காஃபி போடுவது முதல் வானிலை அறிக்கை வரை - உதவும் டிஜிட்டல் பணியாளர்

உங்கள் வீட்டிலுள்ள தொலைக்காட்சியை இயக்கவும், உங்களுக்கு காஃபி போடவும், நீங்கள் வெளியே கிளம்பும் முன்பு சாலையில் வாகனப் போக்குவரத்து நெரிசலாக உள்ளதா என்பதை அறியவும் உங்கள் வீட்டில் ஒரு உதவியாளர் இருந்தால் எப்படி இருக்கும்? அந்த உதவியாளர் ஒரு மனிதராக இல்லாமல், ஓர் எந்திரமாக இருந்தால் எப்படி இருக்கும்?

படத்தின் காப்புரிமை Trushar Barot

இது எதோ ஒரு அறிவியல் புதினத்தில் இருப்பதைப் போல உள்ளதா? உண்மையில் கோடிக்கணக்கானவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

'டிஜிட்டல் வாய்ஸ் அசிஸ்டன்ட்ஸ்' என்று கூறப்படும் எந்திர உதவியாளர்கள் எண்ணிக்கை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் அதிகரித்துக்கொண்டே போகிறது. அமேசான் நிறுவனம் முதல் முறையாக இத்தகைய கருவியை 'அலெக்ஸ்சா' என்ற தொழில்நுட்பம் மூலம், 'எகோ' மற்றும் 'டாட்' ஒலிபெருக்கி வடிவில் அறிமுகம் செய்தது.

வானிலை நிலவரம், செய்தி, சமையல் குறிப்புகள் என அனைத்தையும் அலெக்ஸ்சா உங்களுக்கு சொல்லும். சமீபத்தில் அக்செஞ்சர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் பிரேசில், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளைவிட இந்தியர்களுக்கு 'டிஜிட்டல் வாய்ஸ் அசிஸ்டன்ட்ஸ்' கருவிகளில் அதிக ஆர்வம் இருப்பது தெரியவந்தது.

  1. இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் இணையப் பயனாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர் 2018 இறுதிக்குள் குரல் மூலம் இயக்கக்கூடிய கருவிகளை வைத்திருப்பார்கள்.
  2. 39% இந்திய இணையப் பயனாளிகள் அத்தகைய கருவியை இந்த ஆண்டு வாங்குவோம் என்று கூறுகின்றனர்.
  3. அமெரிக்காவில் 2017இல் மட்டும் 4.5 கோடி குரல் மூலம் இயங்கும் கருவிகள் விற்றுள்ளன.

அமேசான் டிஜிட்டல் வேலையாளாக இருக்கும் கருவியை கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்தது. கூகுள் இன்று முதல் அத்தகைய தனது 'கூகுள் ஹோம்' (Google Home) கருவியை இந்தியச் சந்தைகளில் வெளியிடுகிறது.

இவை எவ்வாறு இயங்குகின்றன?

அமேசான் மற்றும் கூகுள் ஆகிய இரு நிறுவனங்களின் கருவிகளும் உங்கள் வீட்டின் வை-பை மூலம் இயங்கும் ஒலிபெருக்கிகளாக உள்ளன.

அவை உங்கள் வீட்டில் நிறுவப்படும்போது உங்கள் குரலை அந்தக் கருவிகள் உணர்வதற்காக, சோதனை செய்யும் நோக்கில் அந்தக் கருவிகள் கூறும் சில அடிப்படை கட்டளைகளை உங்கள் குரலில் பதிவு செய்ய வேண்டும்.

படத்தின் காப்புரிமை Amazon

அந்தக் கருவிகளுடன் இணைக்கப்பட்ட செயலிகளை அந்த நிறுவனங்கள் வழங்குகின்றன. அமேசானின் செயலியின் பெயர் 'ஸ்கில்ஸ்' (skills), கூகிளின் செயலியின் பெயர் 'ஏக்சன்ஸ்' (actions). இந்த செயலிகளில் உங்கள் டிஜிட்டல் வேலையாள் முன்னுரிமை கொடுக்க வேண்டிய வானொலி நிலையங்கள், செய்தி நிறுவனங்கள் என அனைத்தையும் பதிவு செய்து விடலாம்.

இந்தியாவில் சிக்கல் என்ன?

அமேசான் மற்றும் கூகுள் ஆகிய இரு நிறுவனங்களின் தொழில்நுட்பமும் ஆங்கிலத்தில் மட்டுமே கட்டளைகளைப் புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. அதுவும் இந்தியத்தன்மையுடன் பேசப்படும் ஆங்கிலத்தை புரிந்துகொள்வதுதான் சவாலாக இருக்கும்.

அமேசான் தனது டிஜிட்டல் பணியாளை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தபோது 'இந்திய ஆங்கிலத்தையும்' புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கி இருந்தது.

கூகுளின் புதிய கருவி கூடுதலாக இந்தி மொழியையும் புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அது எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பது இனிமேல்தான் தெரிய வரும். மேற்கொண்டு பல இந்திய மொழிகளை சேர்ப்பதன்மூலம் இன்னும் இந்தியைச் சந்தையை அதிக அளவில் விரிவடையலாம் என்று இரு நிறுவனங்களும் கருதுகின்றன.

எதிர்காலம் எப்படி இருக்கும்?

இப்போது ஒலிபெருக்கிகளில் மட்டுமே இந்தத் தொழில்நுட்பம் இருந்தாலும், வருங்காலங்களில் தொலைக்காட்சி, வானொலி, குக்கர், குளிர்சாதனப் பெட்டி, பாதுகாப்பு உபகரணங்கள் ஆகிய அனைத்திலும் குரலை கொண்டு மனிதர்களின் கட்டளையை அறிந்து அவற்றை நிறைவேற்றும் வசதி வரும்.

இந்தத் தொழில்நுட்பம் பணக்காரர்களை இலக்காக வைத்து மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், படிப்பறிவு தொழில்நுட்பங்களைக் கையாள ஒரு தடையாக இருக்கும் இந்திய ஏழைகளுக்கு இது ஒரு பெரும் மாற்றத்தை உண்டாக்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவின் கிராமப்புற விவசாயி ஒருவருக்கு தான் வாங்கும் புதிய செல்பேசியை இயக்கம் முறைகளை கற்றுக்கொள்வதைவிட, அவற்றைக் குரல் மூலம் இயக்கும் வசதி எளிமையானதாக இருக்கும்.

பாதுகாப்பு மற்றும் இணையதள தரவுகள்

குரல் மூலம் கருவிகளுக்கு கட்டளை விதிக்கும் தொழில்நுட்பம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், இவை ஏற்கனவே அமலில் உள்ள நாடுகளில் பாதுகாப்பு குறித்த கவலைகளும் எழுந்துள்ளன.

இணையம் மூலம் கட்டுப்படுத்தப்படும் இந்தக் கருவிகள் உங்கள் கட்டளைகளை கேட்டு நிறைவேற்றுவதற்காக எப்போதும் நீங்கள் பேசுகிறீர்களா என்பதைக் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். இதனால் உங்கள் அந்தரங்கம் பாதிக்கப்படலாம்.

ஒருவேளை அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் உங்களை உளவுபார்த்து உங்களைப் பற்றிய தகவல்களை சேமிக்கலாம். அவ்வாறு சேமிக்கப்படும் தரவுகளை என்ன செய்கின்றன என்று யாருக்கும் தெரியாது. அரசுகள் மற்றும் பிற அரசு நிறுவனங்கள் உங்களை பற்றிய தகவல்களை அந்த நிறுவனங்களிடம் இருந்து பெறலாம்.

இந்த ஐயங்களுக்கு தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இருந்து இதுவரை பதிலெதுவும் வரவில்லை. இணையதள பாதுகாப்பு மற்றும் அந்தரங்க உரிமை குறித்த கவலைகள் அதிகமாகிவரும் இந்தக் காலத்தில், இவற்றைப் பற்றியும் இந்த டிஜிட்டல் பணியாட்களை வாங்கும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தொட்டால் பேசும் கூகுள் ஜாக்கெட்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: