சீன ஆய்வகத்தில் பிறந்த `குளோனிங் குரங்குகள்`

குளோனிங் செய்யப்பட்ட குரங்குகள் படத்தின் காப்புரிமை Chinese Academy of Sciences

உலகின் முதல் குளோனிங் மறிஆடு உருவாக்கப்பட்ட அதே தொழிற்நுட்பத்தில் சீனா ஆய்வகத்தில் இரண்டு குரங்குகள் பிறந்துள்ளன.

சில வாரங்களுக்கு முன் சீன ஆய்வகத்தில், சோங் சோங் மற்றும் ஹுவா ஹூவா என்று பெயரிடப்பட்ட இரண்டு நீண்ட வாள் குரங்குகள் பிறந்தன.

மரபணு மாற்றப்பட்ட குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, மனித நோய்கள் குறித்த ஆய்வுகளுக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதற்கு எதிர்ப்பும் இல்லாமல் இல்லை.

இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவது மனிதர்களை குளோனிங் செய்வதில் கொண்டு போய் நிறுத்தும் என்கிறார்கள் விமர்சகர்கள்.

சீன நரம்பியல் கல்வி நிறுவனத்தை சேர்ந்த குயிங் சன், குளோனிங் செய்யப்பட்ட இந்த குரங்குகள் மரபணுவினால் ஏற்படும் ,புற்று நோய், வளர் சிதை மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்பு கோளாறுகள் குறித்து ஆய்வு செய்ய உதவும் என்கிறார்.

சோங் சோங் என்ற குரங்கு எட்டு வாரங்களுக்கு முன் பிறந்திருக்கிறது. ஹுவா ஹூவா ஆறு வாரங்களுக்கு முன் பிறந்திருக்கிறது.

குரங்குகளுக்கு நன்றாக வளர்கின்றன. அதற்கு புட்டி பால் தரப்படுகிறது என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

வரும் மாதங்களில் குளோனிங் முறையில் அதிகமான குரங்குகளுக்கு பிறப்பு கொடுக்கப்படும் என்கிறார்கள் அவர்கள்.

எதிர்ப்பு

லண்டன் ஃபிரான்சிஸ் கிரிக் நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் ராபின், இந்த இரண்டு குரங்குகளையும் குளோனிங் செய்ய பயன்படுத்தப்பட்ட தொழிற்நுட்பம் மிகவும் அபாயகரமானது மற்றும் திறனற்றது என்கிறார்.

படத்தின் காப்புரிமை Science Photo Library

கெண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டர்ரென் கிரிஃப்பின், இந்த குளோனிங் மனித நோய்கள் குறித்து புரிந்துக் கொள்ள பயன்படும் என்கிறார். அதே வேளை, நெறிமுறை சார்ந்த கவலைகளையும் பகிர்கிறார். குளோனிங் குறித்த நெறிமுறைகளை வடிவமைப்பதில் அதிக அக்கறை தேவைப்படுகிறது.

இது போன்ற ஆய்வுகள் எப்படி மேற்கொள்ளப்பட வேண்டும், எப்படி செயல்படுத்தப்படவேண்டும் என்பதில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும் என்கிறார் அவர்.

எடின்பெர்க்கில் உள்ள ரோஸ்லின் நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு டோலி என்று அழைக்கப்படும் முதல் மறிஆடு குளோனிங் செய்யப்பட்டது. மடியிலிருந்து எடுக்கப்பட்ட உயிரணுவை கொண்டு உருவாக்கப்பட்ட முதல் பாலூட்டி `டோலி` தான்.

உயிரணு மாற்று தொழிற்நுட்பம் மூலம், பன்றிகள், நாய்கள், பூனைகள், எலிகள் உட்பட பல உயிரினங்கள் குளோன் செய்யப்பட்டு இருக்கின்றன.

பல தடைகளை தாண்டி

சரியாக 79 தோல்விகளுக்குப் பின் இந்த இரு குரங்குகளும் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கு முன், வெவ்வேறு உயிரணுக்களிலிருந்து இரண்டு குரங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், அவை விரைவில் இறந்துவிட்டன.

ஆய்வாளர் சன் , "நாங்கள் பல்வேறு தொழிற்நுட்பங்களை முயற்சித்து பார்த்தோம். ஆனால், இது மட்டும்தான் வெற்றி பெற்றது. பல தடைகளை கடந்துதான் இந்த குரங்குகளை உருவாக்கி இருக்கிறோம்" என்கிறார்.

அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பு வகுத்த நெறிமுறைகளை பின்பற்றியே இந்த குளோனிங் முறை மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்