வர்ச்சுவல் ரியாலிட்டிக்கும், ஆகுமெண்டட் ரியாலிட்டிக்கும் என்ன வித்தியாசம்?

இந்த வாரத்தின் சிறப்பு தகவல் - "வர்ச்சுவல் ரியாலிட்டிக்கும், ஆகுமெண்டட் ரியாலிட்டிக்கும் என்ன வித்தியாசம்?"

படத்தின் காப்புரிமை Melpomenem
Image caption மெய்நிகர் தொழில்நுட்பம்

பிபிசி தமிழின் வாராந்திர தொடரான "தொழில்நுட்ப உலகம்" பகுதியில், ஒவ்வொரு வாரமும் தொழில்நுட்ப செய்திகளை மட்டுமல்லாது, தொழில்நுட்பம் சார்ந்த பயனருக்கும் உதவும் ஒரு தகவலையும் பகிர உள்ளோம். அந்த வகையில் இந்த வாரம், சினிமா, கேமிங், பொறியியல், மருத்துவம், கல்வி போன்ற பல்வேறு துறையிலும் அதிமுக்கியமான கூறாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான வர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) மற்றும் ஆகுமெண்டட் ரியாலிட்டி (Augmented Reality) இடையேயான வேறுபாட்டை இந்த வாரம் தெரிந்துகொள்வோம்.

சுருக்கமாக VR, AR என்றழைக்கப்படும் இந்த தொழில்நுட்பங்கள் கிட்டதட்ட ஒத்த செயல்பாட்டை கொண்டிருந்தாலும், செயல்பாட்டு மற்றும் பயன்பாட்டளவில் மிகப் பெரிய வேறுபாட்டை கொண்டுள்ளது. நாம் அவ்வப்போது குழம்பி போகும் தொழில்நுட்ப விடயங்களில் இதுவும் ஒன்று.

வர்ச்சுவல் ரியாலிட்டி (மெய்நிகர் தொழில்நுட்பம்)

கண்ணில் ஒரு கண்ணாடியை மாட்டியவுடன், உங்களை ஒரு மாய உலகிற்கு அழைத்துச்செல்வதுதான் வர்ச்சுவல் ரியாலிட்டி. அதாவது, கூகுளின் கார்ட்போர்ட், ஃபேஸ்புக்கின் ஆகுலஸ் ரிப்ட் போன்ற ஏதாவதொரு வி.ஆர் ஹெட்செட்டில் உங்களது கைபேசியை (குறிப்பிட்ட சில மாடல்கள் மட்டுமே) உள்ளே வைத்துவிட்டு, அதை கண்ணில் மாட்டிக்கொண்டால் போதும். நீங்கள் இமயமலையின் உச்சிக்கு செல்லலாம், தாஜ் மகாலை சுற்றிப்பார்க்கலாம்; வெள்ளை மாளிகைக்கு போகலாம்; பறவையை போன்று வானத்தில் பறக்கலாம்; விண்வெளியில் மிதக்கலாம். நிஜ உலகிலுள்ள முக்கியமான இடங்களையும், நினைத்துப்பார்க்க முடியாத மாய உலகின் இடங்களையும் வி.ஆரில் நின்றுக்கொண்டு இடத்திலிருந்தே நீங்கள் பார்க்கலாம்.

எனவே, வர்ச்சுவல் ரியாலிட்டியை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், உடல் நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கும், ஆனால் கண்கள் மட்டும் மாய உலகில் உலாவி கொண்டிருக்கும்.

ஆகுமெண்டட் ரியாலிட்டி

நிஜ உலகில் இருப்பவரை மாய உலகிற்கு அழைத்துச்செல்வது வர்ச்சுவல் ரியாலிட்டி என்றால், நிஜ உலகத்திலேயே மாய உலகத்தை இணைப்பதுதான் ஆகுமெண்டட் ரியாலிட்டி. அதாவது, வர்ச்சுவல் ரியாலிட்டியை போன்றே இதற்கும் ஹெட்செட்டுகள் இருந்தாலும், வெறும் கைபேசியிலேயே ஆகுமெண்டட் ரியாலிட்டியை சாத்தியமாக்கும் எண்ணற்ற செயலிகள் கிடைக்கின்றன. அதாவது, உங்கள் பேராசிரியர் சூரிய குடும்பத்தை பற்றி பாடம் எடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். பாடத்திலுள்ள விடயங்களை விளக்குவதற்கு அவர் புத்தகத்தை காண்பிக்கலாம்; கரும்பலகையை பயன்படுத்தலாம் அல்லது ஸ்மார்ட் வகுப்பில் திரையை பயன்படுத்திகூட விளக்கலாம்.

படத்தின் காப்புரிமை Georgijevic
Image caption ஆகுமெண்டட் ரியாலிட்டி

ஆனால், இதுவே உங்களது வகுப்பறையிலேயே சூரியனும், அதனை சுற்றிவரும் கோள்களும் வந்து, அதனருகே சென்று எந்த நிறத்தில் இருக்கிறது, எப்படி சுற்றுகிறது, வடிவம் எப்படி உள்ளது என்று தெரிந்தால் எப்படி இருக்கும்?! அதைத்தான் சாத்தியப்படுத்துகிறது ஆகுமெண்டட் ரியாலிட்டி.

நீங்கள் வாழும் உலகில்/ இடத்தில் அங்கு இல்லாத விடயத்தை கொண்டுவந்து உங்களை மெய்சிலிர்க்க வைப்பதுதான் இந்த ஆகுமெண்டட் ரியாலிட்டியின் சிறப்பம்சமே. சென்று ஆண்டு காலகட்டத்தில் எதிரே வரும் மனிதர்கள், வாகனங்கள் கூட தெரியாமல் பலரும் ஓடிக்கொண்டிருந்த போக்கிமான் கோ என்ற செயலியே ஆகுமெண்டட் ரியாலிட்டியை அடிப்படையாக கொண்டு செயல்படுவதுதான்.

உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர்.

ஒரு நொடிக்கு 1.4 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் செயல்படும் 5ஜி தொழில்நுட்பம்!

படத்தின் காப்புரிமை jamesteohart

இந்தியாவில் இன்னும் 4ஜி தொழில் நுட்பமே உறுதியளிக்கப்பட்ட முழுமையாக வேகத்தை பெற்றுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தகவல்தொடர்பு கருவிகள் தயாரிப்பு நிறுவனமான குவால்காம், 5ஜி தொழில்நுட்பத்தை கைபேசிகளில் சாத்தியமாக்கும் ஆன்டெனாக்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

5ஜி தொழில்நுட்பத்தை பெறுவதற்கு நமது கைபேசி மட்டும் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டிருந்தால் போதாது. அதற்கு, செயற்கைக்கோள், சிக்னல் டவர் போன்ற பல அமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். அமெரிக்காவில் ஒரு சராசரி 4ஜி பயனரின் இணைய வேகமான 71 எம்.பி.பி.எஸ்ஸை 2000 சதவீதம் அதிகரித்து 5ஜியில் 1.4 ஜி.பி.பி.எஸ் வேகத்தை கொடுக்கும் தொழில்நுட்பத்தை ஏற்கனவே உருவாக்கியுள்ள இந்நிறுவனம், இந்த தொழில்நுட்பத்தை கைபேசிகள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பத்தை தற்போது உருவாக்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை Qualcomm

அதாவது, 5ஜி தொழில்நுட்பத்தை கைபேசி ஏற்பதற்கு தேவையான QTM052 mmWave என்ற மிகச் சிறிய ஆன்டெனாவை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. கைபேசியின் நான்கு முனைகளிலும் இந்த ஆன்டெனாவை பொருத்தினால் எவ்வித பிரச்சனையும் இன்றி 5ஜி வேகத்தை பெறலாம் என்று கூறியுள்ள குவால்காம், அடுத்த ஆண்டின் மத்திய பகுதியிலேயே இந்த ஆன்டெனா பொருத்தப்பட்ட கைபேசிகள் விற்பனைக்கு வருமென்றும் தெரிவித்துள்ளது.

என்க்ரிப்ட் செய்யப்படாத மின்னஞ்சல்கள் - தனியுரிமைக்கு ஆபத்து

கடந்த ஏப்ரல் மாதம் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் பல்வேறு புதிய சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தியிருந்தது கூகுள் நிறுவனம். அதில் 'கான்பிடென்சில் மோட்' பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதாவது, இந்த சிறப்பம்சத்தை பயன்படுத்தி நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலை பெறுபவர் மற்றொருவருக்கு அதை பார்வர்ட் செய்யவோ, பிரிண்ட் எடுக்கவோ முடியாது; காபி, பேஸ்ட்டும் செய்யமுடியாது. தேவையென்றால், அந்த மின்னஞ்சலுக்கு காலாவதி நேரத்தையும், பாஸ்வேர்டையும் கூட அமைத்துக்கொள்ளலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images

அடிப்படையில் இலவசமாக வழங்கப்படும் ஜிமெயில் சேவைக்கு இதுபோன்ற சிறப்பம்சங்கள் மெருகூட்டினாலும், பயனர்களின் தனியுரிமைக்கு மிகப் பெரிய ஆபத்துக்களை விளைவிக்கக்கூடியது என்கிறது அமெரிக்காவை சேர்ந்த மின்னணு சார்ந்த விடயங்களுக்கான உரிமைக்காக செயல்படும் அரசுசாரா அமைப்பான இ.எஃப்.எஃப் (Electronic Frontier Foundation).

வாட்ஸ்அப், மெசஞ்சர், வைபர் போன்ற செயலிகள் அளிக்கும் 'என்க்ரிப்ஷன்' (ஒரு குறிப்பிட்ட இரு நபர்களுக்கிடையே பரிமாறப்படும் தகவல்களை அந்த இணையதளம்/ செயலியை நடத்துபவர்கள் உள்ளிட்ட எவரும் காண முடியாது ) என்னும் அதிமுக்கியமான விடயத்தை ஜிமெயிலின் 'கான்பிடென்சில் மோட்' கொடுப்பதில்லை என்கிறது அந்த அமைப்பு.

மேலும், ஒருவருக்கு அனுப்பும் மின்னஞ்சலை, பிரிண்ட், காபி-பேஸ்ட், பார்வர்ட் செய்யமுடியாது என்றாலும் அதை ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை தடுக்கமுடியாது என்றும், காலாவதியான மின்னஞ்சல்களையும் கூகுளால் எந்நேரமும் படிக்க முடியும் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்னஞ்சலுக்கு பாஸ்வேர்டு கொடுப்பதன் மூலம் அதை பெறுபவரின் ஒப்புதலின்றியே அவரது மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண் கூகுளுக்கு தெரியவருவதாகவும் இ.எஃப்.எஃப் கூறியுள்ளது.

பூமியிலிருந்து விண்வெளிக்கு சென்று மீண்டும் பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்

மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் ராக்கெட்டுகளை நடைமுறையில் சாத்தியப்படுத்தும் தனது முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.

படத்தின் காப்புரிமை SpaceX

நாம் பயன்படுத்தும் கைபேசி, பார்க்கும் தொலைக்காட்சி, பறக்கும் விமானம் போன்ற அனைத்துவிதமான செயல்பாடுகளுக்கும் அவற்றுக்கென விண்ணில் ஏவப்பட்டுள்ள செயற்கைகோள்களே காரணமாக உள்ளது. செயற்கைகோள்களை ஏந்திக்கொண்டு ராக்கெட்டுக்கள் விண்வெளிக்கு சென்று, குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் செயற்கைக் கோளை செலுத்திவிடும். இந்த முயற்சியில் ராக்கெட் தன்னை மாய்த்துக்கொள்ளும்.

இந்நிலையில், பூமியிலிருந்து விண்வெளிக்கு செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும் தொழில்நுட்பத்தை உருவாக்க பல நாடுகளும் முயற்சித்து வருகின்றன. ஏனெனில், அவ்வாறு பூமிக்கு திரும்பி வரும் ராக்கெட்டை மீண்டும் மீண்டும் பலமுறை பயன்படுத்துவதன் மூலம் தயாரிப்பு செலவையும், விண்வெளி குப்பையையும் குறைக்க முடியும்.

படத்தின் காப்புரிமை SpaceX

இந்நிலையில் இதுபோன்ற தொழில்நுட்ப ஆராய்ச்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கடந்த 21ஆம் தேதி கனடாவின் தகவல் தொடர்பு மேம்பாட்டுக்காக தயாரிக்கப்பட்ட 'டெல்ஸ்டார்19 வான்டேஜ்' செயற்கைக்கோளை மேம்படுத்தப்பட்ட பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. செயற்கைக் கோள் சுற்றுப்பாதையில் சேர்ந்த சில நிமிடங்களிலேயே அட்லாண்டிக் பெருங்கடலில் மீண்டும் பாதுகாப்பாக வந்திறங்கியது பால்கன் 9.

இதன் மூலம், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை தயாரிக்கும் முயற்சியில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது.

பால்கன் 9 ராக்கெட்டின் முந்தைய பதிப்பான பிளாக் 4ஐ சில முறை மட்டுமே மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும். தற்போது விண்ணில் ஏவிய புதிய பதிப்பான பிளாக் 5 ராக்கெட் பத்திரமாக பூமிக்கு திரும்பும் பட்சத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முறை பயன்படுத்த முடியும் என்று எம்ஐடி டெக்னாலஜி ரிவியூ தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :