நியூட்ரினோ திட்டத்தால் தமிழகத்திற்கு என்ன நன்மை?

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்

தமிழகத்தின் தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ நோக்கு கூடத்தால் கதிர்வீச்சு ஏற்படாது என்றும், அந்த கூடத்தில் பூமியைத் துளைத்து ஆய்வு நடைபெறாது என்றும் நியூட்ரினோ திட்டத்தின் இயக்குநரான வி.எம். தத்தார் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், BBC/GETTY IMAGES

பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள மலையின் கீழ்தான் ஆய்வு நடைபெறும் என்றும், பூமிக்கு அடியில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படவில்லை என்றும், நியூட்ரினோ துகள்களை பிரித்து எடுக்க சுரங்கத்தில் 50 ஆயிரம் டன் மின்காந்தம் வைக்கப்படும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் குறித்த நிலவும் அச்சம்தான், இந்த திட்டத்திற்கு தொடர்ந்து எழுந்துவரும் எதிர்ப்புகளுக்கு காரணம் என்று கருதிய அதிகாரிகள், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர்.

ஆய்வுக்கான கருவிகளை இறக்குமதி செய்யவில்லை

அதன் தொடக்கமாக, நியூட்ரினோ திட்ட இயக்குநர் வி.எம். தத்தார் மற்றும் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விஞ்ஞாயான் பிரசார் நிறுவனத்தைச் சேர்ந்த த.வி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் நியூட்ரினோ திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஊடகத்தினரிடம் விளக்கமாக பேசினர்.

தேனியில் அமையவுள்ள ஆய்வு மையத்தில், வளி மண்டலத்தில் காஸ்மிக் துகள்களுடன் கலந்துவரும் நியூட்ரினோ துகள்களை கண்டறிவதற்காக ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

''நியூட்ரினோ கருவியின் முதல்கட்ட பணி வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ளது. தேனி நியூட்ரினோ மையத்தில் வைக்கப்படும் முக்கிய கருவியான ஐயன் கலோரிமீட்டரின் பண்புகளைக் கொண்ட சிறிய ஐயன் கலோரிமீட்டர் கருவி மதுரையில் சோதனை செய்யப்பட்டுள்ளது'' என்றும் அவர் கூறினர்.

வளிமண்டலத்தில் உள்ள நியூட்ரினோ துகள்களை கணக்கிடுவதுதான் நியூட்ரினோ நோக்குக்கூடத்தின் முக்கிய பணி என்று கூறிய அறிவியலாளர்கள், இந்த ஆய்வுகளுக்கான கருவிகள் எதுவும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர்.

தேனி தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?

பிபிசி தமிழிடம் பேசிய அறிவியலாளர் வெங்கடேஸ்வரன், மதுரையில் செயல்படும் மிகை ஆற்றல் துகள் இயற்பியல் ஆய்வுகளுக்கான நிறுவனங்களின் கூட்டமைப்பு (Inter-Institutional Center for High Energy Physics) என்ற மையத்தில் சிறிய ஐயன் கலோரிமீட்டர் கருவி சோதனை செய்யப்பட்ட விதத்தை மக்களுக்கு விளக்க அரசு முயல்கிறது.

பட மூலாதாரம், Getty Images

இதே போன்ற ஆய்வுகள்தான் தேனியில் அமையவுள்ள நியூட்ரினோ மையத்தில் நடைபெறும் என மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கருவிகளைக் கொண்டு இந்தியாவில் நடத்தப்படும் எதிர்காலதிற்கான ஆராய்ச்சிக்கு ரூ.1,500 கோடியை செலவிட அரசு முன்வந்துள்ளது. இந்த திட்டத்தை சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுத்தினால், தமிழகத்திற்கு நன்மை என்றார்.

தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள மலை ஏன் நியூட்ரினோ திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டது என்று கேட்டபோது, ''வளிமண்டலத்தில் உருவாகும் நியூட்ரினோ துகள்களை ஆய்வுக்கு உட்படுத்தும்போது, அந்த துகள்களை வடிகட்டும் வசதி வேண்டும்.

வடிகட்டி போன்ற சாதனமாக அடர்த்தியான பாறை தேவைப்படுகிறது. அதிலும் காடாக இல்லாமல்,விவசாயப் பகுதியாக இல்லாமல், மரங்கள் இல்லாமல் வெறும் பாறையாக உள்ள பகுதிதான் தேவை என்பதால், இந்த மலையை ஆய்வாளர்கள் தேர்வு செய்துள்ளனர். இந்த மலைப்பகுதி பெரிய பாறையாக உள்ளது என்பதுதான் இதன் முக்கியத்துவம்,'' என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images

''மக்களின் அச்சத்தை போக்குவது அரசின் கடமை''

அறிவியலாளர்களின் விளக்கங்களை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் மக்களிடம் தெளிவாக எடுத்துச்செல்ல தாமதிப்பதுதான் நியூட்ரினோ திட்டத்திற்கான ஆபத்து என்கிறார் சமூக ஆர்வலர் மற்றும் இயற்பியல் ஆசிரியர் அ.மார்க்ஸ்.

''நியூட்ரினோ என்பது பலரும் நினைத்துக் கொண்டிருப்பதுபோல கதிர் வீச்சு கிடையாது. அணுத் துகள்களிலேயே மிகவும் எடை குறைந்த எலக்ட்ரானைக் காட்டிலும் அது பல ஆயிரம் மடங்கு எடை குறைந்த ஒரு துகள். அதற்கு மின்னூட்டம் கிடையாது.

ஆனால் அது நியூட்ரானும் அல்ல. அதைக் காட்டிலும் பல கோடி மடங்கு எடை குறைந்தது. எனவே அது எந்த பாதிப்பையும் எதன் மீதும் ஏற்படுத்தாமல் எதையும் துளைத்துச் செல்லக் கூடிய ஒரு துகள்.

கோடிக் கணக்கான துகள்கள் ஒவ்வொரு கணமும் பாய்ந்து கொண்டே உள்ளன. மனித உடல் வழியாகவும் அவை பாய்கின்றன.

பட மூலாதாரம், FACEBOOK

பாறைகளையும் அது துளைத்துச் செல்லும். அதே நேரத்தில் அப்படித் துளைத்துச் செல்வதால் பாறைகளாயினும், மனித உடலாயினும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது,'' என்றார் மார்க்ஸ்.

''அவர் மேலும், ''நியூட்ரினோ குறித்த முழுத் தெளிவும் அறிவும் கிடைத்தால் நமக்கு விண்வெளியியல், மருத்துவம் முதலான பல துறைகளில் பெரும் பயன் விளையும் என்கிற நம்பிக்கையை விஞ்ஞானிகள் முன் வைக்கின்றனர். அதில் உண்மையுண்டு.''

எனவே அணு உலைகளைப்போல பல்லாயிரம் ஆண்டு கால பாதிப்பை ஏற்படுத்துவது அல்ல இந்த நியூட்ரினோ ஆய்வு முயற்சி. மிகவும் தேவையான ஒன்றும் கூட,'' என்று தெரிவித்தார்.

இதனிடைய, நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு அரசு தெளிவான பதில்களை தரவில்லை என்கிறார் அணு உலை எதிர்ப்பாளர் சு.ப.உதயகுமார்.

''நியூட்ரினோ ஆய்வு மையம் எப்போதுமே செயல்படும் நிறுவனமாக இருக்காது. ஆய்வுகள் முடிந்த பின்னர், இந்த மையம் என்னவாகும் என்ற தெளிவான பதில் அரசிடம் இல்லை. இந்த மையம் தொடர்பாக முதலில் அரசு வெளியிட்ட அறிக்கையில் இந்த மையம் எதிர்காலத்தில் அணு கழிவுகளை சேகரித்து வைக்கும் இடமாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சர்ச்சைகள் எழுந்ததும், அந்த வார்த்தை தவறுதலாக எழுதப்பட்டது என்று சமாளித்தார்கள். இது நம்பும்படியாக இல்லை,'' என்கிறார் உதயகுமார்.

''சாதாரண மனிதனுக்கு பயன்தராத அறிவியல் தேவையா?''

மேலும், மேற்குத்தொடர்ச்சி மலையில் ஒரு பகுதியாக உள்ள தேனி மாவட்டத்தில் உள்ள மலையை குடைந்து, வெடிவைத்து தகர்த்து வேலைகள் நடைபெறும்போது, அது சுற்றுச்சூழலை எந்த விதத்திலும் பாதிக்காது என்று கூறுவதில் அறிவியல் உள்ளதா என்று சந்தேகம் எழுகிறது என்கிறார்.

பட மூலாதாரம், FACEBOOK

''நியூட்ரினோ நோக்குக் கூடம் அமைப்பதில் அரசு காட்டும் அக்கறையை ஏன் சாதாரண மனிதர்களின் சாதாரண தேவைகளை பூர்த்திசெய்வதில் காட்டுவதில்லை. இந்த அறிவியல் திட்டத்தால் சாதாரண மக்களுக்கு ஏன் பயன் கிடைக்கக்கூடும்?

அவர்களின் அன்றாட வாழ்வில் எந்த விதத்தில் இந்த அறிவியல் மாற்றத்தைக் கொண்டுவரும்? மக்களின் வாழ்வாதாரத்தை உயர்தாத எந்த திட்டமும் பயனற்ற திட்டம்தான்,'' என்று தெரிவித்தார் உதயகுமார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :