`காண்டாமிருகத்தின் அழிவும், மனிதகுலத்தின் எதிர்காலமும்’: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் #InternationalDayofForests

உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இறந்துள்ளது. ஒரு மாதகாலமாக உடல் உபாதையை அனுபவித்த இந்த காண்டாமிருகத்திற்கு மருத்துவர்கள் மருந்தளித்து மரணிக்க வைத்தனர். அதன் மறைவு குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இனி மீண்டும் இத்தகைய காண்டாமிருகம் பிறக்க, செயற்கை கருதரிப்பு வாய்ப்பே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

ஆண்டுதோறும் மார்ச் 21ஆம் தேதி உலக காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்த காண்டா மிருகத்தின் மரணம் என்பது, காடு மற்றும் சூழல் குறித்து மனிதர்கள் எந்த அளவிற்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதை நினைவூட்டும் விஷயமாக உள்ளது. உலகில் உள்ள உயிரினங்களுள், 30 முதல் 50 சதவீதம் வரை, 2050 ஆம் ஆண்டுக்குள் அழியலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இது இயல்பான ஒன்றல்ல. மனிதனின் செயல்பாடுகள்தான் இந்த அழிவுக்கு காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அழியும் நிலையில் விலங்குகள்

இப்போது இந்த பூவுலகில் 5,000 கிழக்கத்திய கொரிலாக்கள்தான் உள்ளன. போரினாலும், வேட்டையினாலும் இந்த எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டுக்குள் 350 ஆக குறையலாம்.

ஆனால், அதே நேரம் விலங்குகளை பாதுகாக்கும் நடவடிக்கையும் அதிகரித்துள்ளது. அழிந்து வரும் வனவிலங்கு என்று பட்டியலிடப்பட்டு இருந்த கருப்பு காண்டாமிருகத்தின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அமுர் சிறுத்தையின் எண்ணிக்கை 2007 ஆம் ஆண்டு 30 என்ற எண்ணிக்கையில் இருந்தது. ஆனால், இன்று அதன் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

இண்ட்ரி லெமூர் (Indri Lemur) என்ற விலங்கின் எண்ணிக்கை இப்போது பத்தாயிரத்திற்கும் குறைவுதான். ஆனால், இது 2050 ஆம் ஆண்டுக்குள் இரண்டாயிரமாக குறையலாம்.

இதற்கு காரணம் அதன் வாழ்விட அழிப்பும், வேட்டையும்தான்.

இவை மட்டும் அல்ல 30 - 50 சதவீத உயிரினங்கள் இப்புவியில் அழியும் நிலையில் உள்ளன.

அருகிவரும் 5000 விலங்குகள்

சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம், அருகிவரும் நிலையில் இருக்கும் உயிரினங்கள் என 5000 உயிரினங்களை பட்டியலிட்டுள்ளன. அவற்றில் சீனாவில் உள்ள யுனான பாக்ஸ் ஆமை, சுமத்திரா காண்டாமிருகம், ஆரஞ்சு நிறத்தில் வயிற்றுப் பகுதி கொண்ட கிளி ஆகியவையும் அடங்கும்.

குறிப்பாக சுமத்திரா காண்டமிருகம் நூற்றுக்கும் குறைவாகதான் உள்ளதாக கூறுகிறது சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம். வேட்டை ஆடப்படுவதுதான் இந்த எண்ணிக்கை குறைவதற்கு முக்கியமான காரணம் என்று கூறுகிறது இந்த சங்கம்.

ஏன் நாம் கவலை கொள்ள வேண்டும்?

ஏதோ ஒரு விலங்கு அழிந்தால் நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்? - என்பது நம் கேள்வியாக இருந்தால், ஏதோ ஒரு விலங்கின் அழிவு மனித அழிவுக்கு வழிவகுக்கலாம் என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

சூழலியல் ஆய்வாளர் சு. நாராயணி, " இது ஓர் உயிர்வலைபின்னல், இந்த பின்னலில் ஒரு கண்ணி அறுப்பட்டால், இன்னொன்றுக்கு நிச்சயம் ஆபத்தும் வரும், அழிவும் வரும். உணவு சங்கிலியில் மனிதன் மேலே இருக்கிறான். மேலே இருப்பதால், அதிக ஆபத்தும் பொறுப்பும் ஒருங்கே மனிதனுக்குதான் இருக்கிறது." என்கிறார்.

படத்தின் காப்புரிமை Narayani
Image caption நாராயணி

அவர், "இதை எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால், பாசியை சொல்லலாம். மனிதன் பாசியை நேரடியாக உண்பதில்லை. ஆனால் பாசியை உண்ணும் மீனை மனிதன் உண்கிறான். பாசியில் விஷம் ஏறியது என்றால், அது உண்ணும் மீனை முதலில் பாதிக்கும். பின், மீனை உண்ணும் மனிதனை பாதிக்கும். அது போலதான் ஓர் உயிரினத்தின் அழிவும்." என்கிறார்.

ஓர் உயிரினத்தின் அழிவு, வாழ்விட அழிவிற்கும் வழிவகுக்கும் என்கிறார் நாராயணி.

குறிப்பாக புலி, காண்டாமிருகம் போன்ற குடை இனம் (Umbrella Species) அழிந்தால், அவை ஆளுகை செலுத்தும், அதன் வாழ்விடமும் நாசமாகும் என்கிறார் நாராயணி.

டூடூ பறவையின் அழிவு

இதை வழிமொழியும் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன், டூடூ பறவையையும், கல்வாரியா மரத்தையும் உதாரணமாக சொல்கிறார்.

படத்தின் காப்புரிமை Facebook
Image caption எழுத்தாளர் நக்கீரன்

நக்கீரன், "மொரீஷியஸில் இருந்த கல்வாரியா எனும் மரத்தின் பழங்கள்தான் டூடூவின் விருப்ப உணவாக இருந்தது. டூடூவின் கழிவிலிருந்து வெளியேறும் விதைதான் முளைக்கும் ஆற்றல் மிக்கதாக இருக்கும். அங்கு டூடூ பறவை அழிந்ததால், கல்வாரியா மரமும் அழிந்து போய்விட்டது. இப்படி எந்த கண்ணி எதனுடன் தொடர்புடையது என்று தெரியாது. எதன் அழிவும் மனிதனின் அழிவுக்கு வழிவகுக்கலாம்." என்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஏதோ ஒரு விலங்கு அழிகிறது என்று மெளனியாக இருந்துவிடக்கூடாது. அழிந்து வரும் உயிரினத்தை காப்பதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :