மாணவர் போராட்டத்தால் 105 ஆண்டுகளில் முதல் முறையாக தடைபட்ட இந்திய அறிவியல் மாநாடு

  • சதீஷ் ஊறுகொண்டா
  • பிபிசி தெலுங்கு
அறிவியல் மாநாடு

பட மூலாதாரம், ISC105.Org

படக்குறிப்பு,

உஸ்மானியா பல்கலைக்கழக கலைக் கல்லூரி வளாகம்

இந்திய அறிவியல் கழகத்தின் 105 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக இம்மாநாடு காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

உஸ்மானியா பல்கலைக்கழக அதிகாரிகள், பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக இந்நிகழ்வை நடத்த முடியாது என்று கூறியுள்ளனர்.

இந்த மாநாடு, 2018 ஜனவரி 3-இல் இருந்து 7 வரை நடத்தப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இந்திய அறிவியல் மாநாடு தான் பிரதமர் உரையாற்றும் முதல் நிகழ்வாகும். மாநாடு நடத்தப்படும் தேதி மற்றும் இடம் பொதுவாக ஓர் ஆண்டிற்கு முன்னதாகவே முடிவு செய்யப்படும்.

பல்வேறு நாடுகளிலிருந்து விஞ்ஞானிகள் மற்றும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், இந்திய அறிவியல் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பது வழக்கம்.

பட மூலாதாரம், ISCA Website

படக்குறிப்பு,

பல்கலைக்கழக வளாகத்தில் 105 ஆவது இந்திய அறிவியல் மாநாட்டை நாங்கள் நடத்தும் நிலையில் இல்லை என்று இந்திய அறிவியல் கழகத்தின் இணையத்தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

தெலங்கான மாநிலம் உருவான பின்னர், ஹைதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த முதல் அறிவியல் மாநாடு இதுதான்.

''உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பல்கலைக்கழக வளாகத்தில் சில சிக்கல்கள் காரணமாக 105 ஆவது இந்திய அறிவியல் மாநாட்டை நாங்கள் நடத்தும் நிலையில் இல்லை என்று கூறியுள்ளார்'' என்று இந்திய அறிவியல் கழகத்தின் இணைய தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், OU WEBSITE

படக்குறிப்பு,

இது எனது முடிவல்ல என கூறும் பல்கலைக்கழக துணை வேந்தர்

அறிவியல் மாநாட்டை நடத்த முடியாது

டிசம்பர் மூன்றாம் தேதி, முதுகலை இயற்பியல் பயின்று வந்த மாணவர் முரளி, பல்கலைக்கழக வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களிடமிருந்து இதுபோன்ற மேலும் இரண்டு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளது.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, அறிவியல் மாநாட்டை எங்களால் நடத்த இயலாது'', என்று பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ராமச்சந்திரன் பிபிசியிடம் தெரிவித்தார்.

"இது, சமீபத்தைய சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, அரசாங்க பிரதிநிதிகள், அறிவியல் கழகம் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளால் எடுக்கப்பட்ட ஒரு கூட்டு முடிவாகும்'' என்று பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கூறினார்.

பட மூலாதாரம், OU

படக்குறிப்பு,

உஸ்மானியா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி

பல்கலைக் கழக அதிகாரிகள் கடந்த மூன்று மாதங்களாக கடுமையாக உழைத்து வருகின்றனர்; இந்திய அறிவியல் மாநாடு நடக்கவிருந்த தேதியைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் தேர்வுகளை அதற்கேற்றாற்போல் ஒத்திவைத்தனர் என பல்கலைக்கழக செய்தி வெளியீட்டில் கூறப்பட்டிருந்தது.

ஒரு கட்டத்தில் இந்த நிகழ்வை வேறொரு இடத்தில் நடத்தவும், மாநாட்டின் மீதமுள்ள நிகழ்ச்சிகளை பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தவும் அவர்கள் எடுத்துள்ள முடிவு குறித்தும் இந்த செய்தி வெளியீட்டில் விளக்கப்பட்டிருந்தது.

தேசிய அறிவியல் மாநாட்டின் பிரதிநிதிகளோடு கலந்தாலோசித்தபின் மாநாடு நடைபெறும் தேதி முடிவு செய்யப்படும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், ISC105.Org

படக்குறிப்பு,

இந்த மாநாடு, 2018 ஜனவரி 3-இல் இருந்து 7 வரை நடத்தப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது

இது எனது முடிவல்ல- துணை வேந்தர்

''பல்கலைக்கழக மாணவர்கள் இந்த மாநாடு நடத்தப்படுவதை எதிர்க்கின்றனர் என்று சொல்வது சரியல்ல. உண்மையில், அவர்கள் இந்த நிகழ்வை வரவேற்றனர்''என்று பிபிசியிடம் ராமசந்திரன் விளக்கமளித்தார்.

இந்திய அறிவியல் மாநாட்டை நடத்துவதற்காக மாணவர்கள் பல்கலைக்கழக விடுதி அறைகளை காலி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள் என்ற செய்தியை மறுத்த அவர், விடுதியில் பழுது வேலைகளை முடிக்கவேண்டும் என்பதற்காகதான் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை காலி செய்யச் சொயதாக விளக்கமளித்தார்.

மாணவர்கள் அதைத் தவறாக புரிந்துகொண்டனர். பின்னர் பல்கலைக்கழக அதிரிகள் அளித்த விளக்கத்தால் மாணவர்கள் நம்பிக்கையடைந்துள்ளதாக அவர் கூறினார்''.

'' நேற்று வரை, மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தோம்; ஆனால் அது இங்கு நடக்கப்போவதில்லை என்பது கவலையளிக்கிறது,'' என்றார்.

அறிவியல் மாநாடு நடத்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை- உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் ''இந்த மாநாட்டிற்கு நான் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை,'' என்றுவேலையில்லாத மாணவர்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர் மனாவட்டா ராய் பிபிசியிடம் கூறினார்.

இந்த முடிவு அரசாங்கத்தின் தோல்வியைப் பிரதிபலிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

"உலகளாவிய தொழில் முனைவோர் மாநாட்டிற்கு இவான்கா டிரம்ப் வந்த போதும் உலக தெலுங்கு மாநாட்டிற்கும் பல்வேறு குழுக்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. இருந்தபோதும் அவர்கள் அதை நடத்தினர், இப்போது மட்டும் ஏன் பயப்படுகின்றனர்? என்று அவர் கேள்வியெழுப்பினார்.

மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேற்றிய பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை குறித்து கேள்வியெழுப்பியது உண்மை என்று அவர் ஒப்புக்கொண்டார். மேலும் மாணவர்கள் இல்லாமல் எப்படி அறிவியல் மாநாட்டை பல்கலைக்கழகம் நடத்தலாம் என்பதற்கு விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அறிவியல் மாநாட்டை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

பட மூலாதாரம், ISC105.Org

படக்குறிப்பு,

105 ஆவது இந்திய அறிவியல் மாநாடு

27-ஆம் தேடி முடிவு எடுக்கப்படலாம்

டிசம்பர் 19 ம் தேதி மாநாட்டை நடத்த முடியாதது குறித்து இந்திய அறிவியல் கழகத்திற்கு உஸ்மானியா பல்கலைக்கழகம் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது என்று இந்திய அறிவியல் கழகத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் கங்காதர், பிபிசி செய்தியாளர் பல்லா சதீஷிடம் கூறினார்.

அறிவியல் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட பல்கலைக்கழகத்திற்கு மூன்று முறை நாங்கள் வந்தோம்; எல்லாம் சரியாக நடந்துகொண்டிருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கையில் இந்த திடீர் முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்பதை எங்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை'',என்றார் அவர்.

2018 அறிவியல் மாநாடு குறித்த முடிவு, டிசம்பர் 27 அன்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ள நிர்வாகக்குழு சந்திப்பின்போது எடுக்கப்படலாம், என்று அவர் கூறினார்.

''மாநில அரசு மாநாடு நடைபெறும் இடத்தை மாற்றுவதில் எங்களுக்கு ஆட்சேபணையில்லை, ஆனால் மாநில அரசின் ஆதரவு இல்லாமல் மாநாட்டை நடத்துவது சாத்தியமில்லை'' என்றார்.

''நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் அயல்நாட்டு விஞ்ஞானிகள் உட்பட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்குபெறுவதற்கான நுழைவுசீட்டை வாங்கியுள்ளனர். இந்த சமயத்தில் உஸ்மானிய பல்கலைக்கழகதிடம் இருந்து வந்த இந்த செய்தி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது'' என்றார் அவர்.

மாணவர்கள் போராட்டம் குறித்து காவல் துறைக்கு கிடைத்த தகவல்

உள்ளூர் செய்தியறிக்கைகளின் படி, தலித்துகள் மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் அறிவியல் மாநாட்டிற்கு எதிராக போராட்டம் நடத்தலாம் என்று காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

ஹைதராபாத் காவல்துறை ஆணையர் ஸ்ரீனிவாஸ் ராவ், உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் A மற்றும் C மைதானங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செவ்வாயன்று ஆய்வு செய்தார்.

முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் யூனியன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு இந்த நிலவரம் குறித்து காவல்துறையினர் விளக்கினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :