ஜப்பானில் அதிக நேரம் வேலை செய்பவர்களை வீட்டுக்கு அனுப்பும் ஆளில்லா விமானம்

ட்ரோன்

பட மூலாதாரம், Getty Images

மாலை பணி நேரத்தை தாண்டி அதிக நேரம் பணிபுரிந்தால், ஊழியர்களிடம் சென்று இசையை எழுப்பி அவர்களை அலுவலகத்தை விட்டு வெளியேற்றுவதற்காக ஒரு ட்ரோனை பயன்படுத்த ஜப்பானிய நிறுவனமொன்று திட்டமிட்டுள்ளது.

கடைகள் மூடப்பட்டு வருகின்றன என்று அறிவிக்கப் பயன்படுத்தப்படும் பாடலான "ஆல்ட் லாங் சைனை" இசைத்தபடி, அலுவலக நேரம் முடிந்தவுடன் இந்த ட்ரோன்கள் அலுவலகத்தை சுற்றி வரும்.

ஜப்பான் பல ஆண்டுகளாக மரணங்களை கூட ஏற்படுத்தக்கூடிய விடயமான மிதமிஞ்சிய பணி நேரத்தையும், அதனால் ஏற்படும் உடல்ரீதியான பிரச்சினையையும் கட்டுப்படுத்த முயல்கிறது.

இந்த புதிய ட்ரோன் திட்டத்தால் கவரப்படாத வல்லுநர்கள், இதை ஓர் "அற்ப" யோசனை என்று குறிப்பிட்டுள்ளனர்.

அலுவலக பாதுகாப்பு மற்றும் துப்புரவு நிறுவனமான டாய்செய், ப்ளூ இன்னோவேஷன் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனமான என்.டி.டி ஈஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து அந்த ட்ரோனை உருவாக்கும் என்று ஜப்பானிய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கேமரா பொருத்தப்பட்டுள்ள அந்த ட்ரோனானது, பிரபல ஸ்காட்டிஷ் இசையை இசைத்தபடி அலுவலகத்தை சுற்றி வரும்.

"ஆல்ட் லாங் சைனை பாடியபடி ட்ரோன் எப்போது வேண்டுமானாலும் வரும் நீங்கள் எதிர்பார்க்கும்போது உங்களால் வேலை செய்ய முடியாது" என்று டாய்செயின் இயக்குநர்களுள் ஒருவரான நோரஹிரோ கடோ எ.எஃப்.பி செய்தி முகமையிடம் கூறினார்.

2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ட்ரோன் சேவையை முதலில் தங்களது சொந்த நிறுவனத்திற்குள்ளேயே சோதனை செய்வும், பிறகு மற்றவர்களுக்கு இதை வழங்குவதற்கும் டாய்செய் திட்டமிட்டுள்ளது.

இது ஒரு பயனுள்ள கருவியா?

"இது உதவுமா? என்ற கேள்வியின் சுருக்கமான விடை இல்லை என்பதாகும்" என்று ஷிஜியோகா பல்கலைக்கழகத்தின் மேலாண்மை மற்றும் தகவல் தொடர்பு பேராசிரியரான செய்ஜி டேக் ஷிட்டா பிபிசியிடம் கூறினார்.

"இந்த பிரச்சனைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே, இதுபோன்ற அற்பமான விடயங்களை நிறுவனங்கள் செய்கின்றன." என்று அவர் மேலும் கூறினார்.

அதிகப்படியான நேரம் பணிபுரிவது சார்ந்த பிரச்சனை என்பது அலுவலக கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றி உள்ளது. இதை அடிப்படையிலிருந்து தடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

"விழிப்புணர்வை உருவாக்குவது என்பது மிகவும் முக்கியமானது. ஆனால், இவ்விடயத்தை பொறுத்தவரை இது கிட்டத்தட்ட ஒரு வெற்றுப்பேச்சு என்பதே எனது கருத்தாகும்" என்கிறார் அவர்.

ஒசாகா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியரான ஸ்காட் நார்ட், "இந்த ரோபோக்கள் அளிக்கும் தொல்லையின் காரணமாக பணியாளர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறினால், அவர்கள் தங்களின் முடிக்கப்படாத பணிகளை வீட்டிற்கு எடுத்து செல்லும் நிலை ஏற்படும்" என்று கூறினார்.

"மேலதிக நேர வேலைகளை குறைக்க வேண்டுமென்றால், வேலைச் சுமைகளை குறைப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நேரத்தை வீணடிக்கும் பணிகளைக் குறைத்தல் மற்றும் ஜப்பானிய பணிச்சூழலில் பெயர்போன ஒன்றான போட்டி பாணியில் செயல்படுவதை ஒழிப்பது அல்லது அதிக தொழிலாளர்களை பணியமர்த்துவதன் மூலம் இந்நிலையை மாற்றவியலும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஜப்பான் அதன் பல்லாண்டுகால வேலை கலாச்சாரத்தை முறியடிப்பதற்கு போராடி வருகிறது.

அதிக நேரம் பணிபுரியும் பிரச்சனையானது அதற்கென ஒரு வார்த்தையே உருவாகுமளவுக்கு சென்றுள்ளது. கரோஷி என்ற ஜப்பானியச் சொல்லுக்கு அதிக நேர வேலைப்பளுவால் உயிரிழப்பது என்று பொருள்.

குறிப்பாக, இந்த பழக்கமானது ஒரு நிறுவனத்தில் புதியதாக இணைபவர்களுக்கு பக்கவாதம், இதயம் சார்ந்த நோய்கள் மற்றும் தற்கொலை ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது.

கடந்த அக்டோபரில் ஒரு இளம் பெண் தொழிலாளர் தற்கொலை செய்துகொண்ட பின், தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காக விளம்பர நிறுவனமான டென்ட்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன் பின்னரே, உயிரிழந்த பெண் ஒரு மாதத்தில் பணிநேரத்தை தவிர்த்து 159 மணிநேரம் அதிமாக பணிபுரிந்தார் என்பது தெரியவந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசாங்கம் சிறப்பு வெள்ளிக்கிழமையை அறிமுகப்படுத்தியது. அதன்படி நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமையன்று மதியம் 3 மணிக்கு தங்கள் ஊழியர்களை பணியை முடிந்துக் கொண்டு வெளியே அனுப்பும்படி ஊக்குவிக்கப்படுகின்றன.

ஆனால், இத்திட்டமானது இதுவரை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும், பல ஊழியர்கள் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பது தங்களது மிகவும் பரபரப்பான நாட்களில் ஒன்றென்று தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :