முதல் ஐ ஃபோன் அறிமுகப்படுத்தும்முன் ஆப்பிள் எடுத்த 4 முக்கிய முடிவுகள்

ஐஃபோன்

சரியாக 11 வருடங்களுக்கு முன்னால் சிலிக்கன் வேலியில், நீல நிற ஜீன்ஸ், கருப்பு நிற சட்டை அணிந்து வந்த அவர் தனது கால் சட்டைப் பையில் இருந்து ஒரு சிறு இயந்திரத்தை எடுத்து ''புரட்சிக்கான ஒரு துண்டு இது'' என குறிப்பிட்டார். அவர் சொன்னது சரிதான்.

அந்த மனிதர் பெயர் ஸ்டீவ் ஜாப்ஸ். அந்த கையடக்க இயந்திரம்தான் முதல் ஆப்பிள் ஐஃபோன்.

ஐ ஃபோன் பயன்பாட்டுக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அந்த திறன்பேசி உருவான கடினமான பாதையின் நான்கு மைல் கல்களாக இருந்த முக்கிய முடிவுகள் இவை:

சான் ஃபிரான்சிஸ்கோவில் மாஸ்கோன் மையத்தில் ஜனவரி 9,2007 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட அந்த ஐஃபோன் வரலாற்றின் முதல் திறன்பேசி கிடையாது. ஐபிஎம், மோட்டோரோலா, சோனி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே சில வகை கைப்பேசிகளை விற்றுவந்தன. வெறும் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் அனுப்புவதை விடவும் அதிக அம்சங்கள் கொண்ட செல்பேசிகள் அவை.

ஆனால் ஐஃபோன் மற்ற கைப்பேசிகளில் இருந்து பார்க்கவும், அதனை பயன்படுத்தும் போது உணர்வதிலும், அந்த செல்பேசி செயல்படும் விதத்திலும் வித்தியாசமாக இருந்தது. இன்று வரை அது நமது வாழ்வியல் முறைகளில் கூட மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

எந்த புதுமை முயற்சிகளையும் போலவே பல தோல்விகள், பிரிவுகள், பிளவுகள், சறுக்கல்கள் ஆகியவற்றுக்குப் பிறகே ஐ ஃபோன் கனவு நனவானது. வெளியிடப்படுவதற்கு முன்பு இரண்டாண்டு காலமாக அபாயகரமான, இரக்கமற்ற அதிரடி முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.

1. கைப்பேசி உருவாக்குவதா இல்லையா?

1997-இல் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்துக்கு திரும்பினார். முன்னதாக அந்த நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸை அதே நிறுவனமே வெளியேற்றியிருந்தது. மீண்டும் நிறுவனத்துக்குள் வந்தபிறகு ஸ்டீவ் சில திட்டங்களை ரத்து செய்தார் மேலும் குறிப்பிட்ட சில திட்டங்களில் மட்டும் நிறுவனம் கவனம் செலுத்தச் செய்தார். ஆகவே ஆப்பிள் நிறுவனத்துக்குள் எந்த திட்டமாவது செயல்பாட்டுக்கு வரவேண்டுமெனில் ஸ்டீவிடமிருந்து பச்சை சிக்னல் பெறுவது மிகவும் அவசியமாக இருந்தது.

அந்த காலகட்டங்களில் ஸ்டீவ் செல்பேசிகளை வெறுத்தார். ஆகவே அதில் கவனம் செலுத்தவில்லை ஆனால் இசைத் துறையில் நிறைய வாய்ப்புகள் இருப்பதைப் பார்த்தார். ஆகவே 2001-ல் ஐ பாட் வந்தது.

ஆனால் சில புது பல்லூடக செல்பேசிகளில் எம்பி3 இசைகளை கேட்கக்கூடிய வசதி இருந்தது. அவற்றை ஐ பாடுக்கு அச்சுறுத்தலாகப் பார்த்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆகவே 2005-இல் மோட்டோ ஆர் ஓ கே ஆருக்கு தயக்கத்துடன் ஒப்புதல் சொன்னார். அந்த மோட்டோரோலா நிறுவனத்தின் செல்பேசியில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ டியூன்கள் இடம்பெற்றன. விசைப்பலகை மற்றும் திரை இருப்பது போன்ற மேம்பட்ட ஐ பாடாக அந்த மோட்டோரோலா மாடல் இருந்தது.

''மோட்டோரோலாவுடன் கூட்டு சேர்வது ஐ பாடுக்கு நிலவும் அச்சுறுத்தலை சமாளிக்கும் எளிய முயற்சியாக இருந்தது'' என 2017-இல் வெளியான தனது புத்தகமான 'தி ஒன் டிவைஸ் - த சீக்ரட் ஹிஸ்டரி ஆஃப் த ஃபோன்' என்ற நூலில் பிரைன் மெர்ச்சன்ட் எழுதியுள்ளார்.

ஆனால் மோட்டோரோலா நிறுவனத்தின் அந்த மாடல் பரவலான பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக டெமோ காட்டும்போதே சரியாக செயல்படவில்லை. மேலும் ஐ பாட் விற்பனையையும் மந்தமாக்கியது. இவை ஸ்டீவை அவரின் முடிவுகளை மறுபரிசீலனைக்கு உள்ளாக்கச் செய்தன. ஆப்பிள் தனது முதல் சொந்த செல்பேசியை உருவாக்க வேண்டுமென அவர் முடிவெடுக்கத் தூண்டின.

2. மேக் செல்பேசி VS ஐ போன் செல்பேசி

ஆப்பிள் இன்ஃபினிட் லூப் வளாகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஐ ஃபோனை உருவாக்க இரண்டு சாத்தியமான வழிகளைப் பார்த்தார்கள். முதலாவதாக ஏற்கனவே இருக்கும் ஐ பாட்டில் அலைபேசி அம்சங்களைச் சேர்க்கலாம் என்றார்கள். அந்த செயல்திட்டத்திற்கு பி1 என்ற குறியீட்டுப் பெயர் வைத்தனர். இரண்டாவதாக மேக் மென்பொருள் மூலமாக பல்வகை தொடுதிரையை வைத்து பரிசோதிக்கும் செயல்திட்டத்திற்கு பி2 என குறியீட்டுப் பெயர் வைக்கப்பட்டது. ''ஆகவே ஆப்பிளுக்குள்ளேயே இரண்டு செயல்திட்டங்களும் ஐ ஃபோனாக மாற கடும் போட்டி போட்டன'' என்கிறார் மெர்ச்சன்ட்.

பி1 குழுவானது ஐ பாடுக்குள் செல்பேசி அம்சங்களை திணிக்க முயன்றது. ஐ பாடுக்குள் இருக்கும் ரோட்டரி சக்கரம் பாடல்களை தேடி கேட்க உதவும். அதனை செல்பேசி பயன்பாட்டுக்கு மாற்ற அதே சக்கரம் மூலம் எண்கள் மற்றும் எழுத்துக்களை சுழற்ற திட்டமிடப்பட்டது. ஆனால் அது தொந்தரவாக இருந்தது. ஒரு குறுஞ்செய்தி அல்லது இமெயில் அனுப்ப ஒவ்வொரு எழுத்தையும் தட்டச்சு செய்ய வேண்டும். ஐ பாட் குழு தோல்வியடைந்தது.

மறுப்பக்கம் பி2 குழு ஒரு முன்மாதிரியை உருவாக்கியது. ஒரு பெரிய தொடுதிரையானது மனிதர்கள் அந்த திரையில் தொடுவதன் மூலம் இயங்கியது. மாதிரி செயல்பாட்டை பார்த்த ஸ்டீவ் ஜாப்ஸ் அதனை நம்பத் தயாரானார். '' இதைத்தான் நான் செல்பேசியில் புதிய அம்சமாக சேர்க்க விரும்பினேன்'' என ஜாப்ஸ் கூறினார்.

ஆகவே பயனர் இடைமுகத்தை வடிவமைக்கவும், பெரிய தொடுதிரையை செல்பேசிக்காக கடன் அட்டை அளவிற்கு குறைக்கவும் பொறியியலாளர்கள் தூக்கமில்லாத இரவுகளை செலவழித்தனர். இறுதியில் ஐ ஃபோனின் எக்ஸ் இயக்க முறைமைக்கு நிரல்கள் வெற்றிகரமாக எழுதப்பட்டன.

3. விசைப்பலகை வைக்கலாமா அல்லது வேண்டாமா?

2006-ஆம் ஆண்டு வாக்கில் வெளிவந்த மேம்படுத்தப்பட்ட செல்பேசிகளான மோட்டோ க்யூ, பிளாக்பெரி மற்றும் நோக்கியா இ62 போன்றவற்றில் அடிப்படை இணைய அணுகல் இருந்தது. ஆப்பிளின் சொந்த ஐ பாடில் வீடியோ வசதிகள் மற்றும் விளையாட்டுகள் இருந்தன. ஆனால் ஐ ஃபோனில் ஆப்பிள் நிறுவனம் வீடியோ பார்ப்பதற்கு நல்ல வசதிகள் மற்றும் பபயனருடன் ஊடாடும் வசதியை ஏற்படுத்த விரும்பியது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மிகவும் அரிய வகை புற்றுநோயால் ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்தார்

2007-இல் முதல் ஐ போனை அறிமுகப்படுத்திய போது, ஜாப்ஸ் நான்கு சமகால செல்பேசிகளை திரையில் சுட்டிக்காட்டினார். அவர் பேசுகையில் '' இதில் பிரச்னை என்னவெனில் இவை மிகவும் கீழே இருக்கின்றன'' எனக் கூறியவாறு அந்த நான்கு செல்பேசிகளின் விசைப்பலகையை சுட்டிக்காட்டினார். '' நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி இந்த விசைப்பலகைகள் எப்போதும் இருக்கின்றன. இந்த கட்டுப்பட்டுப் பொத்தான் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு செயலுக்கும் வித்தியாசமான பயனர் இடைமுகம் தேவை. மேலும் அதற்கான பிரத்யேக பொத்தான்கள் தேவைப்படும்'' எனச் சொன்னார் ஸ்டீவ்.

விசைப்பலகையின்றி ஐஃபோன் செல்பேசியை உருவாக்கவேண்டும் என்பது ஸ்டீவின் முக்கிய முன் நிபந்தனையாக இருந்தது. பிபிசியின் டேவ் லீயிடம் டோனி ஃபாடெல் கூறுகையில் விசைப்பலகை குறித்த சண்டை நான்கு மாதங்களுக்கு நீடித்தது என்றார்.

''விசைப்பலகைக்கு ஆதரவானவர்களிடம் பேசும்போது ஜாப்ஸ் ஒரு முறை '' எங்கள் கருத்தை ஒப்புக்கொள்ளாதவரையில் இந்த அறைக்குள் நீங்கள் மீண்டும் வர முடியாது. இந்த குழுவில் இருக்க விருப்பமில்லையென்றால் இருக்க வேண்டாம்.'' என்றார். அதன் பின்னர் ஒரு நபர் அந்த அறைக்கு வெளியே அனுப்பப்பட்டார். அதன் பிறகு அனைவரும் அவரது கருத்தின் தீவிரத்தை உள்வாங்கிக்கொண்டு வழிக்கு வந்தார்கள்'' என்றார் ஃபாடெல்.

அதனால் இன்றைய திறன்பேசிகளுக்கு எல்லாம் ஆதாரமாக இருப்பது அன்றைய ஐ -போனின் முதல் தொடுதிரை திறன் பேசியே.

4. தொடு பேனா வேண்டுமா இல்லை புறக்கணிக்கலாமா?

ஸ்டீவால் இன்னொரு விஷயம் சரி செய்யப்பட்டது. ஐ ஃபோனை இயக்க உங்களுக்கு ஒரு விரல் தேவை. ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் அப்போதைய தலைமை செயல் நிர்வாகிகளில் ஒருவரான ஃபாடெல் கூறுகையில் '' ஐ போனை நாம் தொடு பேனா உதவியுடன் இயக்க வேண்டும். ஏனெனில் அதுதான் சரியானது என நமக்குத் தெரியும்'' எனச் சொல்லியிருந்தார்.

நீங்கள் உங்கள் விரலை மட்டும் பயன்படுத்துங்கள் என தத்துவார்த்தக் குறிப்போடு ஸ்டீவ் பேசினாலும் ஒரு நாள் நாம் தொடு பேனாவை பயன்படுத்தும் நிலை வரும் என நாங்கள் அறிந்திருந்தோம் என ஃபாடெல் பிபிசி செய்தியாளர் லீயிடம் கூறினார்.

ஸ்டீவ் தொடு பேனாவை வெறுத்தார். ஆனால் முரண்பாடாக ஜாப்ஸை தொடர்ந்து செயல் தலைவரான டிம் குக் காலத்தில் 2015-ஆம் ஆண்டு ஆப்பிள் பென்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும், பல போர்ட் ரூம் சந்திப்புகள், தொழில்நுட்பவாதிகளின் அறிவியல் பூர்வமான சண்டைகள், சாத்தியமற்ற காலக்கெடுகள் மற்றும் நவீன காலத்தின் விரைவான இயக்கங்கள் குறிப்பிடத்தக்க ஒரு விஷயத்தை உருவாக்கின. கேமரா, ஒலி மெயில், வைஃபை, புளூடூத், பிரத்யேக சஃபாரி உலாவி, கூகுள் மேப்ஸ், 3.5 அங்குல தொடுதிரை என பல அம்சங்களுடன் முதல் ஐ ஃபோன் வெளியானது.

ஒரு சிறு தகவல் :-

முதல் ஐ போன் என்பது ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்படவில்லை, அது டிசம்பர் 2006 -ஆம் ஆண்டு சிஸ்கோ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. எழுத்தெண்கள் நிறைந்த சலிப்பூட்டும் வடிவம் கொண்டது அந்த செல்பேசி. சில வாரங்கள் கழித்து ஸ்டீவ் ஜாப்ஸ் மேடையில் '' ONE MORE THING'' என ஐபோனை அறிமுகப்படுத்தினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :