பெருங்கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்ட உயிரினங்களுக்கு என்ன நேர்ந்தது?

  • 6 பிப்ரவரி 2018
Whale shark in Isla Mujeres Mexico படத்தின் காப்புரிமை Simon Pierce/Marine Megafauna Foundation

திமிங்கலங்கள், சுறாக்கள் மற்றும் திருக்கை மீன் போன்ற கடலில் வாழும் பெரிய உயிரினங்களிடம் நுண்ணிய பிளாஸ்டிக்குகளின் தாக்கம் எப்படி உள்ளது என்பதை அறிவதற்கான ஆராய்ச்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் விஞ்ஞானிகள்.

நுண்ணிய பிளாஸ்டிக்குகளினால் அவை குறிப்பிடத்தக்க அபாயங்களை சந்தித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சில திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான பிளாஸ்டிக் துண்டுகளை விழுங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.ஆய்வுகள் குறித்த ஒரு மதிப்புரையின் கருத்துப்படி மெக்சிகோ வளைகுடா, மத்திய தரைகடல், வங்காள விரிகுடா மற்றும் பவள முக்கோணப்பகுதி கடல் ஆகியவை கண்காணிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன.

தண்ணீரை வடிகட்டி துகள்களை உட்கொள்ளும் பெரிய கடல் உயிரினங்களுக்கு நுண்ணிய பிளாஸ்டிக்குகளினால் உள்ள அபாயங்கள் குறித்த தரவுகளை அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உற்று நோக்கியுள்ளனர்.

ஐந்து மில்லிமீட்டரைவிட குறைவான நீளத்தை கொண்டிருக்கும் சிறிய பிளாஸ்டிக் துண்டுகள் கடலுக்கும், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வுக்கும் தீங்குவிளைவிக்கக் கூடியதாக இருக்கும்.

கடலில் நுண்ணிய பிளாஸ்டிக்குகளினால் உண்டாகும் தூய்மைகேடானது இந்தப் பெரிய வடிகட்டி உண்ணிகளின் தொகையை மேலும் குறைப்பதற்கான சக்தியை கொண்டிருக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

''நுண்ணிய பிளாஸ்டிக்குகளை உண்பதால் ஏற்படும் முழுமையான அபாயங்கள் குறித்து இன்னும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டியிருக்கிறது'' என அமெரிக்க கடல் பெரு மிருகங்கள் அமைப்பின் ஆராய்ச்சியாளரும், ஆஸ்திரேலியாவின் முர்டோச் பல்கலைகழகத்தைச் சேர்ந்தவருமான எலிட்ஸா ஜெர்மானோவ் தெரிவித்துள்ளார்.

நுண்ணிய பிளாஸ்டிக்குகளை உட்கொள்ளும்போது அவற்றின் செரிமான மண்டலம் பாதிக்கப்படலாம் மேலும் ஊட்டச்சத்துகளை கிரகிக்கும் திறன் குறைந்துவிடுவது உள்ளிட்ட சாத்தியமான அபாயங்கள் உள்ளன என எலிட்ஸா தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Elitza Germanov/Marine Megafauna Foundation

பிளாஸ்டிக் பொருட்கள் உட்கொள்ளப்படுவதால் அதனால் உண்டாகும் நச்சு பல உயிரியல் செயல்முறைகளை தாக்கக்கூடும். வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் போன்ற செயல்முறைகள் பாதிக்கப்படுவதால் வடிகட்டி உண்ணிகள் தொகையை மேலும் மேலும் அழுத்தத்துக்கு இட்டுச் செல்வதாக அமைகின்றன என அவர் குறிப்பிட்டார்.

முக்கிய இனங்கள் :-

இந்த ஆய்வானது சூழலியல் மற்றும் பரிணாம டிரென்ட் எனும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது. பெரிய வடிகட்டி உண்ணிகளில் உள்ள பெரும்பான்மையான கவர்ந்திழுக்கும் மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கடல் இனங்களுக்கு நுண்ணிய பிளாஸ்டிக்குகளால் உண்டாகும் அபாயங்கள் குறித்த ஆய்வில் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என இந்த ஆய்வு வாதிட்டுள்ளது.

வடிகட்டி உண்ணிகள் ஒருநாளைக்கு நூற்றுக்கணக்கான கன மீட்டர் தண்ணீரை விழுங்குகின்றன. அந்த தண்ணீரில் இருந்து தங்களுக்கு தேவையான உணவை அவை பெற்றுக்கொள்கின்றன. இந்த செயல்முறையில் நுண்ணிய பிளாஸ்டிக்குகளும் உட்கொள்ளப்பட்டுவிடுகிறது. பிளாங்டான் போன்ற மிதவை உயிரிகளின் எடை மற்றும் அளவில் நுண்ணிய பிளாஸ்டிக்குகள் ஒரே மாதிரியாகவே உள்ளன.

திமிங்கலம் மற்றும் சுறாக்கள் உடலில் பிளாஸ்டிக்குடன் தொடர்புடைய வேதியல் பொருட்கள் இருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.

''கார்டெஸ் கடலில் உள்ள சுறா திமிங்கலங்கள் மற்றும் மத்திய தரை கடலில் உள்ள ஃபின் திமிங்கலம் மீதான எங்களது ஆய்வானது, நச்சுத்தன்மை உடைய வேதியல் ரசாயனங்கள் அவற்றின் உடலில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே வடிகட்டி உண்ணிகள் நுண்ணிய பிளாஸ்டிக்குகளை உட்கொள்கின்றன என அவை சுட்டிக்காட்டுகின்றன'' என இத்தாலியின் சியன்னா பல்கலைகழக துணை ஆராய்ச்சியாளரான பேராசிரியர் மரியா ஃபொஸ்ஸி தெரிவித்துள்ளார்.

'' பிளாஸ்டிக்குடன் தொடர்புடைய நச்சுக்கள் வெளிப்பாடானது இந்த கடல் மிருகங்களின் உடல் நலனுக்கு மிகப்பெரிய தீங்கு விளைவிக்க கூடிய அபாயத்தை வெளிப்படுத்துகின்றன. இந்த நச்சுக்கள் வளர்ச்சி மற்றும் மேம்பாடு, வளர்சிதை மாற்றம் மற்றும் இனப்பெருக்க செயல்முறைகள் போன்றவற்றுடன் தொடர்புடைய ஹார்மோன்களை பாதித்து அவற்றின் செயல்பாடுகளை மாற்றமுடியும்'' என்றார் மரியா ஃபொஸ்ஸி.

கோர்டெஸ் கடலில் உள்ள சுறா திமிங்கலம் ஒரு நாளைக்கு 200 துண்டுகள் நுண்ணிய பிளாஸ்டிக் வீதமும், மத்திய தரை கடலில் உள்ள ஃபின் திமிங்கலம் ஒரு நாளைக்கு 2000 நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் வீதமும் விழுங்கிவருகின்றன.

படத்தின் காப்புரிமை Elitza Germanov/Marine Megafauna Foundation

ஃபிரான்சில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம் ஒன்றின் உடலில் 800 கிலோ அளவுக்கு பிளாஸ்டிக்குகளும், ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய ஒரு திமிங்கலத்தின் உடலில் முப்பது பிளாஸ்டிக் கேரியர் பைகளை செய்யத்தேவைப்படும் ஆறு சதுர மீட்டர் அளவிலான பிளாஸ்டிக் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிக்கை, விலங்கினங்கள் வாழ்விட எல்லைக்குள் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பிற்கான நிறைய முக்கியமான கடலோர பகுதிகளை அழுந்தக்கூறியுள்ளது. கோரல் முக்கோண கடல்பகுதி, மெக்சிகோ வளைகுடா, மத்திய தரை கடல், வங்காள விரிகுடா மற்றும் அதிக நுண்ணிய பிளாஸ்டிக்குகள் செறிவாக இருக்கக்கூடிய பகுதிகள் ஆகியவற்றை இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுளள்து.

ஆராய்ச்சியின் மையப்புள்ளியாக சுறா திமிங்கலம் மற்றும் மற்ற தலைமை இனங்கள் இருக்கும். குறிப்பாக காட்டுவாழ்க்கை சுற்றுலாவை மிகவும் நம்பியிருக்கும் நாடுகளும் இவற்றில் சேரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Elitza Germanov/Marine Megafauna Foundation
Image caption நுண்ணோக்கியில் நுண்ணிய பிளாஸ்டிக்

வடிகட்டி உண்ணி வகை சுறாக்கள், ரே மீன்கள் மற்றும் திமிங்கலங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அழிவின் விளிம்பில் உள்ளன. இவற்றில் பல நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றன மேலும் அவற்றில் சில அதன் வாழ்க்கையில் சந்ததிகளை உருவாக்குகின்றன.

உதாரணமாக சுறா திமிங்கலம் ஐ யு எஸ் என் சிவப்பு பட்டியலில் பாதிக்கப்படக்கூடியதாக பட்டியலிடப்பட்டுள்ளது. வெப்பமண்டல மற்றும் சூடான வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் வாழ்ந்துவரும் இவை உலகின் பெரிய மீனாக உள்ளது. அவை இன்னும் சிறு மிதவை உயிரிகள் மற்றும் சிறு மீன்கள் போன்றவற்றையே உணவாக எடுத்துக்கொள்கின்றன.

எவ்வளவு பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கின்றன?

  • இதுநாள் வரை 8.5 பில்லியன் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2015 வரை தோராயமாக 6.3பில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகியுள்ளன.
  • இவற்றில் 9% மறு சுழற்சிக்குள்ளானது 12% எரிக்கப்படுகின்றன. 79% பிளாஸ்டிக் கழிவுகள் நிலங்கள் அல்லது இயற்கை சுற்றுப்புறச்சூழலில் கொட்டப்படுகின்றன.
  • தற்போதைய நிலையில் உள்ள உற்பத்தி மற்றும் கழிவு மேலாண்மை தொடர்ந்தால் 2050-இல் 12 பில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் இயற்கை சுற்றுச்சூழலில் கொட்டப்பட்டிருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்