போர்க்களத்தில் மனிதர்களுக்கு பதில் இனி இயந்திரங்கள் போரிடுமா?

  • ஆர்.ஷஷாங்க் ரெட்டி
  • பிபிசிக்காக

எதிர்காலத்தில் போர் மூண்டால், அதில் செயற்கை மதிநுட்பமானது எதுபோன்ற மாறுதல்களை ஏற்படுத்தும்? மனிதர்களுக்கு பதில் இனி இயந்திரங்கள் போரிடுமா?

செயற்கை நுண்ணறிவு முன்னேற்றம், யுத்தம் மற்றும் பாதுகாப்பு உட்பட மனித சமுதாயத்தின் அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எதிர்காலத்தில் போர் மூண்டால், அதில் செயற்கை நுண்ணறிவானது, எதுபோன்ற மாறுதல்களை ஏற்படுத்தும்? அதன் விளைவு எப்படி இருக்கும் என்ற கவலை, உலகம் முழுவதும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், வழக்கறிஞர்கள், ராணுவ அதிகாரிகள் என பல தரப்பினருக்கும் கவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

எந்தவொரு ராணுவ அமைப்பிலும் செயற்கை நுண்ணறிவை ஐந்து முக்கிய பணிகளுக்காக பயன்படுத்தலாம். தளவாட போக்குவரத்து மற்றும் விநியோக மேலாண்மை, தரவுகள் பகுப்பாய்வு, ரகசிய தகவல்கள் சேகரிப்பு, சைபர் நடவடிக்கைகள் மற்றும் தானியங்கி ஆயுதங்கள் என்பவையே அவை.

தளவாட விநியோகம் மற்றும் தரவு பகுப்பாய்வு ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது ஆபத்தானது அல்ல, ஏனெனில் பொதுமக்கள் தொடர்பான துறைகளில் செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இணைய தாக்குதல்களைத் தடுப்பது (அல்லது அவற்றைத் தொடங்குவதற்கும்) செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு துரித வேகத்தில் அதிகரித்துள்ளதாக பல நிபுணர்கள் நம்புகின்றனர். ஏனெனில் செயற்கை நுண்ணறிவின் வாயிலாக சைபர் தாக்குதல்களை சுலபமாக கண்டறியலாம்.

கில்லர் ரோபோ

மேலே கூறப்பட்ட ஐந்து முக்கிய பணிகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகளில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியது தானியங்கி ஆயுத அமைப்பு சார்ந்த பணிகளில் தான்.

ஆயுதங்களில் தானியங்கி முறைகளை பயன்படுத்துவதை எதன் அடிப்படையில் நிர்ணயிப்பது என்பதில் பல்வேறுவிதமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், அவை கணினி முறைமையின் கீழ் செயல்படும்போது, அவையே தங்களது வேலையைச் செய்து கொள்ள முடியும் என்பதோடு அதற்கு மனிதர்கள் தேவையில்லை என்ற கருத்தே மேலோட்டமாக முன்வைக்கப்படுகிறது. இவற்றை ’கில்லர் ரோபோ’ என்றும் அழைக்கின்றனர்.

இருந்தபோதிலும், இவை ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் தொடுக்கும் ராணுவ வீர்ர்களுக்கு மாற்றாக 'டெர்மினேட்டராக' செயல்படமுடியாது (குறைந்தபட்சம் தற்போது) ஆனால் அவை சில சிறப்பான, பணிகளை செய்ய முடியும். எளிமையாக சொல்வதென்றால், போர்க்களத்தில் ராணுவத்திற்கு இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பாக போர்க்களத்தில் துரிதமான தகவல் தொடர்பும் ஒரு நொடி தாமதமும் யுத்தத்தின் போக்கையே மாற்றும் என்பதால், செயற்கை நுண்ணறிவு பயனுள்ளதாக இருக்கும். ஆயுத அமைப்பு ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு முதல் சிறிய ட்ரோன்கள் வரை பயன்படுத்தப்பலாம்.

போரில் மனிதர்களை தவிர்த்து, செயற்கை மதிநுட்பம் என்ற ஆயுதத்தை பயன்படுத்தும் முறை 'லீதல் தானியங்கி அமைப்பு' (Lethal Autonomous Weapon System) என்று அழைக்கப்படுகிறது.

சட்டம் மற்றும் தார்மீக காரணங்கள்

அண்மை நாட்களில் இந்த அபாயமான தானியங்கி அமைப்பு ஆயுதங்கள் பற்றி பல விவாதங்கள் எழுந்துள்ளன, இவற்றை கட்டமைப்பதற்கான சர்வதேச பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஐ.நா சபையிலும் இந்த ஆயுதங்களின் பயன்பாடு பற்றி கடந்த ஆண்டு விவாதிக்கப்பட்டது.

இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு தடை கோருபவர்கள் அதற்கான இரண்டு காரணங்களை முன் வைக்கின்றனர். ஒன்று சட்டரீதியானது, மற்றொன்று மற்றும் தார்மீக அடிப்படையிலானது.

முதல் காரணமானது பொறுப்பேற்கும் தன்மையின் அடிப்படையிலானது.

தற்பொழுது நடைமுறையில் இருக்கும் சர்வதேச சட்டங்கள் மற்றும் யுத்த விதிமுறைகளின்படி, போரில் எந்த வகையான விதிமீறல்களோ, தவறுகளோ, ஏற்பட்டால் அதற்கான பொறுப்பு ராணுவத்திற்கும், அதன் அதிகாரிகளுக்கும் உரியது.

ஆனால் ஒரு இயந்திரம் மனிதனின் மீது தாக்குதலில் ஈடுபடும்போது, குறி தவறினால், எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஏற்பது யார்?

இந்த கேள்வியானது விடை காணா வினாவாக தொக்கி நிற்பதால், இயந்திரங்களை போரில் ஈடுபடுத்துவதற்கு தடை கோரும் கோரிக்கை வலுப்பெறுகிறது.

தார்மீக காரணங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, போர்க்களத்தில் உள்ள ஒரு மனிதன் மற்றொரு மனிதனைக் கொல்லலாம், ஆனால் செயற்கை மதிநுட்பத்தை பயன்படுத்தி, ஒரு இயந்திரம் மனிதனை கொல்லத் தொடங்கினால், அது தார்மீக ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படமுடியாதது, கண்ணியமற்றது.

வாகன ஓட்டி இல்லா டாங்கர் தயாரிக்கப்படுமா?

இந்த இரண்டு காரணங்களோடு இந்த ஆபத்தான ஆயுதம் மனிதர்களை கட்டுப்படுத்துமோ என்பதும் பேரச்சமாக உருவெடுத்துள்ளது. இந்த முக்கிய விஷயம் தொடர்பான விவாதம் ஐ.நா சபையில் நிலுவையில் உள்ளது.

இதுபோன்ற விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் போர்க்களத்தில் செயற்கை மதிநுட்பத்திற்கு இடம் உள்ளதா அல்லது இல்லையா என்பது பற்றி முடிவுசெய்யும்.

இருந்தபோதிலும், உலகின் மிகப்பெரிய ராணுவங்கள் தொடர்ந்து செயற்கை மதிநுட்பத்தை வலுப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

உதாரணமாக அமெரிக்கா, 'Project Maven' என்ற திட்டத்தை ஆரம்பித்துவிட்டது. இது ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவத்தின் நடவடிக்கை தொடர்பான பல வீடியோக்களில் இருந்து தொடர்புடைய மற்றும் முக்கியமான தகவல்களை தேர்ந்தெடுத்து கொடுக்கும்.

இதைத் தவிர பொதுமக்களுக்கான பல்வேறு சேவைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது, தேவைப்பட்டால் பின்னர் ராணுவத்தாலும் பயன்படுத்தப்படலாம். அதாவது ஓட்டுநர் இல்லா வாகனத்தை பயன்படுத்துவது பரவலாகிவிட்டால், அது ராணுவத்திற்கு விரிவாக்கப்பட்டு, ஓட்டுநர் இல்லாமலேயே டேங்கர்களும் இயக்கப்படலாம்.

பாதுகாப்பு துறையில் செயற்கை மதிநுட்பத்தை எந்த அளவு பயன்படுத்துவது என்பதை தீர்மானிப்பது சிக்கலானது, சவாலானது.

பணிக்குழு உருவாக்கம்

அதே நேரத்தில், பல நாடுகளும் தங்கள் ராணுவத் திறன்களை மேம்படுத்துவதற்காக அதில் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்துவது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.

சீனாவை பொறுத்தவரை, அமெரிக்காவிற்கு இணையாக தனது ராணுவத்தை வலுப்படுத்த செயற்கை நுண்ணறிவை பெரிய ஆயுதமாக கருதுகிறது. எதிர்வரும் காலங்களில், இந்த துறையில் சீனா அமெரிக்காவை முந்தவும் வாய்ப்புகள் சாத்தியமே.

அதேபோல், தேசிய பாதுகாப்பு மற்றும் இந்திய ராணுவத்தில் செயற்கை மதிநுட்பத்தை பயன்படுத்தும் சாத்தியங்கள் பற்றி ஆராய்வதற்காக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது.

ராணுவத்தில் அதிகரித்து வரும் செயற்கை மதிநுட்பத்திற்கான கோரிக்கைகளை அலசி ஆராயும் பல வல்லுநர்கள், எதிர்காலத்தில், மனிதர்களுக்கு மாற்றாக இயந்திரங்கள் போர்க்களத்தில் களமிறக்கப்படும் என்று கருதுகிறார்கள்.

இந்த மாற்றத்திற்கு எவ்வளவு காலமாகும் என்பதை உறுதியாக கூறமுடியாது. ஆனால் எதிர்காலத்தில், போர்க்களமும், யுத்தத்தின் இயல்பும், யுத்த தர்மமும் முற்றிலும் மாறப்போகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: