விநோத விண் கல்லில் வேற்றுக்கிரகச் சுவட்டைத் தேடும் ஆய்வு

விண்கல் படத்தின் காப்புரிமை ESO

வினோதமான சுருட்டு வடிவ விண் கல் ஒன்று சூரியனின் திசையில் அதிவேகமாகப் பயணித்து கொண்டிருந்தது கடந்த அக்டோபரில் வானியலாளர்கலால் கவனிக்கப்பட்டது. இதில் வேற்றுக் கிரகத் தொழில்நுட்ப சாதனங்களோ, உயிரின் சுவடுகளோ இருக்குமா என்பதற்கான ஆராய்ச்சி தற்போது நடக்கிறது.

வழக்கத்துக்கு மாறான நீள வடிவிலான இந்த விண் கல் அக்டோபர் 19ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

அதனுடைய கூறுகள், அந்தப் பொருள் இன்னொரு நட்சத்திரத்தில் இருந்து உருவானது என்பதை காட்டுகின்றன. நம்முடைய விண்வெளிப் பகுதியின் அருகில் கண்டறியப்பட்டுள்ள இத்தகைய முதல் பொருள் இதுவே.

செல்வந்தர் யுரி மில்னரால் நிதி ஆதரவு அளிக்கப்படும் ஒரு ஆய்வுத் திட்டம், இந்தப் பொருளில் இருந்து சமிக்கைகள் ஏதேனும் வருகிறதா என்பதைப் பார்க்க ஒரு ரேடியோ தொலைநோக்கியைப் பயன்படுத்தும்.

வானியலாளர்கள் இந்த விண்கல்லை கண்காணிக்கும் இந்த ஆய்வுக்குழுவின் முயற்சிகள் புதன்கிழமை தொடங்கியுள்ளது.

இந்த விண்கல் தற்போது நம்முடைய சூரிய குடும்பத்தில் இருந்து நான்கு வேறுபட்ட வானொலி அலைவரிசை பகுதிகளை விரைவாகக் கடந்து, சூரிய மண்டலத்தை விட்டு விலகிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

வெஸ்ட் வெர்ஜீனியாவில் இருக்கும் ராபர்ட் சி பைர்ட் கிரீன் பாங்க் தொலைநோக்கியில் மேற்கொள்ளப்படும் முதல் கண்காணிப்பு ஆய்வு, 10 மணிநேரம் நீடிக்கும்.

'ஒமுவாமுவா' என்று அழைக்கப்படும் இந்தப் பொருளின் மீது நடத்தப்பட்ட முந்தைய கண்காணிப்புகள் விநோதமான, நீள வடிவத்தில் அதனை சுருட்டு போல தோன்றுவதாக காட்டியுள்ளன.

படத்தின் காப்புரிமை NASA/JPL-CALTECH/IAU

மில்னரின் 'பிரேக்த்ரூ லிசன்' திட்டம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில். "விண்மண்டலங்களின் வாயு மற்றும் தூசி ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டு நட்சத்திர மண்டலங்களுக்கு இடையே செல்லும் ஓர் உத்தேச வாகனத்தின் வடிவம் ஓர் ஊசி போன்றதாகவோ, சுருட்டு போன்றதாகவோ இருக்கவே வாய்ப்பு உள்ளது," என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பெர்க்லே எஸ்இடிஐ ஆய்வக மையத்தின் இயக்குநர் ஆன்ட்ரூ சியமியன், "அதிவேகமாகச் செல்லும் விண் பொருள்களில் இருக்கச் சாத்தியமுள்ள டிரான்ஸ்பாண்டர்களை தமது அதி நவீன உணர்திறன் கருவிகளால் எட்ட முடிகிறதா என்பதைப் பார்க்க பிரேக்துரூ லிசன் திட்டத்துக்கு ஒமுவாமுவாவின் வருகை ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது," என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தப் பொருள் செயற்கையானதாகவோ அல்லது இயற்கையானதாகவோ இருந்தாலும் கவனித்துப் பார்க்க உகந்த ஒன்று என்கிறார் சியமியன்.

இந்த திட்டத்தைச் சேராத, டோர்கிங்கிலுள்ள யுசிஎல் முல்லார்டு விண்வெளி அறிவியல் ஆய்வகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆன்ட்ரூ கெயேற்றடஸ், "இந்தப் பொருளில் உயிரின் தடயம் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிவதற்கான சோதனையாக இது இருக்குமென நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Science Photo Library

"இது மிகவும் சாத்தியமற்றது என நினைக்கிறேன், ஏனென்றால் அது வேறு எங்கோ உள்ள கிரக அமைப்பின் எச்சம். வேற்று கிரகங்களில் உயிர்கள் வாழ்வதற்கு சாத்தியம் இருக்கிறதா என்று ஆராய்வதற்கு சிறந்த வழிகள் 2020ம் ஆண்டு செலுத்தப்பட இருக்கும் 'எக்ஸோமார்ஸ் திட்டம்' போன்றவையாகும். அதற்கு நாம் கேமரா அமைப்பை கட்டியமைக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"சாத்தியமில்லை என்றபோதும் கவனித்துப் பார்க்கலாம்" என்று அவர் மேலும் கூறினார்.

தரையில் அமைந்திருக்கும் தொலைநோக்கிகள் மூலம் விண்கல்லை கண்காணித்து ஆய்வு செய்துள்ள பிற ஆய்வாளர்கள், சூரிய குடும்பத்திற்கு வெளியில் உள்ள இயற்கைப் போலவே இது தோன்றுகிறது என்கிறார்கள்.

கரிம சேர்மங்களை குறிக்கிற சிவப்பு நிறத்தில் இது உள்ளது.

இது அடர்த்தியான அமைப்பை கொண்டுள்ளதாக அளவீடுகள் காட்டுகின்றன. பாறை மற்றும் உலோகத்தாலும் இது உருவாகியுள்ளது. ஆனால், சிறிய அளவிலான நீரும் பனியும் இதில் இருக்க வாய்ப்புள்ளது.

ஒமுவாமுவா இன்னொரு நட்சத்திரத்தை சுற்றியே உருவாகியிருந்தாலும், இது சூரிய குடும்பத்திற்குள் வருவதற்கு முன்னால் பல மில்லியன் கணக்கான ஆண்டுகளாக, எந்தவொரு நட்சத்திர அமைப்போடு இணையாமல், பால்வீதி வழியாக சுற்றி கொண்டிருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

'ஒமுவாமுவா' என்ற இந்த விண்கல்லின் பெயர், ஹவாய் மொழியில் "தெலைவிலிருந்து முதலில் வந்துள்ள தூதர்" என்று பொருள்படுகிறது.

மக்கள் பார்வையில் அகப்பட்ட பிரகாசமான விண்கல்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
எரிந்து விழுந்த பிரகாசமான விண் கல்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்