இன்று உலக எமோஜிகள் தினம்: எமோஜியால் ஒருவரின் உயிரை காக்க முடியுமா?

  • மேரி ஹால்டன்
  • பிபிசி

எழுத்துகளைவிட எமோஜிகள் எப்போதும் சுலபமாக மனித உணர்வுகளை கடத்தவல்லது. கண்ணீரோ, குதுகலமோ, ஒற்றை எமோஜி நம் உணர்வுகளை அப்படியே விளக்கிவிடும். இதனால்தான் பேரிடர் காலங்களை குறிக்கும் எமோஜிக்கள் வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்நிலையில், உலக எமோஜி தினமான இன்று, இயற்கை பேரிடர்களின்போது எமோஜிகள் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை பற்றி காண்போம்.

சர்வதேச விஞ்ஞானிகள் குழுவொன்று, நிலநடுக்கத்தை குறிக்கும் எமோஜியை, டிஜிட்டல் தலத்தில் சேர்க்க வேண்டும் என்று பரப்புரை செய்து வருகிறது.

ஆனால், உண்மையில் பேரிடர் காலங்களில் எமோஜிகளால் உதவ முடியுமா, மாற்றத்தை உண்டாக்க முடியுமா?

எமோஜியும், நிலநடுக்கமும்

உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் பேரிடரை, குறிப்பாக நிலநடுக்கத்தை எதிர்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்கிறார் செளதாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் நில அதிர்வு ஆராய்ச்சியாளரான ஸ்டீஃபன் ஹிக்ஸ். இவர்தான் நிலநடுக்கம் குறித்த எமோஜிகளை உருவாக்க வேண்டும் என்ற பிரசாரத்தை முன்னெடுத்து வருபவர்.

ஸ்டீஃபன் ஹிக்ஸ், "பிராந்தியம் கடந்து, மொழிகள் கடந்து ஒரு விஷயத்தை ஒருவருக்கு தெரிவிக்க எமோஜிகள் மிக சரியான வழி. அதனால்தான் நிலநடுக்க குறித்த எமோஜி வேண்டும் என்று பிரசாரம் செய்கிறோம்" என்கிறார்.

இதற்கான ஒரு வடிவத்தை ஒருங்கீட்டுக் குறியீட்டிடம் வழங்கும் முனைப்பில் இவர்கள் இருக்கிறார்கள்.

இந்த முன்னெடுப்பில் அமெரிக்கா புவியியல் துறையை சேர்ந்த சாரா மெக் பிரைடும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

பிபிசியிடம் பேசிய சாரா, "தேச எல்லைகள் கடந்து ஒரு விஷயத்தை தெரிவிக்க எமோஜிகள் உதவும். அனைவருக்கும் அனைத்து மொழிகளும் தெரியாது, பேரிடர் காலங்களில் வேகமாக ஒரு விஷயத்தை சொல்லவே இந்த எமோஜி" என்கிறார்.

ஏன் நிலநடுக்கத்திற்கு மட்டும்?

எமோஜி வேண்டும் என்பது நல்ல யோசனைதான். ஆனால், ஏன் குறிப்பாக நிலநடுக்கத்திற்கு மட்டும் என்ற கேள்விக்கு, ஸ்டீஃபன் ஹிக்ஸ், "சூறாவளி, எரிமலை வெடிப்பு போன்ற பேரிடர்களை முன்பே அறிய முடியும். அதை மக்களுக்கு தெரிவுப்படுத்த அவகாசம் உள்ளது. ஆனால், நிலநடுக்கத்திற்கு அவ்வாறாக இல்லை. அதனால்தான், நிலநடுக்கம் சம்பந்தமான எமோஜிகளுக்கு முன்னுரிமை தருகிறோம்." என்கிறார்.

நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் ஜப்பான் மற்றும் மெக்சிகோவில் வசிக்கும் மக்கள், நிலநடுக்க எச்சரிக்கை குறித்த தகவல்களை தெரிந்துக் கொள்ள, ஒளிபரப்பு ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகத்தையே பெரிதும் நம்பி இருக்கிறார்கள்.

ஸ்டீஃபன் ஹிக்ஸ், "எமோஜிகள் மூலமாக எச்சரிக்கை விடுக்கும் போது, உங்களை தற்காத்துக் கொள்ள ஒரு சில நொடிகளாவது உங்களுக்கு கிடைக்கும், குறைந்தபட்சம் நீங்கள் மேஜைக்கு கீழாவது மறைந்துக் கொள்ள முடியும். இது பல நேரங்களில் உயிர் காப்பதாக அமையும்" என்கிறார்.

ஒரு மொழியாக 'எமோஜிகள்' மிகவும் இளமையானது. பேரிடர் காலங்களில் அது எவ்வளவு விரைவாக ஒரு தகவலை கடத்தும் என்பது குறித்து எந்த ஆய்வும் இல்லை. ஆனால், அதே நேரம் படவெழுத்துக்கள் மூலமாக ஒரு விஷயத்தை தெரிவிக்கும்போது பார்வையாளர்களிடம் வேகமாகவும், சுலபமாகவும் சேரும் என்பதற்கான சான்றுகள் நம்மிடம் உள்ளன. அதனால்தான், விமானத்தில் பாதுகாப்பு குறித்து விளக்கும் அட்டைகளில் படவெழுத்துகளை பயன்படுத்துகிறார்கள்.

'எமர்ஜிகளின் பயன்பாடு'

நிலநடுக்கத்திற்கு மட்டுமல்லாமல் பேரிடர் காலங்கள் அனைத்திற்கும் எமோஜிகளின் சாத்தியமான பயன்களை நீட்டிக்க வேண்டும்.

சாரா டீன் சான் பிரான்சிஸ்கோவில் வடிவமைப்பாளராகவும், கட்டட கலைஞராகவும் இருக்கிறார். அவரும், அவரது குழுவும் 'எமெர்ஜி'களை (பேரிடர் காலத்திற்கான எமோஜிகள்) வடிவமைத்திருக்கிறார்கள். குறிப்பாக, பருவநிலை மாற்றம் மற்றும் சூழலியல் சார்ந்த எமோஜிகள்.

சாரா, "பேரிடர்களை மக்கள் எமோஜிகள் மூலம் பிறருடன் பகிர தயாராக இருக்கிறார்கள். ஆனால் நம்மிடம் அவ்வாறான எமோஜிகள் இல்லை. அதன் காரணமாக அவர்கள் பிற எமோஜிகளை சேர்த்து தாங்கள் கூறவரும் விஷயத்தை தெரிவிக்கிறார்கள்" என்கிறார்.

"இது சர்வதேச பிரச்சனை. இதுகுறித்து சர்வதேச அளவில் ஓர் உரையாடலை முன்னெடுக்க வேண்டும்" என்ற கருத்தை முன்வைக்கிறார் சாரா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: