வாட்ஸ்ஆப் குரூப்பில் அட்மின்கள் மட்டும் பதிவிடுமாறு செய்வது எப்படி?

  • சாய்ராம் ஜெயராமன்
  • பிபிசி தமிழ்

உலகளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கியமான தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர்.

"வாட்ஸ்ப் குரூப்பில் அட்மின்கள் மட்டும் பதிவிடுமாறு செய்வது எப்படி?"

தினசரி ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் கிட்டத்தட்ட அனைத்து பயனர்களும் தங்களது குறிப்பிடத்தக்க நேரத்தை குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்ஆப்பில்தான் செலவிடுகின்றனர் என்று கூறினால் அது மிகையாகாது.

ஆனால், மற்ற சில செயலிகள் வாட்ஸ்ஆப்பிற்கே சவால்விடும் வகையிலான புதுப்புது வசதிகளை பயனர்களுக்கு அளித்த வண்ணம் உள்ளன. எனவே, வாட்ஸ்ஆப் நிறுவனமும் தனது போட்டி செயலிகளான டெலிகிராம், ஸ்நேப்சாட், ஹைக் போன்றவை ஏற்கனவே அளித்துக்கொண்டிருக்கும் வசதிகளை தனது பயன்பாட்டாளர்களுக்கும் வழங்குவதற்கு முயற்சித்து வருவதாக கூறுகிறது.

அந்த வரிசையில், ஒவ்வொரு வாட்ஸ்ஆப் பயனருக்கும் பயனுள்ளதாகவும், அதே சமயத்தில் தலைவலியாகவும் இருக்கிறது குரூப்களில் பகிரப்படும் எண்ணற்ற குறுஞ்செய்திகள் மற்றும் காணொளிகள். அவற்றை தடுப்பதற்கு அட்மின்கள் படும் பாட்டை வார்த்தைகளால் சொல்லி விவரிக்க முடியாது. இந்நிலையில், அதற்கான தீர்வை அளித்துள்ளது வாட்ஸ்ஆப் செயலியின் புதிய வசதி.

உதாரணத்திற்கு, ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பில் 133 பேர் உள்ளதாகவும், அதில் அட்மின்களாக உள்ள மூன்று பேர், அந்த குரூப்பில் தாங்கள் மட்டுமே தகவல்களை பகிர வேண்டுமென்று விரும்புகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்புவரை கனவாக இருந்த அட்மின்களின் இந்த விருப்பம் தற்போது சாத்தியமாகியுள்ளது.

இதை எப்படி செய்வது?

1. நீங்கள் அட்மினாக இருக்கும் ஏதாவதொரு குரூப்புக்குள் நுழையுங்கள்.

2. அதில் குரூப்பின் பெயரையோ அல்லது 'Group info' என்பதையோ தெரிவு செய்யவும்.

3. பிறகு அதிலுள்ள 'Group settings' என்பதை தேர்ந்தெடுக்கவும்.

4. அதில் இரண்டாவதாக இருக்கும் 'Send messages' என்பதை தெரிவு செய்யவும்.

5. பிறகு அதிலுள்ள 'Only admins' என்பதை தெரிவு செய்யவும்.

அவ்வளவுதான்! இனி உங்கள் குரூப்பில் பத்து பேரோ, நூறு பேரோ அல்லது இருநூறு பேர் இருந்தாலும், அட்மின்களால் மட்டும்தான் குரூப்பில் தகவல்களை பதிவிடவோ அல்லது பகிரவோ முடியும்.

(மேற்காணும் விடயங்களை உங்களது கைபேசியில் மேற்கொள்ள முடியவில்லையென்றால், செயலியின் வர்ஷனை (பதிப்பை) அப்டேட் செய்யவும்.)

தாய்லாந்து குகை: சிறுவர்களை மீட்க எட்டு மணிநேரத்தில் தீர்வு அளித்த எலான் மஸ்க்

படக்குறிப்பு,

எலான் மஸ்க்

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தாய்லாந்து குகையில் சிக்குண்டு தவித்த கால்பந்து வீரர்களான 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளரை மீட்கும் பணியில் பல நாடுகளை சேர்ந்த குழுக்கள் பரபரப்பாக செயல்பட்டு வந்த சூழ்நிலையில், அதற்கான எளிமையான தீர்வை கூறினார் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயலதிகாரியான எலான் மஸ்க்.

குகையில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு ஒன்று அங்குள்ள நீர் மட்டம் குறைய வேண்டும் அல்லது அவர்கள் ஸ்கூபா டைவிங் எனப்படும் முக்குளித்தல் முறையை கற்றுக்கொண்டு தப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் அதி நவீன ராக்கெட்டான பால்கான் - 9ன் பகுதிகளை கொண்டு கரடு, முரடான மற்றும் தண்ணீர் நிறைந்த பகுதிகளை கடந்து அவர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் "குழந்தைகள் அமரும் வகையிலான சிறிய நீர்மூழ்கியை" உருவாக்கப்போவதாக அறிவித்தார்.

மேலும், பால்கான்-9 ராக்கெட்டின் பாகத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அந்த நீர்மூழ்கி வாகனத்தின் பரிசோதனை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலுள்ள நீச்சல் குளத்தில் மேற்கொள்ளப்படுவதன் காணொளியை தனது ட்விட்டர் கணக்கில் ஏற்கனவே பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், தாய்லாந்திலுள்ள குகைக்கு நேரில் சென்ற எலான் மஸ்க், தான் அங்குள்ள மூன்றாவது குகையை பார்வையிட்டதாகவும், இந்த மீட்புப் பணிக்காக உருவாக்கப்பட்ட நீர்மூழ்கியை எதிர்கால தேவையை கருத்திற்கொண்டு குகையிலேயே விட்டுச்செல்ல உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

ஆனால், தாங்கள் முன்கூட்டியே முடிவுசெய்த திட்டமே போதுமானதாக இருந்ததால், இந்த நீர்மூழ்கி வாகனத்தை பயன்படுத்துவதற்கான அவசியம் ஏற்படவில்லை என்று தாய்லாந்து கப்பற்படை தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஸ்பேஸ்எக்ஸ் என்னும் தனது விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் போரிங் என்னும் எதிர்கால போக்குவரத்தை கட்டமைக்கும் தனது மற்றொரு நிறுவனத்தின் ஆய்வாளர்களை தாய்லாந்திற்கு கள நிலவரத்தை அறிவதற்கு எலான் மஸ்க் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரத்தின் சிறப்பு தகவல் - விபிஎஸ் தொழில்நுட்பம்

பிபிசி தமிழின் வாராந்திர தொடரான "தொழில்நுட்ப உலகம்" பகுதியில், ஒவ்வொரு வாரமும் தொழில்நுட்ப செய்திகளை மட்டுமல்லாது, தொழில்நுட்பம் சார்ந்த ஒரு சிறப்பு தகவலையும் பகிர உள்ளோம். அந்த வகையில் இந்த வாரம் விபிஎஸ் (VPS - Visual Positioning System) என்னும் தொழில்நுட்பம் குறித்து அறிவோம்.

சில வருடங்களுக்கு முன்பு வரை அருகிலுள்ள பகுதிகளுக்கு சென்றால் முகவரி குறித்த சந்தேகத்தை அருகிலுள்ளவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்வோம். ஆனால், தற்போதெல்லாம் பக்கத்து தெருவில் இருக்கும் கடை முதல் வேறு நாடுகளுக்கு செல்வது வரை அனைத்துக்குமே ஜிபிஎஸ்-ஐ சார்ந்து இருக்கிறோம். ஆனால், எதிர்காலத்தை ஆட்சி செய்யப்போகும் விபிஎஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கூகுளின் வருடாந்திர தொழில்நுட்ப நிகழ்ச்சியான கூகுள் I/Oவின் 2017ஆம் ஆண்டு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதே இந்த தொழில்நுட்பம்.

ஒரு மிகப் பெரிய பல்பொருள் அங்காடிக்குள் சென்றவுடன் ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்குவதற்கான வழி, ஒன்று அதை நாமே தேட வேண்டும் அல்லது அந்த கடை ஊழியரை கேட்க வேண்டும். ஆனால், இந்த விபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீங்கள் தேடும் பொருள் எவ்விடத்தில் உள்ளதென்பதை உங்கள் மொபைல் மூலமாகவே கண்டறியமுடியும்.

மேலும், இந்தாண்டு நடந்த கூகுளின் வருடாந்திர கூட்டத்தில், இத்தொழில்நுட்பத்தை 'கூகுள் மேப்ஸ்' செயலியுடன் இணைத்து செயற்படுத்தும் திட்டத்தையும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, இதுவரை வெளியிடங்களுக்கு மட்டுமே மேப் சேவைகள் இருந்து வரும் நிலையில், இனி உள்ளரங்கில் இருக்கும் ஒரு மிகச் சிறிய பொருளையோ/ விடயத்தையோ கூட எளிதாக கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு இதன் மூலம் உருவாகியுள்ளது. இது குறிப்பாக பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு பெரிதும் பயன்படும் என்றும் தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :