நிமோனியாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ஷாம்பு பாட்டில் ! மருத்துவரின் அசாத்திய கண்டுபிடிப்பு

Dr Chisti holding a device made from plastic bottle and tubing
Image caption டாக்டர் முகம்மது ஜோபெயர் சிஸ்டி

"எனது பயிற்சியின் முதல்நாள் இரவில் மூன்று குழந்தைகளின் இறப்பைப் பார்த்தேன். உதவி செய்யமுடியாமல் அழுதேன்" என்கிறார் டாக்டர் சிஸ்டி

1996 ஆம் ஆண்டு டாக்டர் முகம்மது ஜோபெயர் சிஸ்டி வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான மருத்துவ பிரிவில் பணிபுரிந்தார்.

மூன்று குழந்தைகள் இறந்த அன்று மாலை, நிமோனியாவால் குழந்தைகள் இறப்பதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள உறுதிபூண்டார்.

ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 920,000 குழந்தைகளும் சிசுக்களும் நிமோனியாவால் இறக்கின்றன, பெரும்பாலன குழந்தைகள் இறப்பது தெற்கு ஆசியா மற்றும் ஆஃபிரிக்காவின் சகாரா பாலைவனப் பகுதிகளில் தான்.

இரண்டு தசாப்தங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றும் மலிவு விலை சாதனத்தை கண்டறிந்தார் டாக்டர் சிஸ்டி.

விலையுயர்ந்த கருவிகள்

நிமோனியா நுரையீரலைப் பாதிக்கிறது. ஸ்ட்ரெப்டோகோகஸ் அல்லது நுரையீரல் சின்சைடியல் வைரஸ் (RSV) போன்ற நுண்ணுயிரிகள் நுரையீரலைப் பாதிக்கின்றன.

இதனால் நுரையீரல் வீங்குவதுடன், திரவத்தால் நிரம்புவதால் சுவாசத்தின்போது ஆக்ஸிஜனை உள்ளிழுக்கும் நுரையீரலின் திறன் குறைகிறது.

வளர்ந்த நாடுகளில் நிமோனியா பாதித்த குழந்தைகளின் சுவாசத்திற்கு செயற்கை சுவாச கருவி பயன்படுத்தப்படுகிறது.

இக்கருவி ஒன்றின் விலை 15,000 டாலர்கள் என்பதோடு, அது சிறப்பு பயிற்சி பெற்ற ஊழியர்களால் இயக்கப்பட வேண்டும். இவற்றால் வங்கதேசம் போன்ற வளரும் நாடுகளில் உள்ள மருத்துவமனைகளின் செலவு மிகவும் அதிகரிக்கும்.

நிமோனியாவுக்கு குறைந்த கட்டணத்திலான மாற்றுச் சிகிச்சையை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தபோதிலும், ஏழில் ஒரு குழந்தை நிமோனியாவில் இறந்துகொண்டிருந்தது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் வேலை செய்யும் போது, டாக்டர் சிஸ்டி குமிழி CPAP சாதனத்தைப் பார்த்துள்ளார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நிமோனியாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ஷாம்பு பாட்டில்

இது தொடர்ச்சியான சுவாசவழி அழுத்தத்தை (CPAP) பயன்படுத்தி நுரையீரல் உருக்குலைவதைத் தடுத்து, உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை உட்கிரகிக்க உதவும். ஆனால் இதன் விலை அதிகம்.

டாக்டர் சிஸ்டி சர்வதேச டயாரியா நோய் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்ற வங்கதேசம் திரும்பியபோது, எளிமையான, விலை மலிவான குமிழி CPAP சாதனம் பற்றிய ஆய்வை மேற்கொண்டார்.

அவரும், சக மருத்துவரும் இணைந்து ஐசியூவில் இருந்து தூக்கி எறியப்பட்ட காலி பிளாஸ்டிக் ஷாம்பூ பாட்டிலில் நீர் நிரப்பி அதன் ஒருபுறத்தில் பிளாஸ்டிக் சப்ளை டியூப்களை பொருத்தினார்கள்.

"குழந்தைகள் ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து ஆக்சிஜனை உட்கிரகித்து, ஷாம்பூ பாட்டிலில் பொருத்தப்பட்ட டியூப் வழியாகச் சுவாசத்தை வெளிவிடும்போது நீரில் குமிழிகள் தோன்றும்" என்று அவர் விளக்குகிறார்.

Image caption குமிழிகளிலிருந்து ஏற்படும் அழுத்தம் நுரையீரலின் சிறிய காற்றுப் பைகளை திறக்கிறது.

அந்தக் குமிழிகளிலிருந்து ஏற்படும் அழுத்தம் நுரையீரலின் சிறிய காற்றுப் பைகளை திறக்கிறது.

"4-5 நோயாளிகளிடம் இதை அவ்வப்போது பரிசோதித்தோம். சில மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது" என்கிறார் சிஸ்டி.

வெற்றிகரமான சோதனை

"டாக்டர்கள் மிகவும் கடினமாக உழைத்தார்கள்; ஆக்ஸிஜன், உணவுக்குழாய் மற்றும் நீர் குமிழி தோன்ற ஏதுவான வெண்ணிற பாட்டிலையும் பொருத்தினார்கள்" என்கிறார் கோஹினூர் பேகம். இவரது மகள் ருணாவுக்கு இந்த சாதனத்தின் மூலம் சிகிச்சையளிப்பட்டது.

"சிகிச்சைக்குப் பின் மகள் குணமடைந்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்." என்கிறார் கோஹினூர் பேகம்

இரண்டு வருட ஆய்வுக்குப் பிறகு தனது ஆய்வு முடிவுகளை தி லான்சட் இதழில் டாக்டர் சிஸ்டி வெளியிட்டார்.

குறைந்த ஓட்ட ஆக்ஸிஜனில் சிகிச்சை பெற்றவர்களிடம் ஒப்பிடும்போது, குமிழி CPAP சாதனம் மூலம் சிகிச்சை பெற்றவர்களின் இறப்பு விகிதம் குறைந்திருப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.

வெறும் 1.25 டாலர் மதிப்புடைய இந்த சாதனம் இறப்பு விகிதத்தை 75% வரை குறைத்துள்ளது.

ஆக்ஸிஜனை மிகவும் குறைந்தளவில் பயன்படுத்தும் இந்த சாதனத்தால், மருத்துவமனையின் ஓராண்டு ஆக்ஸிஜன் கட்டணம் 30,000 டாலரில் இருந்து 6,000 டாலராகக் குறைகிறது.

Image caption இந்த சாதனம் மூலம் சிகிச்சையளிக்கப்பட்ட 600 குழந்தைகளில் ருணாவும் ஒருவர்

இதுபற்றிய நாடு தழுவிய ஆய்வு இன்னும் தேவைப்படும்போதிலும், முடிவுகள் ஊக்கமளிக்கிறது என்கிறார் அத்-தின் மகளிர் மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் துறை பேராசிரியர் டாக்டர் அர்ம் லுத்ஃபல் கபீர்.

"எந்தவொரு மருத்துவமனையாலும் இதை வாங்கமுடியும் என்பதால், இறப்பு விகிதத்தைக் கணிசமாக குறைக்கும் பேராற்றலை இது கொண்டுள்ளது என்று நினைக்கிறேன்" என்கிறார் அவர்.

இந்த மலிவு விலை உயிர் பாதுகாப்பு சாதனத்தினால் இதுவரை குறைந்தது 600 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

டாக்டர் சிஸ்டி பதவி உயர்வு பெற்று மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவராக இருந்த போதிலும், மூன்று குழந்தைகளுக்கு தந்தையான அவர், வார்டுகளில் உள்ள குழந்தைகளுடன் விளையாடவும் நேரத்தை ஒதுக்குகிறார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்ட உறுதியை நிறைவேற்றியதை எப்படி உணர்வதாக அவரிடம் கேட்டபோது, "இதை வெளிப்படுத்துவதற்கான மொழி எனக்குத் தெரியவில்லை." என்கிறார்.

வளரும் நாடுகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் CPAP சாதனம் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

"அன்று, நிமோனியாவால் ஏற்படும் இறப்பு விகிதம் பூஜ்ஜியத்திற்கு அருகில் உள்ளது என்று சொல்லமுடியும்" என்கிறார் நம்பிக்கையுடன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்