உடலற்ற பன்றியின் உயிருள்ள மூளை: விவாதத்தைக் கிளப்பிய ஆராய்ச்சி

  • 6 மே 2018
படத்தின் காப்புரிமை Reuters

தலை வெட்டப்பட்ட பன்றியின் மூளைக்கு மீண்டும் ரத்த ஓட்டத்தை கொடுத்து, அதன் உள்ளுறுப்புகளை பல மணி நேரங்கள் உயிர்ப்புடன் வைத்திருந்தனர் யேல் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள்.

மனித மூளைகளை ஆய்வு செய்ய ஒரு வழியை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாகும்.

பன்றியின் தலை துண்டிக்கப்பட்ட பின்பு, அது உயிரோடு இருக்கும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லையென்றாலும், அவற்றின் மூளையில் சிறிதளவு நினைவு இருக்கலாம் என்ற கவலை உள்ளது.

மேரிலான்டில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்தில் நடைபெற்ற மூளை அறிவியல் நெறிமுறைகள் கூட்டத்தில் இந்த ஆய்வு தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டன.

யேல் பல்கலைகழகத்தின் பேராசிரியர் நெனட் செஸ்டனின் இந்த ஆய்வு, தேசிய சுகாதார நிறுவனத்தின் விசாரணையின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் நரம்பியல் ஆராச்சியில் ஏற்படும் எழும் நெறிமுறை சிக்கல்கள் குறித்து கலந்தாலோசித்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட பன்றிகள் மீது இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக பேராசிரியர் செஸ்டன் மற்றும் அவரது குழுவினர் தெரிவித்தனர்.

பம்புகள், ஹீட்டர்கள் மற்றும் செயற்கை ரத்தப் பைகள் ஆகியவற்றை வைத்து மூளையின் ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்க முடியும் என்று அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதன் விளைவாக, மூளையில் உள்ள செல்களை உயிர்ப்புடன் வைத்து, 36 மணி நேரம் வரை அதன் இயல்பான செயல்திறனை ஆராய்ச்சியாளர்களால் தக்கவைத்திருக்க முடிந்தது.

இதனை "மனதை உறைய வைக்கும்" நிகழ்வு என பேராசியர் செஸ்டன் விவரித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters

இதையே மனித மூளைகளில் செய்ய முடியுமேயானால், நரம்பியல் கோளாறுகளுக்கு புதிய சிகிச்சையை சோதிக்க அதனைப் பயன்படுத்த முடியும்.

ஆனால், இதில் உள்ள நெறிமுறைகள் குறித்து கவலை எழுப்பியுள்ளார் பேராசியர் செஸ்டன்.

தலை துண்டிக்கப்பட்டால், அதில் இருக்கும் மூளையில் நினைவு இருக்குமா மற்றும் அப்படி இருந்தால் அவை சிறப்பு பாதுகாப்புக்கு உரியவையா அல்லது இதெ மாதிரியான நுட்பத்தை மனித உடல் தளர்ந்து போகும் பொழுது பயன்படுத்த முடியுமா போன்ற கவலைகள் எழுகின்றன.

நுண்ணறிவு அனுபவங்களை கொண்ட மூளை திசுக்களை ஆராய்ச்சியாளர்களால் ஆய்வகத்தில் உருவாக்க முடியும் என்றால், மனித அல்லது விலங்கு ஆராய்ச்சிகளின் போது அத்திசுக்களுக்கு கொடுக்கப்படும் வழக்கமான பாதுகாப்புக்கு அவை தகுதியுடையவையா என்ற கேள்வியை அவர்கள் முன்வைக்கின்றனர்.

"இந்த கேள்வி சற்று வித்தியாசமானதாக தோன்றலாம். இன்றைய சோதனை மாதிரிகள் இத்தகைய திறன்களை கொண்டிருக்கவில்லை. ஆனால், மனித மூளையினை புரிந்து கொள்வதற்கு பல்வேறு மாதிரிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன".

உணர்வுகளை அளவிடுவதற்கான வழிகளை உருவாக்க வேண்டும் என ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் இதனை விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும் என்ற ஆராய்ச்சியாளர்கள் குழுவின் அழைப்புக்கு ஆதரவு அளிக்கிறார் லன்டன் பல்கலைகழகத்தில் மேம்பட்ட ஆய்வு பள்ளியின் பேராசிரியர் காலின் ப்ளேக்மோர்.

"ஆராய்ச்சியாளர்களுக்கே இந்த நுட்பங்கள் ஏற்புடையதாக இல்லாமல் இருக்கக்கூடும் - ஆதலால் இதுகுறித்து பொது விவாதம் வைக்க வேண்டியது மிகவும் அவசியமானதே. மேலும், இது ஏன் முக்கியமானது என பொதுமக்களுக்கு ஆராச்சியாளர்கள் விளக்கம் அளிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்" என்று பிபிசியிடம் பேசிய காலின் கூறினார்.

"இங்கே ஒரு முரண்பாடு உள்ளது. உடலுடன் தொடர்பில்லாமல் மூளையினை முழுமையாக செயல்படும் வகையில் பராமரிக்க சிறந்த வழிமுறைகள் இருக்குமானால், ஆராய்ச்சி நோக்கங்களுக்கு அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், அந்த மூளைக்கு உணர்ச்சித்திறன் மற்றும் நினைவு இருக்கும் பட்சத்தில் அது கவலைக்குரிய விஷயமாக இருக்கும்" என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்