மரச்சாமான்கள் செய்யவேண்டுமா? இந்த ரோபோ தச்சரை சந்தியுங்கள்

  • 8 மார்ச் 2018

அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே இருக்கும் ரோபோடிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தானியங்கி முறையில் பாதுகாப்பான வகையில் மரச்சாமான்களை உருவாக்கும் அமைப்பு முறையை உருவாக்கியுள்ளனர்.

அமெரிக்காவின் மாசசூட்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தற்போதுள்ள ரோபோடிக் தொழில் நுட்பம் மற்றும் ரூம்பா என்ற தரையை சுத்தம் செய்யும் ரோபோவில் சில மாற்றங்களை செய்து இந்த புதிய அமைப்பு முறையை உருவாக்கியுள்ளனர்.

தங்களது கண்டுபிடிப்பு மனிதர்களுக்கு அதாவது தச்சர்களுக்கு மாற்றாக உருவாக்கப்படவில்லை என்றும், இவை தச்சர்கள் வடிவமைப்பு போன்ற முக்கியமான விடயங்களில் அதிக கவனத்தை செலுத்துவதற்கு பயன்படுமென்றும் இந்த புதிய அமைப்பு முறையை உருவாக்கியுள்ள அணியினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுபோன்ற அமைப்பு முறைகள் பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகளை வெகுவாக குறைக்குமென்றும் அவர்கள் நம்புகின்றனர்.

"ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான தச்சர்கள் மரங்களை அறுக்கும் பணியில் ஈடுபடும்போது தங்களது கைகளையும், விரல்களையும் தவறுதலாக காயப்படுத்திக் கொள்கின்றனர்" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

"இந்த செயல்முறையில் நிபுணரல்லாதோர் கூட பல்வேறுபட்ட பொருட்களை கொண்டு வடிவத்தை நிர்மாணித்து அதை ரோபோக்களின் உதவியோடு உருவாக்க முடியும்" என்று 'ஆட்டோசா' என்ற இந்த அமைப்பு முறையை உருவாக்கியுள்ள ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை CHANDAN KHANNA/AFP/Getty Image

இதுவரை மிகப் பெரிய மரச்சாமான்களை தயாரிப்பதற்கு ரோபோட்டுக்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது எம்.ஐ.டியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ள இந்த புதிய அமைப்பு முறையின் மூலம் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் வேறுபட்ட வடிவங்களை கொண்ட மரச்சாமான்களை ரோபோட்டுக்களை கொண்டு தயாரிப்பதற்குரிய வழி உருவாகியுள்ளது.

தற்போது பயன்பாட்டிலுள்ள தொழில்நுட்பம் மாற்றியமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் மரங்களை சரியான துண்டுகளாக வெட்டுவதுடன், அவற்றை இணைப்பதற்குறிய துளைகளையும் இட்டு, அதன் பாகங்களை எளிதாக இணைக்கும் வகையில் அறையில் வகைப்படுத்தி வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது தச்சர்களால் பயன்படுத்தப்படும் ரோபோட்டுக்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, ஆட்டோசா என்றழைக்கப்படும் இவை, விலை மலிவானவை மற்றும் பயன்படுத்துவதற்கு எளிதானதாகும். ஜெர்மனியை சேர்ந்த குக்கா என்ற நிறுவனத்திடமிருந்து ரூம்மா உள்ளிட்ட இரண்டு ரோபோட்டுக்களை இந்த ஆராய்ச்சிக்குழு பயன்படுத்தியது.

பயன்படுத்துவதற்கு எளிதானது

இதன் வன்பொருள் சார்ந்த சிறப்பம்சங்களை விடுத்து, உயர்த்தரம் வாய்ந்த மற்றும் எளிதாக கட்டமைக்கக்கூடிய மரச்சாமான்களை முன்பிருந்ததைவிட எளிதாக அணுகக்கூடியதாக உருவாக்குவதுடன், அவை பாதுகாப்பானவைகளாக இருப்பதை உறுதிசெய்வதே எம்.ஐ.டி ஆராய்ச்சி குழுவினரின் உண்மையான குறிக்கோளாக உள்ளது.

"ரோபோக்கள் ஏற்கனவே அதிகளவிலான உற்பத்தியை சாத்தியப்படுத்தியுள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு அதிகளவிலான உற்பத்தியில் பேரளவு தனிப்பயனாக்கத்தை கிடத்தட்ட நாம் உற்பத்தி செய்யும் அனைத்து கூறுகளிலும் சாத்தியப்படுத்தும் திறனுள்ளது" என்று எம்.ஐ.டியின் உள்ளக வெளியீட்டில் டேனியலா ரஸ் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஸ் மற்றும் அவரது குழுவினர் கடந்த 2004ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட எம்.ஐ.டியின் கணினி அறிவியல் மற்றும் நுண்ணறிவுத் திறன் ஆய்வகத்தை சேர்ந்தவர்களாவர்.

இதற்கு முன்னர் ரோபோக்களானது நாற்காலிகள், மேசைகள் போன்ற பல்வேறு மர உபகரணங்களை உருவாக்குவதற்குரிய மரத்தை கணக்கிட்டு வெட்டுவதற்கு பயன்பட்டதாக இந்த குழுவினரின் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அவற்றை இணைத்து இறுதியான பொருளை உருவாக்கும் செயல்முறையானது இதுவரை மனிதர்களாலேயே செய்யப்பட்டு வருகிறது.

"மரச்சாமான்களின் தனிப்பயனாக்குதலில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே எங்களது நோக்கம்" என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஸ்சுல்ஸ் கூறுகிறார். "பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு கிடைத்தவற்றோடு தேவையை நிறுத்திக்கொள்ளாமல், தங்களுக்கு வேண்டியதை தனித்துமான வழியில் பெறுவதற்குரிய எல்லையற்ற வாய்ப்புகளை உருவாக்குவதே எங்களது நோக்கம்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :