'டைம் மிஷின்': காலத்தில் பின்னோக்கி பயணிக்க முடியுமா?

நான்காவது பரிமாணமான காலத்தில் எப்படியாவது பின்னோக்கி பயணித்துவிட வேண்டும் என்பது இயற்பியலாளர்களின் பெருங்கனவு. நிகழவே நிகழாது, என்றுமே நிஜமாகாது என்று இருந்த இந்த கனவை நிச்சயம் சாத்தியமாக்கலாம் என்கிறார்கள் இயற்பியலாளர்கள். அது குறித்தே விவாதிக்கிறது இந்த கட்டுரை.

பரவெளி

பட மூலாதாரம், Alamy

ரோன் மாலெட் ஒரு இயற்பியல் பேராசிரியர். அவருக்கு ஒரு கனவு இருந்தது. காலத்தில் பயணிக்க வேண்டும் என்பதே அது. தமிழ் சினிமா பாணியில் சொல்ல வேண்டுமென்றால், இன்றிலிருந்து நேற்றும், நேற்றிலிருந்து நாளையும் பயணிக்க வேண்டும் என்பதுதான் அது.

ஆனால் அது எல்லாம் சாத்தியமா. இப்படியாக யோசிப்பது ஒரு நல்ல அறிவியல் புனைவிலக்கியத்திற்கு வேண்டுமானால் பயன்படலாம் என்றார்கள். ஆனால், இது வெறும் புனைவல்ல.

ரோன் மாலெட் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அதற்காகவே செலவிட்டு இருக்கிறார்.

காலத்தை கடக்க நினைப்பது ஏன்?

ரோனின் தந்தை புகைப்பழக்கம் உடையவர். இதன் காரணமாக அவர் தனது 33 ஆம் வயதில் மரணித்தார். அப்போது ரோனுக்கு வெறும் 10 வயதுதான். இந்த இழப்பினால் நிலைகுலைந்து போனார் ரோன். இந்த இழப்பிலிருந்து மீள புத்தகங்களில் தன்னைத்தானே புதைத்துக் கொண்டார். அப்போது அவர் கடந்துவந்த ஒரு புத்தகம்தான் அவருக்கு கால இயந்திரம் குறித்து ஆர்வம் ஏற்பட காரணம்.

"என் பதினோரு வயதில் நான் படித்த ஒரு புத்தகம் என் வாழ்க்கையையே திருப்பி போட்டது. அந்த புத்தகம் எச்ஜி.வெல்ஸின் தி டைம் மிஷின்." என்கிறார் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரோன்.

அந்த புத்தகம் எப்படி தன்னை ஈர்த்தது என்பது குறித்து விளக்கும் ரோன், "முதலில் என்னை புத்தகத்தின் அட்டை வடிவம்தான் ஈர்த்தது. மெல்ல அந்த புத்தகத்தை புரட்டியபோது, அதில் உள்ள ஒரு வரி எனக்குள் அழுத்தமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வரி இதுதான், 'அறிவியலாளர்களுக்கு நன்கு தெரியும். காலமும் வெளியை (Space) போன்றதுதான். வெளியில் எப்படி நாம் முன்னும் பின்னும் நகர முடியுமோ? அதுபோல நாம் காலத்திலும் முன்னும் பின்னும் நகர முடியும்' என்று இருந்தது. இது என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது." என்கிறார்.

படக்குறிப்பு,

ரோனின் தந்தை

"நம்மால் ஒரு கால இயந்திரத்தை உருவாக்க முடியுமானால், அதில் பயணித்து என் தந்தையை சந்திக்க முடியும் தானே, அவரது உயிரைக் காக்க முடியும் தானே, எல்லாவற்றையும் மாற்ற முடியும்தானே? என்று அந்த கணத்தில் யோசித்தேன்." என்கிறார் பேராசியர் ரோன்.

இதெல்லாம் எங்கே நடக்கப் போகிறது என்று கால இயந்திரம் குறித்த கனவை ஆயாசமாக கடந்து சென்றாலும், இயற்கையின் புதிர்கள் குறித்த பல முடிச்சுகளை வெற்றிகரமாக அவிழ்த்த அறிவியலாளர்கள் நிச்சயம் ஒரு நாள் இதனை உருவாக்குவார்கள். ரோனின் கனவு நிச்சயம் ஒரு நாள் நிஜமாகும்.

நான்காவது பரிமாணம்

இந்த வெளியின் மூன்று பரிமாணங்களும் நான்காவது பரிமாணமான காலத்துடன் தொடர்புடையது என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நம்பினார்.

வெளிக்கும் காலத்திற்கும் ஒரு பாலத்தை ஏற்படுத்துவதன் மூலம், காலப் பயணத்தை சாத்தியப்படுத்தலாம் என்று அவர்நம்பினார் . இது வார்ம்ஹோல் (wormhole) ஆகும். அதாவது தமிழில் பரவெளி.

எளிமையாக புரிந்துக் கொள்ளும்படி சொல்ல வேண்டுமென்றால், ஒரு சுரங்கப் பாதையை கற்பனை செய்துக் கொள்ளுங்கள் அதன் ஒரு முனை வெளியின் ஒரு காலத்திலும், இன்னொரு முனை மற்றொரு காலத்திலும் இருக்கிறது.

பரவெளி இயற்கையாகவே இந்த பிரபஞ்சத்தில் இருக்கலாம். ரஷ்ய விஞ்ஞானிகள் ரேடியோ டெலஸ்கோப்பை பயன்படுத்தி இதனை உறுதிப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார்கள். ஆனால், பரவெளியை பயன்படுத்தி காலத்தில் பயணிப்பது சரியான ஒன்றாக இருக்காது.

பட மூலாதாரம், BBC/THomas Scheidl

ஏனெனில், பரவெளியில் நாம் பயணித்தாலும், அதன் மற்றொரு முனை பிரபஞ்சத்தின் எந்தப் புள்ளியில் இருக்கும் என்று நம்மால் கணிக்க முடியாது.

பரவெளியின் அபாயம்

பரவெளியில் இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள். பரவெளி தன்னுள் இருக்கும் அனைத்தையும் நெரித்து, அழுத்திவிடும் அபாயம் இருக்கிறது.

ஆனால், பரவெளியை கட்டுப்படுத்தும் பட்சத்தில் எதிர்காலத்தில் நாம் அதில் பயணிக்கலாம், காலத்தின் ஏதோ ஒரு பகுதியில் இறங்கலாம்.

ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்த் பல்கலைக்கழகத்தின் பிரபஞ்சவியலாளர்கள் டமாரா டேவிஸ், "நம்மால் பரவெளியை உருவாக்க முடியுமா, நம் ஆற்றலுக்குள் அது அடங்குமா என்று தெரியவில்லை. ஆனால், யார் கண்டது எதிர்காலத்தில் எதுவுமே சாத்தியமாகலாம்" என்கிறார்.

ஆனால், ரோனுக்கு கால இயந்திரத்தை நிச்சயம் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சமன்பாடு குறித்து அவர் 12 வயதில் படித்த புத்தகம்தான் அவருக்கு இந்த நம்பிக்கையை தருகிறது என்கிறார் அவர். அதற்கான முயற்சியிலும் இருக்கிறார்.

கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்

காலப் பயணம் சாத்தியமே இல்லை என்கிறார் கனடா பெரிமீட்டர் கல்வி நிலையத்தின் பேராசிரியர் லீ ஸ்மோலின். அவர் சொல்கிறார், " நிகழ்காலம் இருக்கிறது. கடந்த காலம் நம் நினைவில் மட்டுமே இருக்கிறது. எதிர்காலம் இருக்கப்போகிற ஒன்று. அதனால், நினைவில் மட்டுமே உள்ள ஒரு விஷயத்திற்கும், இப்போது இல்லாத ஒரு வெளிக்கும் நாம் எப்படிப் பயணம் செய்ய முடியும்?

பட மூலாதாரம், SPL

குவாண்டம் அறிவியலின் வளர்ச்சி இந்த கேள்விகளுக்கு பதில் தரலாம் என்கிறார் பெரிமீட்டர் கல்வி நிலையத்தின் இயக்குநர் பேராசிரியர் நீல் டுரோக்.

அவர், ”இங்கே, முடியாது என்று எப்போதுமே கூறக் கூடாது. ஏனெனில் இப்போது நம்மால் முடியாத ஒரு விஷயத்தை எதிர்காலத்தில் யாரேனும் ஒரு புத்திசாலி இளைஞர் வந்து நிகழ்த்தி காட்டுவார்” என்கிறார் பேராசிரியர் நீல் டுரோக்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :