ஆய்விதழில் வெளியாகவுள்ளது.

குறுகிய தாடை

டேட்டிங் வலைத்தளம் ஒன்றில் இருந்து எடுத்த 14,000 வெள்ளை அமெரிக்கர்களின் புகைப்படங்களை வைத்து தங்களது கணினிவழி ஆய்வுக்குத் தேவையான வினைச்சரம் (அல்கோரிதம்) ஒன்றை அவர்கள் உருவாக்கினார்கள்.

காணொளிக் குறிப்பு,

ஐஃபோன் 10 : முகமறியும் தொழில்நுட்பம்

ஒவ்வொரு நபரின் மூன்று முதல் ஐந்து வரையிலான புகைப்படங்களை ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட ஆய்வாளர்கள், அந்த வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதையே அந்த நபர்களின் பாலியல் தேர்வு என்று எடுத்துக்கொண்டனர்.

எதிர்ப்பாலின ஈர்ப்பு மற்றும் தன் பாலின ஈர்ப்பு உள்ள இரு ஆண்களின் புகைப்படங்களை இந்த மென்பொருளைக் கொண்டு ஆய்வு செய்தபோது அவர்களில் எவர் எத்தகைய பாலின ஈர்ப்பு கொண்டவர் என்பதை 81 சதவீதம் அது சரியாகக் கணித்தது. இவ்விதம் பெண்களின் புகைப்படங்களை ஆய்வு செய்தபோது அது 71 சதவீதம் சரியான முடிவுகளை அளித்தது.

"ஓரினச் சேர்கையாளர்களின் முகங்கள் இரு பாலினத்தவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை" என்றும், "ஆண் ஒருபாலின ஈர்ப்புள்ளவர்கள் நீளமான தாடை மற்றும் நீண்ட மூக்கையும், பெண் ஒருபாலின ஈர்ப்புள்ளவர்கள் பெரிய தாடையையும் கொண்டிருந்ததாக" ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images

வேறொருவிதமான சோதனையில் இந்த மென்மொருள் அவ்வளவு நன்றாக வேலை செய்யவில்லை.

70 ஆண் ஒருபாலின ஈர்ப்புள்ளவர்களின் புகைப்படத்தையும், 930 ஆண் மற்றும் பெண் ஒருபாலின ஈர்ப்புள்ளவர்களின் புகைப்படத்தையும் அளித்து அதில் 100 "ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களை" பிரித்தறிய சொன்னபோது அம்மென்பொருள் 23 பேரை தவறவிட்டது.

டேட்டிங் வலைத்தளத்தில் இருந்து வெள்ளை அமெரிக்கர்களின் புகைப்படத்தை மட்டுமே ஆய்விற்காக எடுத்துக்கொண்டது இந்த ஆய்வின் குறைபாடு என்று இந்த ஆராய்ச்சி பற்றி முதல் முறையாக செய்தியை வெளியிட்ட "தி எகானாமிஸ்ட்" பத்திரிகை தெரிவித்துள்ளது.

பொறுப்பற்ற கண்டுபிடிப்புக்கள்

இந்த ஆராய்ச்சியை கடுமையான விமர்சித்து, அமெரிக்காவைச் சேர்ந்த இரு மாற்றுப் பாலுணர்வு உரிமை அமைப்புக்கள் வெள்ளிக்கிழமை கூட்டறிக்கை வெளியிட்டன.

"இந்த ஆய்வில் அறிவியலும் இல்லை, ஒரு செய்தியும் இல்லை. டேட்டிங் தளங்களில் தங்கள் படங்களைப் பதிவேற்ற விரும்பாத வயதானோர், வெள்ளையர் அல்லாத மாற்றுப் பாலின உணர்வாளர்களைப் புறக்கணிக்கும் இத்தகைய தளங்களின் தன்மையை இது காட்டுகிறது என க்ளாட் என்னும் ஊடக கண்காணிப்பு அமைப்பொன்றின் முதுநிலை டிஜிடல் அலுவலர் ஜிம் ஹல்லோரன் தெரிவித்துள்ளார்.

"எதிர்ப்பாலின ஈர்ப்புள்ளவர்கள் தவறாகக் கணிக்கப்படவும், தமது பாலுணர்வை வெளிப்படுத்துவதில் ஆபத்து உள்ள சூழ்நிலைகளில் உள்ள தன்பாலின ஈர்ப்புள்ளவர்கள் தாக்கப்படவும் இந்த ஆய்வு வழிவகுக்கும்" என்று கூறியுள்ளார் அவர். தங்களுடைய கவலைகள் குறித்து சில மாதங்களுக்கு முன்பே பல்கலைக்கழகத்தை எச்சரித்துவிட்டதாக அவரது அமைப்பு தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

பல லட்சம் மக்களின் வாழ்க்கையை ஆபத்துக்குள்ளாக்கும் இதுபோன்ற ஆராய்ச்சி தமது நற்பெயரை பயன்படுத்திக் கொள்ள பல்கலைக்கழகம் அனுமதிக்கக்கூடாது என்று அந்த அமைப்பின்

ஆய்வு பிரிவு இயக்குனர் அஸ்லான்ட் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இரு ஆய்வாளர்களான பேராசிரியர் மைகேல் கோசின்ஸ்கி மற்றும் இலுன் வாங் ஆகியோர் தங்கள் ஆராய்ச்சியின் மீதான விமசர்னங்களை அவரசரப்பட்ட தீர்ப்புகள் என்றுப குறிப்பிட்டுள்ளனர்.

"எங்களது ஆய்வு முடிவுகள் தவறானதாக இருக்கலாம். ஆனால், அறிவியல் முடிவுகளை அறிவியல் ரீதியில் தரவுகள் போன்றவை மூலமே மறுக்க முடியுமே தவிர, அறிவியல் பயிற்சியற்ற நல்ல எண்ணமுடைய

வழக்கறிஞர்கள் மற்றும் தகவல்தொடர்பு அலுவலர்களால் மறுக்கமுடியாது" என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

"எனினும், ஒருவேளை எங்களின் முடிவுகள் சரியானதாக இருந்தால், அறிவியல் முடிவுகளுக்கு எதிராக செயல்படும் இந்த அமைப்புகள் தாங்கள் எந்த மக்களுக்கு ஆதரவளிக்கிறார்களோ அவர்களுக்கு கெடுதியை உருவாக்கும்" என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

"கவனமாக அணுகவும்"

தனிமனிதரின் பண்புக்கூறுகளை முக அடையாளத்தை வைத்து கண்டறிவது தொடர்பான அறிவியல் ஆய்வுகளின் முடிவுகள், தொடர் ஆய்வுகளின் முடிவுகளோடு ஒத்துப்போகாததால் தோல்வியைத் தழுவின.

முக அமைப்பையும் மூர்க்கத்தனத்தையும் தொடர்புபடுத்தும் ஓர் ஆராய்ச்சி முடிவுகள் இப்படித் தோல்வியைத் தழுவிய ஆராய்ச்சிகளில் ஒன்று.

பட மூலாதாரம், Getty Images

தாம் கருவில் இருக்கும்போது தாக்கம் செலுத்திய ஹார்மோன்களால் மனிதர்களிடம் ஏற்பட்ட நுட்பமான மாற்றங்களை இந்த மென்பொருள் கண்டுபிடிக்கிறது என்று சொல்வதைப் பற்றிய தமது கவலையைத் தெரிவித்தார் பிபிசியிடம் பேசிய வல்லுநர் ஒருவர்.

இந்த நுட்பமான வேறுபாடுகளானது ஆண் ஓரினசேர்கையாளர் மற்றும் எதிர்பாலின ஈர்ப்புள்ளவர்களின் முக அமைப்பில் உள்ள வேறுபாடாக இல்லாமல் அவர்கள் திட்டமிட்டு உருவாக்கிக்கொள்கின்ற தோற்றமாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று

கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் முக ஆராய்ச்சி ஆய்வகத்தை நடத்தும் பேராசிரியர் பெனடிக்ட் ஜோன்ஸ் கூறியுள்ளார்.

"இந்த ஆய்வின் தொழில்நுட்ப விவரங்கள் வெளியானவுடன், இந்த ஆய்வு அறிவுபூர்வமான விமர்சனங்களை எதிர்கொண்டு நிற்குமா என்பதைப் பார்க்கலாம்.

புதிய கண்டுபிடிப்புகளின் பலம் பலவீனங்களை மதிப்பிடும் வாய்ப்பை பரந்த அறிவியல் சமூகமும் பொதுமக்களும் பெறும் வரை அந்தக் கண்டுபிடிப்புகளை எச்சரிக்கையுடன் கையாளவேண்டும் என்று" அவர் கூறினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :