'உயிரி' பிளாஸ்டிக்: பெருகும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு மாற்றா?

பிளாஸ்டிக் கழிவுகள் பூமியின் மிகப்பெரிய பிரச்சனை என்பது நமக்கு தெரியும். இந்த பிளாஸ்டிக் குப்பைகளில் 9 சதவிகிதத்தை மட்டுமே மறுசுழற்சி செய்ய முடியும். இந்த கழிவுகளை தீயிட்டு எரிக்கும் செயல், பசுமையக வாயுக்கள் அதிகரிக்கவும், புவி வெப்பமயமாதலுக்கும் காரணமாகிறது. எனவே, தாவர அடிப்படையிலான மாற்றுகள் மற்றும் சிறப்பான மறுசுழற்சி முறைகள் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையுமா?

படத்தின் காப்புரிமை AFP
Image caption நமது சமுத்திரங்களில் ஐந்து டிரில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் துண்டுகள் மிதப்பதாக கூறப்படுகிறது. இவை மட்க 1000 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.

நாம் பிளாஸ்டிக்குகளுடன் இணைந்தே வளர்ந்துள்ளோம். உறுதியான , பல்நோக்கு தன்மை கொண்ட இவற்றை நவீன பொருளாதாரம் அதிகம் சார்ந்துள்ளது. மேலும், தற்போது நாம் பயன்படுத்தும் பல பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மக்கும் தன்மையுள்ள மாற்றுப் பொருட்கள் ஏதும் இல்லை.

நாம் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய ஸ்ட்ராவை கூட இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக கூறலாம். இயற்கை முறையில் ஒரு ஸ்ட்ராவை தயாரிக்க, பிளாஸ்டிக்கை விட 100 மடங்கு அதிகம் செலவாகும் என முன்னணி பிளாஸ்டிக் ஸ்ட்ரா தயாரிப்பு நிறுவனமான பிரைமாபிளாஸ்ட் கூறுகிறது.

பிளாஸ்டிக் காஃபி குவளைகளை மற்றுமொரு எடுத்துக்காட்டாக கூறலாம். பிரிட்டனில் மட்டும், ஆண்டுதோறும் 2.5 பில்லியன் பிளாஸ்டிக் காஃபி குவளைகள் தூக்கி எரியப்படுகின்றன. இவற்றை மறுசுழற்சி செய்ய முடியும் என நாம் நினைத்து வருகிறோம்.

ஆனால், வாட்டர் ஃப்ரூப் தன்மைக்காக, அந்த குவளைகளில் பாலியெத்தலின் பயன்படுத்தப்படுவதால் அவற்றை மறுசுழற்சி செய்ய முடிவதில்லை.

தாவர செல் சுவர்களில் அடங்கியுள்ள முக்கிய பொருளான செல்லுலோஸ், உருளைகிழங்கு ஸ்டார்ச், சோளம் ஸ்டார்ச் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி முழுவதுமான மட்கக் கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய குவளையை பயோமி பயோபிளாஸ்டிக் என்ற நிறுவனம் உருவாக்கி வருகிறது. பெரும்பாலான பிளாஸ்டிக்குகள் எண்ணெய் மூலம் தயாரிக்கப்படுகின்றன.

படத்தின் காப்புரிமை Biome Bioplastics
Image caption முற்றுலும் மட்க கூடிய பிளாஸ்டிக் காஃபி குவளைகளை பயோமி பயோபிளாஸ்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

"இவற்றை மறுசுழற்சி செய்ய முடியும் என்ற நல்ல எண்ணத்துடன்தான் பல நுகர்வோர்கள் பிளாஸ்டிக் குவளைகளை வாங்குகிறார்கள். ஆனால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பெரும்பாலான குவளைகள், பிளாஸ்டிக் இணைக்கப்பட்ட அட்டையினால் தயாரிக்கப்படுவதால், அவற்றை மறுசுழற்சி செய்ய முடிவதில்லை. மேலும் பாலியெஸ்டரினால் தயாரிக்கப்படும் குவளைகளின் மூடிகள், பிரிட்டனில் பரவலாக மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. அவை நிலத்தில் புதைக்கப்படுகின்றன", என அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான பால் மைன்ஸ் தெரிவிக்கிறார்.

இந்த நிறுவனம் `பயோபிளாஸ்டிக்` என அழைக்கப்படும் முற்றிலும் மட்கக்கூடிய, தாவர அடிப்படையிலான பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய குவளைகள், பயோபிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என நம்புவதாக கூறும் மைன்ஸ், குவளையின் வாய் பகுதி சூடான பானங்களின் வெப்பத்தைத் தாங்கக் கூடியது என கூறுகிறார். மேலும் இது முற்றிலும் மட்கக் கூடியது மற்றும் மறுசுழற்சி செய்யக் கூடியது என்றும் அவர் தெரிவிக்கிறார். தற்போது வரை இந்த குவளைகள் விற்பனைக்கு வரவில்லை. ஆனால் பல விற்பனையாளர்களிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவிக்கிறார்.

படத்தின் காப்புரிமை Biome Bioplastics
Image caption உருளைகிழங்கு ஸ்டார்ச் மற்றும் தாவர நார்ச்சத்துகளை மட்க கூடிய பிளாஸ்டிக்காக மாற்ற முடியும்.

``பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்பது சாத்தியம் கிடையாது. ஆனால் சில பெட்ரோலிய அடிப்படையிலான பிளாஸ்டிக்கிற்கு பதிலாக, தாவர பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பயோ பாலிமர்களை மாற்றாக பயன்படுத்தலாம்`` என மைன்ஸ் கூறுகிறார்.

ஃபுல் சைக்கிள் பயோ பிளாஸ்டிக்ஸ், எல்க் பேக்கேஜிங் மற்றும் ஃபின்லாந்தின் வி.டி.டி ஆராய்ச்சி மையம் போன்ற பல நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத, அதே நேரத்தில் சாதாரண பிளாஸ்டிக் போன்ற பண்புகள் கொண்ட, பயோபாலிமர் போன்ற தீர்வுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன.

டோபி மெக்கர்ட்னியின் நிறுவனமான மேக்ரெபெர், தார் கலவை மற்றும் மறுசுழற்சி பிளாஸ்டிக் துகள்கள் மூலம் சாலை அமைப்பதற்கான பொருளை உருவாக்கியுள்ளது. சாலைகள் அமைப்பதற்கு பல காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் பெட்ரோலியம் அடிப்படையிலான தாருக்கு மாற்றாக இந்த பொருள் அமையும்.

``பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் நாம் தினமும் பயணிக்கும் குண்டும், குழியுமான தரம் குறைந்த சாலைகள் ஆகிய உலகின் இரண்டு பெரிய பிரச்சனைக்கு ஒரே எளிய தீர்வை அளிக்க நாங்கள் முயன்று வருகிறோம்.`` என மெக்கர்ட்னி கூறுகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கலப்பு பொருளைக் கொண்டு, பென்ரித் முதல் க்ளவ்செஸ்டர்ஷைர் வரை சாலை அமைக்கப்பட்டுள்ளது.

சில கணக்கீடுகளின்படி, நமது பெருங்கடல்களில் ஐந்து டிரில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் துண்டுகள் மிதப்பதாக கூறப்படுகிறது. இவை முற்றிலும் மட்க 1000 ஆண்டுகள் ஆகும். இவை காலப் போக்கில் சிறு துகள்களாக உடையும் போது, அவற்றை கடல் வாழ் உயிரினங்கள் உண்ணக் கூடும்.

இந்த ஆபத்து மூலம் பெரிய கடல் வாழ் உயிரினங்களான திமிங்கலம், சுறா போன்றவை பாதிக்கப்படக்கூடும் என அறிவியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பிளாஸ்டிக்கில் அடங்கியுள்ள நச்சுப் பொருட்கள், அவற்றுக்கு மிகத்தீவிரமான உடல்நல குறைபாடுகளை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பிளாஸ்டிக் கழிவுகள் தற்போது ஆர்ட்டிக் பிரதேசத்தையும் எட்டிவிட்டது. எனவே அரசாங்கங்களும், தொழில் நிறுவனங்களும் இதனை கவனத்தில் கொள்ள தொடங்கியுள்ளன.

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கு, பிரான்ஸ் தடை விதித்துள்ள நிலையில், 2042-ஆம் ஆண்டிற்குள் தேவையற்ற அனைத்து பிளாஸ்டிக்குகளையும் ஒழிக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே காலி பிளாஸ்டிக் பாட்டிலை இயந்திரத்தில் போட்டால், அதற்கேற்ப பணம் அளிக்கும் திட்டத்தை நார்வே பல தசாப்தங்களாக செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த பிரிட்டனும் யோசனை செய்து வருகிறது.

மேலும் தாங்கள் பயன்படுத்தும் பேக்கேஜிங் பிளாஸ்டிக் அளவுகளை குறைக்க பல்பொருள் அங்காடிகளும் முயற்சி எடுத்து வருகின்றன. ஆனால் பிளாஸ்டிக்குகளில் இருக்கக் கூடிய மிகப்பெரிய பிரச்சனையே, அவற்றில் பலவற்றை எளிதாக மறுசுழற்சி செய்ய முடியாது என்பதுதான்.

கலிஃபோர்னியாவின் சான் ரோஸ் பகுதியைச் சேர்ந்த ஜென்னி யோ மற்றும் மிராண்டா வாங்க் ஆகிய இருவரும், மறுசுழற்சி செய்ய கடினமாக இருக்கும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை கையாள்வது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை BioCellection
Image caption வாங் மற்றும் ஜென்னி யோ ஆகியோர் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை மீண்டும் பயன்படுத்தும் முறையை ஆராய்ந்து வருகின்றனர்.

இவர்கள் இணைந்து தொடங்கியுள்ள பயோ கலெக்ஷன் நிறுவனம், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்குகளை இரசாயனத்துடன் கலந்து, அதனைக் கொண்டு ஸ்கை ஜாக்கெட், கார் உதிரி பாகங்கள் போன்ற பல தயாரிப்புகளுக்கான மூலப் பொருட்களை உருவாக்கித் தருகிறது.

மறுசுழற்சி செய்வது மிகவும் கடினமாக இருப்பதால், வண்ணங்கள் குறைவாக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தயாரிப்புகளை வணிக நிறுவனங்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என ஹெலன் பேர்ட் தொண்டு நிறுவனத்தின் கழிவு மறுசுழற்சி திட்டம் நினைக்கிறது.

மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என வணிக நிறுவனங்களை அரசு ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் இதனை தெளிவாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த தொண்டு நிறுவனம் கூறுகிறது.

மட்கக் கூடிய மாற்றுப் பொருட்களை மேம்படுத்த போதுமான நிதியுதவிகள் கிடைப்பதில்லை. எண்ணெய் அடிப்படையிலான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை நாம் மறக்க வேண்டும் என்ற வண்ணமயமான திடீர் யோசனை ஏற்புடையதுதான் என பெரும்பாலான நிபுணர்கள் கூறுகிறார்கள்.

``இன்னும் சில தசாப்தங்களில், நடுத்தர வர்க்கம் இருமடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம் அதிக அளவில் மட்கக் கூடிய பிளாஸ்டிக்குகளை உருவாக்கினாலும், உலகில் வேறு எந்த பொருட்களிலும் இல்லாத பண்புகளை கொண்டுள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டை நம்மால் தடுக்க முடியாது.`` என வாங் கூறுகிறார்.

இதனிடையே பிளாஸ்டிக் கழிவு பிரச்சனை குறித்த விழிப்புணர்வு வளர்ந்து வருவது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இந்த பிரச்சனைக்கான எளிதான தீர்வு என்பது யாரிடமும் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: