மார்பக புற்றுநோய்: சிகிச்சைக்கு பின் மீண்டும் நோய் தாக்கும் அபாயம்

  • 11 நவம்பர் 2017
மார்பக புற்றுநோய் படத்தின் காப்புரிமை Science Photo Library

மார்பக புற்றுநோய் சிகிச்சை வெற்றிகரமானதாக இருந்த போதிலும், 15 ஆண்டுகள் கழித்து அது மீண்டும் வர வாய்ப்புள்ளதாக ஒர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நிணநீர்முனைகளுக்கு பரவக்கூடிய புற்றுநோய் மற்றும் பெரிய கட்டிகள் உள்ள பெண்களுக்கு அதிகபட்சமாக மீண்டும் 40% அளவுக்கு புற்றுநோய் வரும் ஆபத்து உள்ளது.

மார்பக புற்று நோய் சிகிச்சையோடு ஹார்மோன் சிகிச்சையும் செய்யும் பட்சத்தில், மீண்டும் இந்த பாதிப்பு வரும் ஆபத்து குறையக்கூடும் என நியூ இங்கிலாந்து ஆஃப் மெடிசின் மருத்துவ சஞ்சிகையில் குறிப்பிட்டுள்ளது.

இருபது ஆண்டுகளில் 63 ஆயிரம் பெண்களின் போக்கை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர். இதில் மார்பக புற்று நோயானது அனைவருக்கும் பொதுவான வடிவத்திலேயே இருந்தது.

புற்றுநோய் உயிரணுக்கள், ஈஸ்ட்ரஜன் எனப்படும் ஹார்மோனால் கிளரப்பட்டு வளர்ந்து, பின்னர் பல இடங்களுக்கு பிரியக்கூடும் வகையாகும்.

ஒவ்வொருவருக்கும் மார்பக புற்றுநோய் சிகிச்சையளிக்கப்படும் போது வழங்கப்படும் டேமாக்சிஃபின் அல்லது அரோமடேஸ் தடுப்பான்கள் ஈஸ்ட்ரஜனின் விளைவுகளை தடுக்கும் அல்லது முழுமையாக நிறுத்திவிடும்.

சிகிச்சை பெற்று 5 ஆண்டுகள் ஆன பிறகு அவர்களது புற்றுநோய் மறைந்துவிட்டாலும், அடுத்த 15 ஆண்டுகளில், நிலையான எண்ணிக்கை உடைய பெண்களுக்கு உடம்பில் மீண்டும் புற்றுநோய் படர்ந்திருப்பது கண்டறியப்பட்டது - சிலருக்கு 20 ஆண்டுகள் கழித்தும் கூட கண்டறியப்பட்டது.

முதன்முதலில் ஏற்கனவே இருந்த புற்றுநோயானது நான்கிற்கும் மேற்பட்ட நிணநீர் முனைகளுக்கு பரவியிருந்த பெண்களுக்கு, அடுத்த 15 ஆண்டுகளில் மீண்டும் புற்றுநோய் வரும் அபாயம் அதிகளவில் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

சிறிய அல்லது குறைந்த அளவிலான புற்றுநோய், நிணநீர் முனைகளுக்கு பரவாமல் இருந்த பெண்களுக்கு மீண்டும் நோய் வர 10 சதவீத அபாயம் மட்டுமே இருக்கக்கூடும்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மார்பகப் புற்றுநோயின் 12 அறிகுறிகள்

குறிப்பிடத்தக்க விஷயம்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முதன்மை ஆராய்ச்சியாளரான டாக்டர் ஹோங்சோ பான் கூறுகையில்," நீண்ட காலங்கள் இருக்கக்கூடும் மார்பக புற்றுநோய் பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பரவும் என்ற இந்த குறிப்பிடத்தக்க விஷயமானது, முதலில் இருந்த புற்றுநோயின் அளவு, அது நிணநீர் முனைகளுக்கு பரவி இருந்ததா இல்லையா என்பதை பொருத்தே இருக்கும்" என்றார்.

சிகிச்சை நிறுத்திய பின் ஐந்தாண்டுகளுக்கு டேமாக்சிஃபின் வழங்கப்படும் போது மூன்றில் ஒரு பகுதி பெண்களுக்கு மீண்டும் புற்றுநோய் வரும் அபாயம் குறைவதாக மருத்துவர்களால் அறியப்பட்டுள்ளது.

புற்றுநோய் சிகிச்சை முடிந்து, பத்து ஆண்டுகளுக்கு ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொண்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் மீண்டும் இந்த நோய் அல்லது இதனால் மரணம் நிகழ்வதை தவிர்க்க முடியும் என சமீபத்திய ஆய்வு பரிந்துரைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Science Photo Library
Image caption புற்றுநோய் உயிரணுக்கள், ஈஸ்ட்ரஜன் எனப்படும் ஹார்மோனால் கிளரப்பட்டு வளர்ந்து பல இடங்களுக்கு பிரியக்கூடும் வகையாகும்.

மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்கு மட்டுமே வேலை செய்யக்கூடும் அரோமடேஸ் தடுப்பான்கள் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆனால், ஹார்மோன் சிகிச்சைகளால் உண்டாகக்கூடும் பக்கவிளைவுகளால் நோயாளிகளின் வாழ்க்கைத் தரம் பாதிப்பதோடு மட்டுமில்லாமல் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதை நிறுத்த இதுவே காரணமாகிவிடும்.

இதில் மாதவிடாய் அறிகுறிகள், ஆஸ்டியோபாரிசிஸ், மூட்டு வலி மற்றும் கார்பல் டனல் நோய்க்குறி ஆகியவையும் உள்ளடங்கும்.

இந்த ஆய்விற்கு நிதியளித்த பிரிட்டன் புற்றுநோய் ஆராய்ச்சியின் மூத்த மருத்துவ ஆலோசகர் பேராசிரியர் ஆர்னி புருஷோத்தமன் கூறும் போது, இந்த ஆராய்ச்சி தொடங்கியதில் இருந்து மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாகவும் மற்றும் அவை டேமாக்சிஃபின்னுக்கு வெவ்வேறு வழிகளில் வேலை செய்ததாகவும் கூறினார்.

எந்த வகை புற்றுநோய்கள் திரும்பி வரக்கூடும் என்று கணிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐந்தாண்டுகளுக்கு பதிலாக பத்து ஆண்டுகளுக்கு ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் எவ்வாறு இது வாழ்க்கைத் தரத்தை பாதிக்கிறது என்ற வேறுபாட்டை அறிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தங்கள் சிகிச்சையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பெண்கள் அவர்கள் மருத்துவர்களிடத்தில் விவாதிக்க வேண்டும் என Breast Cancer Now என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சேலி க்ரீன் புக் கூறினார்.

மேலும், "மார்பக புற்றுநோய் சிகிச்சை பெற்ற அனைத்து பெண்களும் இது குறித்த எச்சரிக்கையாக இருப்பதோடு மட்டுமில்லாமல் மீண்டும் இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது குறித்து அவர்கள் பொது மருத்துவர்கள் அல்லது அவர்களது மார்பக புற்றுநோய் அணியுடன் பேசுமாறும் வலியுறுத்தப்படுகிறது."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :