சுகப்பிரசவம் (அ) சிசேரியனில் பிறந்த குழந்தைகளில் யாருக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகம்?

  • ஜேம்ஸ் காலகெர்
  • பிபிசி அறிவியல் மற்றும் சுகாதார செய்தியாளர், ரேடியோ 4
குழந்தைகளில் யாருக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகம்?

பட மூலாதாரம், Getty Images

அனைத்து சூழ்நிலைகளிலும் போராடும் சக்தியை மனிதனுக்கு வழங்கியிருக்கிறது இயற்கை. தாயின் கருவறையில் இருந்து வெளிவர முயற்சி செய்யும்போதே குழந்தையின் போர் குணம் தொடங்கிவிடுகிறது.

பிரசவத்தின்போது, தாயின் உடலில் சுரக்கும் திரவத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள் குழந்தைக்கு போராடும் சக்தியை கொடுக்கிறது, நோய் எதிர்ப்பு தன்மையை ஏற்படுத்துகிறது. ஒவ்வாமை அல்லது உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை, தாய்க்கு பிரசவத்தின்போது சுரக்கும் திரவம் குறைக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

ஆனால், சுகப்பிரசவம் இயலாத நிலையில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தால் தாயின் பிறப்புறுப்பில் சுரக்கும் இந்த திரவம் குழந்தைக்கு கிடைப்பதில்லை.

இதனால், சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளைப் போன்ற நன்மைகளை கொடுக்க, தாயின் பிறப்புறுப்பில் சுரக்கும் திரவத்தை குழந்தைக்கு பூசும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நடைமுறைக்கு வெஜெனல்சீடிங் (vaginal seeding) என்று பெயர். இது உலகளவில் பரவலான ஒன்று.

தாயிடமிருந்து சுரக்கும் திரவம் நிரந்தர தீர்வு ஏற்படுத்துமா?

வெஜெனல் சீடிங் (vaginal seeding) நடைமுறை பரவலாக இருந்தாலும், இது நிரந்தர தீர்வல்ல. இந்த நடைமுறையின் பிரதான நோக்கம், அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்த குழந்தைக்கு இயற்கை வழங்கும் அனைத்து நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்பதே.

குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் நன்மை தரும் பாக்டீரியாக்களை கிடைக்கச் செய்வது அத்தியாவசியமானது.

இந்த திரவம் குழந்தைக்கு எந்த அளவு முக்கியமானது? இதை அறிந்துக் கொள்ளும் ஆராய்ச்சிகள் உலகளவில் நடைபெற்றாலும், பிரிட்டன் மற்றும் கனடாவில் விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரிட்டனின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வில், பிரசவத்தின்போது இயல்பாக சுரக்கும் திரவத்தில் நீந்தி, சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைக்கும், அறுவை சிகிச்சை மூலம் தாயின் கருவறையில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு பிறகு வெஜினல் சீடிங் முறையில் தாயிடம் இருந்து எடுக்கப்பட்ட பிறப்புறுப்பு திரவம் பூசப்படும் குழந்தைகளுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது.

சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாயிடமிருந்து கிடைக்கும் நோய் எதிர்ப்பு பாதுகாப்பு குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்காகவது நீடிக்கும். ஆனால் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகளுக்கு அதே அளவு பாதுகாப்பு கிடைப்பதில்லை.

சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் மூலம் பிரசவம்

ஒரு குழந்தை பிறக்கும்போது, முதலில் பாக்டீரியாக்களை எங்கு எதிர்கொள்கின்றன? தாயின் கருவறையில் இருந்து கருக்குழாய் வழியாக தாயின் பிறப்புறுப்பு வழியாக வரும் பயணத்தில்தான் என்பது இயல்பாகவே புரிந்துக் கொள்ளக்கூடியது.

இதுவே, சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதால், அவை முற்றிலும் புதிய இந்த உலகிற்குள் வந்த பிறகு, தன்னுடைய தோலில் படியும் பாக்டீரியாக்களையே முதலில் எதிர்கொள்கின்றன. இதன் அடிப்படையில்தான், வெஜினல் சீடிங் முறையில் தாயிடம் இருந்து எடுக்கப்பட்ட பிறப்புறுப்பு திரவம் குழந்தைக்கு பூசப்படுகிறது.

பர்மிங்ஹாம் பல்கலைக்கழக பேராசிரியர் பீட்டர் ப்ரோகெல்ஹர்ஸ்ட் கூறுகையில், அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகளுக்கு சுவாசத்தொற்றும் சுவாச பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. அதோடு, ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

தாயின் பிறப்புறுப்பில் சுரக்கும் நோய் எதிர்ப்பு சக்தி நிரம்பிய திரவத்தில் மூழ்கி, நீச்சலடித்து, தாயின் பிறப்புறுப்பு வழியாக வெளியே வர முட்டி மோதி, வெற்றிபெற்று வெளி உலகிற்கு வரும் குழந்தை இயல்பாகவே போராட்ட குணத்தை கொண்டிருக்கிறது.

எந்தவொரு உடலின் அடித்தளம் அணுக்களே. அந்த அணுக்கள் ஒன்றிணைந்தே மரபணுக்கள் உருவாகின்றன.

மனித உடலில் பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் ஒற்றை அணுவை கொண்ட ஆர்க்கியா அணுக்கள் இல்லை என்றால், கிடைக்கும் முடிவுகள் அதிர்ச்சியளிப்பவையாக இருக்கலாம்.

மனித உடலின் மொத்த அணுக்களிலும் 43 சதவிகிதம் மட்டுமே அவர்களுடைய சொந்த உயிரணுக்களைக் கொண்டுள்ளன. எஞ்சிய அணுக்கள், ஒரே அணுக்களைக் கொண்ட பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் ஆர்க்கியா அணுக்களாகவே இருக்கும்.

மனித உயிரணுக்களில் கிட்டத்தட்ட இருபதாயிரம் மரபணுக்கள் உள்ளன. இதுதான் ஒரு மனிதனின் வடிவத்தை முடிவு செய்கிறது.

பட மூலாதாரம், Reuters

ஆனால், மனித உடலில் காணப்படும் பாக்டீரியா மற்றும் அவற்றின் மரபணுக்களை சேர்த்தால், உடலில் சுமார் இரண்டு கோடி சிறிய உயிரினங்களின் மரபணுக்கள் இருக்கும்.

இவற்றை ஒரு மனிதனின் இரண்டாம் மரபணு என்றும் அழைக்கலாம். இது ஒவ்வாமை, உடல் பருமன், மன அழுத்தம், மறதி மற்றும் உட்கொள்ளும் மருந்துகள் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் போன்றவற்றை தீர்மானிக்கும்.

நோய்கள் மற்றும் கிருமிகளை எதிர்த்து போராடும் திறன் மனித வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்காற்றுகிறது.

குழந்தையானது தாயின் பிறப்புறுப்பு வழியாக வெளிவரும்போது, , முதலில் எதிர்கொள்வது இதுவரை இணக்கமாக இருந்த தாயின் உடல் உறுப்புகள் மற்றும் உணவுக் குழாயில் இருக்கும் பாக்டீரியாக்களே.

இதுதான் நோய் எதிர்ப்புத் திறனை அடையும் மனித உடலின் முதல் போராட்டம்.

இது உலகை பார்க்கவிருக்கும் புதிய உயிருக்கும், பாக்டீரியாக்களுக்கும் இடையிலான மோதல் அல்ல, இருவருக்கும் இடையேயான ஆழமான உறவின் அடையாளம்.

லண்டன் குளோபல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் கிரஹாம் ரூக் கூறுகையில், இந்த பாக்டீரியாக்களும் குழந்தைகளுக்கு முக்கியமானவை என்பதால், நோய் தாக்கினால் அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பதற்கான முதல் பாடத்தை குழந்தையின் உடல் கற்றுக்கொள்கிறது.

நுண்ணுயிரிகள் மற்றும் வைரஸ்கள், நம் நோய் எதிர்ப்பு அமைப்புகளை பலப்படுத்தும் ரசாயனங்கள் பலவற்றை வெளிப்படுத்துகின்றன. அதாவது, பிறப்பு முதல் இறப்பு வரை நோய்களை எதிர்த்து போரிடும் தன்மையை, நோய்களைக் குணப்படுத்தும் வலிமையை அந்த ரசாயனங்கள் உருவாக்குகின்றன.

குழந்தை பிறந்த முதல் வாரத்தில் இருந்து ஒரு மாதம் வரை, நோய் எதிர்ப்புத் தன்மை உடலில் வலுவடைகிறது. இந்த சமயத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்கினால், இயல்பான நன்மை தரும் பாக்டீரியாக்களின் செயல்பாடு தடுக்கப்படுகிறது. இதன் விளைவாக, குழந்தையின் நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமடைகிறது.

நோய்களால் விரைவில் பீடிக்கப்படும் தன்மை அந்தக் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. குழந்தைகள் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் அதற்கான ஒரு வழிமுறையாக வெஜைனல் சீடிங் முறை பயன்படுத்தப்படுவது பரவலாகி வருகிறது.

குழந்தையின் நோய் எதிர்ப்பு அமைப்பு எந்த அளவுக்கு வலுவாக இருக்கிறது என்பது, பிறந்த குழந்தை வீட்டில் எப்படி பராமரிக்கப்படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது.

ஆச்சரியமளிக்கும் ஒரு ஆராய்ச்சியின்படி, நாய்கள் வளர்க்கும் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறுகள் குறைவாக இருக்கிறது. அது எப்படி? வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் வெளியே சென்று வரும்போது, அவற்றின் கால்களில் பல்வேறுவிதமான மண்ணும், புழுதியும் ஒட்டியிருக்கும்.

மனிதர்கள் வீட்டிற்குள் செல்லும்போது கால் கழுவி விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருக்கலாம். ஆனால் நாய்களுக்கு அந்த வழக்கம் இருக்குமா என்ன?

காலில் படிந்திருக்கும் பாக்டீரியாக்களுடன் அந்த செல்லப் பிராணி வீட்டிற்குள் வலம் வரும்போது, பல்வேறு வகையான கிருமிகள், வைரஸ்கள், ஓரணு கொண்ட ஆர்க்கியா ஆகியவை வீட்டிற்குள் படியும். அவை, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை, நோய்களைக் குணப்படுத்தும் திறனை வலுப்படுத்துகின்றன.

பொதுவாக இரு வகையான நல்ல பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றான ஒசிலோஸ்போரா நோயெதிர்ப்பு அமைப்பை வலுவாக்குகிறது. ருமினோக்கோகஸ் என்ற மற்றொரு நல்ல பாக்டீரியா, ஒவ்வாமையை எதிர்த்துப் போரிடும் வலிமையை அதிகரிக்கிறது.

தாய், குழந்தைக்கு பால் கொடுக்கும்போதும் கூட, பல வகையான பாக்டீரியாக்கள் தாயிடமிருந்து குழந்தைக்கு பரிமாற்றப்படுகிறது. மனித உடலில் இணையும் முதல் நுண்ணுயிரி எது என்பதை ஆராயும் முயற்சிகளும், காலப்போக்கில் அவை எப்படி வேலை செய்கின்றன என்பது குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், BRITSPAG

வைஃபிடோ பாக்டீரியா

ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, வைஃபிடோ பாக்டீரியா குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளவை. குழந்தை பிறந்த முதல் நொடியில் இருந்து, அவை உடலை ஆட்கொள்கின்றன. இந்த பாக்டீரியா, தாய்ப்பாலில் இருக்கும் சர்க்கரையை சாப்பிடுவதாக நம்பப்படுகிறது. இது தாயிடமிருந்து குழந்தைக்கு செல்கிறது.

இதற்காக, சுமார் 80 ஆயிரம் குழந்தைகளின் மலம் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அவை கேம்பிரிட்ஜின் வெல்கம் சாங்கர் இன்ஸ்டிடியூட்டில் ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வகத்தில் பணிபுரியும் ட்ரெவர் லாலே என்ற விஞ்ஞானி, புதிதாகப் பிறந்த பச்சிளம் சிசுவை எத்தனை வகையான பாக்டீரியாக்கள் தங்கள் இருப்பிடமாக்குகின்றன என்பதை கண்டறிய விரும்புகிறார். அவை அவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் விளைவுகளையும் ஆராய விருப்பம் கொண்டுள்ளார் ட்ரெவர் லாலே.

பின்னர் ஆய்வகத்தில், அத்தகைய பாக்டீரியாக்களை தயார் செய்து, அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தையின் உடலில் வைக்கப்பட்டு, அவர்களுக்கு நோய்களை எதிர்த்து போராடும் வலிமையை உருவாக்க முடியும்.

இருப்பினும், ஒரு புதுவகை தொழில்நுட்பத்தின் உதவியுடன், குழந்தைக்கு அத்தியாவசியமான நல்ல பாக்டீரியாக்களை தாய் மூலமாக குழந்தைக்கு செலுத்தமுடியும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், நல்ல பாக்டீரியாக்கள் மட்டுமல்லாது, தீங்கு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களும் குழந்தைக்கு சென்றுவிடும் அபாயத்தை தவிர்த்துவிட முடியுமா என்பது கேள்விக்குறியே. அதனால்தான், இந்த ஆராய்ச்சி இரட்டை முனை கத்தி என்று கூறப்படுகிறது. காய் நறுக்க பயன்படும் கத்தி, கையையும் பதம் பார்த்துவிடும் சாத்தியங்களையும் புறந்தள்ளிவிட முடியாது.

எது எப்படியிருந்தாலும், இயற்கையான சுகப்பிரசவமே குழந்தைகளுக்கும், தாய்க்கும் நன்மையை ஏற்படுத்தும் என்பதே உண்மை. ஆனால், சிக்கலான சமயங்களில் தாயையும் சேயையும் காப்பாற்றும் முயற்சியில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடக்கும்போது, குழந்தைகளை எப்படி இயல்பான சுகப்பிரசவத்தின் நன்மைகளை பெறச்செய்யலாம் என்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

காணொளிக் குறிப்பு,

BBC Shorts

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :