முடி உதிர்வதை எலும்பு முறிவு சிகிச்சை மருந்து தடுக்குமா?

  • 10 மே 2018

அதிகமான அளவில் எலும்பு முறிவு ஆபத்தை உண்டாக்கும் நோய்க்கு (osteoporosis) சிகிச்சை அளிக்க பயன்படும் நோக்கில் தயாரிக்கப்பட்ட மருந்து ஒன்று தலைமுடி உதிர்வதைத் தடுக்க பயன்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அந்த மருந்து முடியின் வேர்கள் மீது வியத்தகு தாக்கத்தை செலுத்தி, முடி செழித்து வளர உதவுவது கண்டறியப்பட்டுள்ளது.

தலைமுடி நீண்டு வளர்வதை தடுக்கும் ஒருவித புரதத்தை இலக்கு வைத்து செயல்பட்டு இந்த மருந்து வழுக்கை விழுவதைத் தடுக்கிறது.

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த ஆய்வின் தலைவர் நாதன் ஹாக்சா, "முடி உதிர்வு பிரச்சனையால் தவிப்பவர்களுக்கு இந்தப் புதிய மருந்து நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்," என்று கூறியுள்ளார்.

இதுவரை முடி உதிர்தல் பிரச்சனைக்கு தீர்வு தர இரண்டு மருந்துகளே உள்ளன.

  • மினோக்சிடில் (ஆண்கள் மற்றும் பெண்கள்)
  • பினாஸ்டெரைடு (ஆண்களுக்கு மட்டும்)

மேற்கண்ட இரண்டு மருந்துகளுக்கும் பக்க விளைவுகள் உள்ளன. அவை எப்போதும் முழுமையாகப் பலன் அளித்ததும் இல்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

பி.எல்.ஓ.எஸ் பயாலஜி சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், முடி மாற்று சிகிச்சை செய்துகொண்ட 40 ஆண்களின் உதிர்ந்த முடிகளைக் கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் புதிய உறுப்பை உடல் ஏற்றக்கொள்வதற்கான மருந்தாக 1980களில் பயன்படுத்தப்பட்ட 'சைக்லோஸ்போரைன் ஏ' எனும் மருந்தின் மூலம் முடி உதிர்வைத் தடுக்க முயன்றனர். அது SFRP1 எனும் முடி வேர்களைப் பாதிக்கும் புரதத்தைத் தடுத்தது.

எனினும், இந்த மருந்து உண்டாக்கிய பக்கவிளைவுகளால் அதைப் பயன்படுத்த முடியாமல் போனது.

பின்னர் WAY-316606 எனும் மருந்து அந்தப் புரதத்தைச் சிறப்பாக கட்டுப்படுத்தியது சோதனையில் தெரியவந்தது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
முடி கொட்டுவது எதனால், என்ன செய்வது?

இந்த மருந்து பயன்பாட்டுக்கு பாதுகாப்பானதா என்பதை அறிய மருத்துவ சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று நாதன் ஹாக்சா பிபிசியிடம் தெரிவித்தார்.

"தலைமுடி உதிர்வு மனிதர்களின் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை பாதித்து மன நலத்துக்கும் பெரும் கேட்டை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுவதால் இந்த புதிய ஆய்வு மிகவும் முக்கியமானது," என்று பிரிட்டன் தோல்நோய் சிகிச்சை நிபுணர்கள் கூட்டமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

"முடி உதிரும் பிரச்சனை உடையவர்களுக்கு சிகிச்சைகள் பலன் அளிக்கலாம், பலனளிக்காமல் போகலாம். உலகம் முழுதும் அனைவருக்குமான தீர்வைத் தரும் மருந்து எதுவும் கிடையாது. புதிய சிகிச்சைகள் மக்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதால் அவை உற்சாகம் தருகின்றன," என்று அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: