"இனி பாஸ்வேர்டே தேவையில்லை" - கூகுளின் புதிய தயாரிப்பு அறிவிப்பு

  • சாய்ராம் ஜெயராமன்
  • பிபிசி தமிழ்
இனி பாஸ்வேர்டே தேவையில்லை - கூகுளின் புதிய தயாரிப்பு அறிவிப்பு

பட மூலாதாரம், trumzz

உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர்.

"இனி பாஸ்வேர்டே தேவையில்லை" - கூகுளின் புதிய தயாரிப்பு அறிவிப்பு

இணையதளங்களில் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் கடவுச்சொல்லுக்கு மாற்றாக கூகுள் நிறுவனம் "டைட்டன் செக்யூரிட்டி கீ" என்னும் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது.

உலகம் முழுவதும் பல இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டு பயனரின் தனிப்பட்ட தகவல்கள் பொதுவெளியில் வெளியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடினமான கடவுச்சொல் அமைப்பது மட்டுமல்லாமல், பயன்படுத்தும் இணையதளங்களின் பாதுகாப்பை பரிசோதிப்பது, 2 கட்ட கடவுச்சொல் சரிப்பார்ப்பை பயன்படுத்துவது போன்ற பல பாதுகாப்பு சார்ந்த விடயங்கள் வல்லுநர்களால் பயனர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதுமுள்ள தனது 85,000 பணியாளர்களின் கடவுச்சொல் பாதுகாப்புக்கு பென் ட்ரைவ் போன்ற ஒரு பாதுகாப்பு கருவியை பயன்படுத்தி வருவதாக தெரிவித்த சில தினங்களில் கூகுள் நிறுவனம் "டைட்டன் செக்யூரிட்டி கீ" என்னும் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

அதாவது, இந்த கீயை உங்களது கணினியில் சொருகிவிட்டால் குரோம் உலாவியில் (புரௌசர்) ஃபேஸ்புக், ட்ராப்பாக்ஸ் போன்ற இணையதளங்களை எவ்வித கடவுச்சொல்லையும் பதிவிடாமல், ஒரு கிளிக்கில் பயன்படுத்த முடியும்.

இந்த கீயை முதல் முறையாக பயன்படுத்தும்போது மட்டும் கடவுச்சொல்லை பதிவிட்டால் அது பயனரின் கணினி மற்றும் கடவுச்சொல் பதியப்பட்டுள்ள இணையதளம் போன்றவற்றை எவரும் திருடமுடியாத என்க்ரிடட் வடிவில் சேமித்துக்கொள்ளும்.

தற்போதைக்கு கூகுளின் கிளவுட் சேவை பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள இந்த கருவி, விரைவில் மற்ற பயன்பாட்டாளர்களுக்கும் விற்பனைக்கு வரும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப்: ஒரே நேரத்தில் 4 பேருடன் வீடியோ, ஆடியோ கால் செய்யலாம்!

ஒரே நேரத்தில் நான்கு பேருடன் வீடியோ/ ஆடியோ கால் செய்யும் வசதியை பிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்துள்ளது.

பட மூலாதாரம், WhatsApp

உலகளவில் குறுஞ்செய்தி செயலிகளில் முதன்மையான இடத்தை பெற்ற வாட்ஸ்ஆப்பை கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதைத்தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகளை அந்நிறுவனம் F8 என்னும் வருடாந்திர தொழில்நுட்ப மாநாட்டில் அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கடந்த மே மாதம் நடந்த ஃ பேஸ்புக் நிறுவனத்தின் F8 மாநாட்டில் குரூப் வீடியோ மற்றும் ஆடியோ கால் வசதிகள் உருவாக்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, உலகம் முழுவதுமுள்ள ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இயங்குதள வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் ஒரே சமயத்தில் அதிகபட்சம் நான்கு பேருடன் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படுவதாக வாட்ஸ்ஆப் அறிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

அதுகுறித்த சில முக்கிய விடயங்களை அறிவோம்.

  • நீங்கள் எப்போதும்போல ஒருவருக்கு வீடியோ/ ஆடியோ கால் செய்யவும்.
  • பிறகு, வலதுபுறம் உள்ள "add participant" என்பதை தெரிவு செய்து, உங்களது கைபேசியில் ஏற்கனவே பதியப்பட்டுள்ள எண்களை அழைப்பில் இணைத்து கொள்ளலாம்.
  • வீடியோ/ஆடியோ அழைப்புகளை அதிகபட்சம் நான்கு பேருடன் மட்டுமே மேற்கொள்ள முடியும்.
  • க்ரூப் ஆடியோ கால் செய்யும் போது அதனை வீடியோ காலாக மாற்ற முடியாது.

வாட்ஸ்ஆப் குறுஞ்செய்தி சேவையை போன்றே இந்த வீடியோ/ ஆடியோ சேவையும் முழுவதும் என்க்ரிப்ட் (ஒரு குறிப்பிட்ட இரு நபர்களுக்கிடையே பரிமாறப்படும் தகவல்களை அந்த இணையதளம்/ செயலியை நடத்துபவர்கள் உள்ளிட்ட எவரும் காண முடியாது) செய்யப்பட்டது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வித உதவியும் இல்லாமல் ஒரு வருடம் பறக்கும் ட்ரோன்

மின்சாரம், இயந்திரம், தொழில்நுட்பம் என எவ்வித உதவியும் இல்லாமல் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு வானத்தில் பறக்கும் ட்ரோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டனில் கடந்த வாரம் நடைபெற்ற ஃபர்ன்பாரூவ் இன்டர்நேஷனல் ஏர்ஷோவில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பட மூலாதாரம், Prismatic

குறிப்பாக, எவ்வித உதவியும் இல்லாமல் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு 55 முதல் 70 ஆயிரம் அடி உயரத்தில் 50-78 கிலோமீட்டர் வேகத்தில் 15 கிலோ எடையுள்ள கருவிகளை சுமந்துகொண்டு சூரிய ஒளியை பயன்படுத்தி பறக்கும் ட்ரோன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

பிரிட்டனை தலையிடமாக கொண்டு செயல்படும் ப்ரிஸ்மாட்டிக், பிஏஇ சிஸ்டம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள பாசா-35 என்ற தனது ட்ரோனின் மாதிரியை இந்த கண்காட்சியில் வைத்திருந்தது. "இந்த ட்ரோனை கண்காணிப்பு, தகவல் தொடர்பு, தொலை உணர்வு, சுற்றுச்சூழல் மாறுபாடு போன்றவற்றை கண்காணிப்பதற்கு பயன்படுத்தலாம். இதுபோன்ற மற்ற ட்ரோன்களை ஒப்பிடும்போது இதன் விலை குறைவாக இருக்கும்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Prismatic

மேலும், தற்போது கட்டமைப்பு நிலையிலேயே இருக்கும் இந்த ட்ரோன் அடுத்த வருடம் சோதனைக்குட்படுத்தப்பட்டு வரும் 2021ஆம் ஆண்டுக்குள் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராக்கெட்டுகள் வழியாக செயற்கோளை விண்ணில் நிலைநிறுத்தும் அதிக செலவுமிக்க தொழில்நுட்பத்தைவிட, இதுபோன்ற ட்ரோன்கள் விலை குறைவானதாகவும், 4ஜி, 5ஜி போன்ற அதிவேக இணையதள பயன்பாட்டை ஊரகப்பகுதிகளில் மேற்கொள்வதற்கு எளிதாகவும் இருக்குமென்று கருதப்படுகிறது.

இந்த வாரத்தின் சிறப்பு தகவல் - "ட்விட்டர் ட்ரெண்டிங்கும் அதுகுறித்த சர்ச்சைகளும்?"

பிபிசி தமிழின் வாராந்திர தொடரான "தொழில்நுட்ப உலகம்" பகுதியில், ஒவ்வொரு வாரமும் தொழில்நுட்ப செய்திகளை மட்டுமல்லாது, தொழில்நுட்பம் சார்ந்த பயனருக்கும் உதவும் ஒரு தகவலையும் பகிர உள்ளோம். அந்த வகையில் இந்த வாரம், ட்விட்டர் ட்ரெண்டிங் என்றால் என்ன? ஒரு ஹேஷ்டேக் எப்படி ட்ரெண்ட் ஆகிறது என்பது குறித்தும், ட்ரெண்டான ஹேஷ்டேக் ஒன்று நீக்கப்பட்டு அது சர்சையாக உருவெடுப்பதன் காரணம் குறித்தும் தெரிந்துகொள்வோம்.

பட மூலாதாரம், AFP

ட்விட்டர் ட்ரெண்டிங் என்றால் என்ன?

சமூக வலைத் தளமான ட்விட்டர் நிறுவனம் கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி ஜாக் டோர்ஸி, நூஹ் கிளாஸ், பிஸ் ஸ்டோன் மற்றும் இவான் வில்லியம்ஸ் ஆகியோரால் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டது.

இந்நிலையில், உலகம் அளவிலும் மற்றும் குறிப்பிட்ட நாடுகள், நகரங்களில் நடைபெறும் அல்லது பேசப்படும் செய்திகளில் முதன்மையானதை, குறிப்பிட்ட சில கணினி அளவீடுகளின் மூலம் கண்டறிந்து ட்விட்டர் பயன்பாட்டாளர்களுக்கு வழங்கும் ட்விட்டர் ட்ரெண்டிங் சேவைய கடந்த 2008 ஆம் ஆண்டு ட்விட்டர் தொடங்கியது.

ட்விட்டர் ட்ரெண்டிங் எப்படி முடிவு செய்யப்படுகிறது?

"குறிப்பிட்ட நேரத்தில் ஒரு தலைப்பைப் பற்றிய ட்வீட்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரிக்கும் போது, அதில் பயன்படுத்தப்பட்ட தலைப்பு ட்ரெண்ட்ஸ் பட்டியலில் நுழைகிறது" என்று ட்விட்டர் நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

சில வேளைகளில், ஒரு பிரபலமான ட்வீட்டின்/ஹேஷ்டேகின் பரவல் மக்கள் நினைக்கும் அளவுக்கு அதிகளவில் இல்லையென்றால் அது ட்ரெண்ட்ஸ் பட்டியலில் இடம்பெறுவதில்லை என்று ட்விட்டர் நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், AFP

சில நேரங்களில், ஒரு குறிப்பிட்ட தலைப்பு சார்ந்த உரையாடலின் வேகம் சராசரி நாளின் உரையாடலின் அடிப்படை நிலைக்கு நிகராக, விரைவாக அதிகரிக்கவில்லை என்றால் அது ட்ரெண்ட்ஸ் பட்டியலில் இடம்பெறுவதில்லை என்றும் அந்நிறுவனம் மேலும் கூறுகிறது.

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஒரு ஹேஷ்டேக் இடம்பெற விதிகள் உள்ளதா?

கணினி சார்ந்த அளவீடுகளின்படி, ட்விட்டரின் ட்ரெண்டிங் பட்டியலில் இடம்பெறுவதற்குரிய தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றின் பிரபலத்தன்மை குறையும்போது அவை நீக்கப்படுகின்றன.

ஆனால், தனது தளத்தில் ஆரோக்கியமான உரையாடலை ஊக்குவிப்பதற்கெதிராக இருக்கும் தலைப்பு ட்ரெண்டிங் பட்டியலில் சேர்க்கப்படாது அல்லது நீக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனத்தின் விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, அவதூறு பரப்பக்கூடிய தலைப்புகள், ஆபாசம், இனம், தேசம், பாலியல் விருப்பு, பாலினம், பாலின அடையாளம், மதச் சார்பு, வயது, ஊனம் அல்லது நோய் போன்றவற்றின் மீது கிளர்ச்சியை தூண்டும் கருத்துகளை பதிவிட்டால் அவை ட்ரெண்ட்டில் சேர்க்கப்படுவது தவிர்க்கப்படலாம் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பிட்ட தலைப்பின் சாத்தியமான விதிமீறலை மதிப்பீடு செய்யும்போது, அதன் தரத்தையும் அல்லது அதுகுறித்து மக்கள் காட்டும் விருப்பத்தையும் கருத்திற்கொண்டு, அது ட்ரெண்டிங் பட்டியலில் தொடரலாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று ட்விட்டரின் விதிமுறைகள் கூறுகிறது.

ட்ரெண்டிங் பட்டியலிலிருந்து ஒரு ஹேஷ்டேகோ அல்லது உள்ளீடோ நீக்கப்பட்டாலும் அதை பயன்படுத்தி பதியப்பட்ட பதிவுகள் ட்விட்டரிலிருந்து நீக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :