போர்னியோ தீவில் கொல்லப்பட்ட ஒரு லட்சம் ஒராங்குட்டான் குரங்குகள்

இந்தோனீசியா மற்றும் மலேசியாவின் கட்டுப்பாட்டில் உள்ள போர்னியோ தீவில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஒராங்குட்டான் குரங்குகள் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் கொல்லப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Voigt et al

மிகவும் அழியும் அபாயத்தில் உள்ள இந்த குரங்கினம் பற்றிய 16 ஆண்டுகால ஆய்வை மேற்கொண்ட அறிவியலாளர்கள் இந்த எண்ணிக்கை மிகவும் அதிர்ச்சி அடைய வைப்பதாகக் கூறியுள்ளனர்.

மரங்களை வர்த்தக தேவைகளுக்காக வெட்டுதல், பனை எண்ணெய் உற்பத்திக்காக பனை மரங்களை நடுவது, சுரங்கப் பணிகள் மற்றும் காகிதத் தொழிற்சாலை உள்ளிட்ட காரணங்களால் மேற்கொள்ளப்படும் வன அழிப்பே இந்தக் குரங்குகளின் அழிவுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.

'வேட்டையாடுதல் மட்டும் பிரச்சனை அல்ல'

எனினும், காடுகள் அழிக்கப்படாத பகுதிகளிலும் இந்த குரங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்த ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.

"அதிக எண்ணிக்கையிலான ஒராங்குட்டான் குரங்குகள் கொல்லப்படுவதையே இது காட்டுகிறது," என்கிறார் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய மேக்ஸ் பிளாங்க் பரிணாம மானுடவியல் மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மரியா வாய்க்ட்.

வேட்டையாடுபவர்களால் மட்டுமல்லாது பயிர்களை அழிப்பதால் ஒராங்குட்டான்கள் கொல்லப்படுவதும் இந்த எண்ணிக்கை குறையக் காரணமாக இருப்பதாக மரியா மற்றும் அவரது குழுவினர் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Marc Ancrenaz
Image caption சாலைகளும் விளைநிலங்களும் ஒராங்குட்டான் குரங்குகளின் வாழ்விடத்தை சிதைக்கின்றன

அந்த ஆய்வில் அங்கம் வகித்த பிரிட்டனின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் செர்ஜே விச், "வனங்கள் இருக்கும் பகுதியிலும் எண்ணிக்கை குறைவு இவ்வளவு அதிகமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வேட்டையாடுவதும் பெரிய பிரச்சனையாக இருப்பதையே இது காட்டுகிறது," என்று பிபிசியிடம் கூறினார்.

"பயிர் செய்யப்படும் பகுதிகளுக்கு அருகில் இருக்கும் ஒராங்குட்டான் குரங்குகள் மனிதர்களை எதிர்கொள்ளும்போது தோல்வியையே சந்திக்கின்றன. மனிதர்கள் அவற்றைக் கொன்றுவிடுகிறார்கள்," என்கிறார் அவர்.

"கடந்த வாரம் 130 பெல்லட் குண்டுகளுடன் ஒரு ஒராங்குட்டான் குரங்கின் உடலைக் கண்டோம். இது அதிர்ச்சி அளிக்கிறது. அவை விளைநிலங்களில் உள்ள பழங்களை உண்ணலாம் . ஆனால் ஆபத்தானவை அல்ல," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சரி செய்ய முடியாத அளவு சுரண்டல்

மலேசியா மற்றும் இந்தோனீசியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த மனிதக் குரங்குகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் போர்னியோ தீவில் இயற்கை வளம் சரி செய்ய முடியாத அளவு சுரண்டப்படுவதாகவும் பேராசிரியர் விச் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Serge Wich

பனை எண்ணெய் தயாரிப்புக்காக பனை மரங்கள் நடப்படும் நோக்கில் வனங்கள் அழிக்கப்படுவது ஒராங்குட்டான் குரங்குகள் வாழ்விடங்களை இழப்பதற்கான முக்கியக் காரணமாக உள்ளது.

இயற்கையை அழிக்காமல் பெறப்படும் பனை எண்ணெய் தயாரிக்க நுகர்வோர் நிறுவனங்களை நிர்பந்திக்க வேண்டும் என்கிறார் சர்வதேச வன உயிர் நிதியத்தின் எம்மா கெல்லர்.

தற்காலிகத் தீர்வு

வாழ்விடம் அழிக்கப்பட்டு பனை மரங்கள் நடப்பட்ட பகுதிகளில் இருந்து வனங்களுக்குள் ஒராங்குட்டான் குரங்குகள் செல்ல அமைக்கப்பட்ட செயற்கை இணைப்புகளை அவை பயன்படுத்தும் படங்களை பிரிட்டனின் செஸ்டர் மிருகக்காட்சி சாலையினர் வெளியிட்டுள்ளனர். மலேசியாவின் ஹூட்டான் எனும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அவர்கள் அவற்றை அமைத்தார்கள்.

படத்தின் காப்புரிமை Clark Adkerson
Image caption செயற்கை இணைப்புகளை பயன்படுத்தி பழைய வாழ்விடங்களுக்குள் நுழையும் ஒராங்குட்டான் குரங்குகள்

"இழந்த வாழ்விடங்களுடன் அவை மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டாலும் இது தற்காலிகத் தீர்வுதான்," என்கிறார் அந்த மிருகக் காட்சிசாலையின் கள பல்லுயிர் பாதுகாப்பு மேலாளர் கேத்தரைன் பார்ட்டன்.

மீண்டும் வனங்களை உருவாக்கி ஒராங்குட்டான் குரங்குகளைக் காப்பதே நீண்டகாலத் தீர்வாக இருக்கும் என்கிறார் அவர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஆபத்தை எதிர்கொள்ளும் புதுரக ஒராங்குட்டான்கள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :