‘யானை, சிறுத்தை, மற்றும் சில பறவைகள்’ - மசனக்குடி காடும், நீதிமன்ற தீர்ப்பும்

பட்டா நிலமா, புறம்போக்கு நிலமா என்பதையெல்லாம் யானைகள் அறியாது. மொத்த கானும் அதன் நிலம்தான் என்கிறார் சூழலியலாளர் ஓசை காளிதாஸ்.

படத்தின் காப்புரிமை Rajasekar

நீலகிரி யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்தும் விதமாக தீர்ப்பொன்றை அளித்துள்ளது உச்ச நீதிமன்றம். கட்டடங்கள் முன் அனுமதி பெற்று சட்டத்திற்கு உட்பட்டு கட்டப்பட்டு இருக்கிறதா என்பதை நீலகிரி ஆட்சியர் பார்க்க வேண்டும். அப்படி இல்லாத எஸ்டேட்கள், விடுதிகள், கட்டடங்களுக்கு சீல் வைக்க வேண்டும் என்கிறது அந்த தீர்ப்பு.

'உள்ளூர் மக்களிடம் நிலம்'

இந்த தீர்ப்பு குறித்து நம்மிடம் பேசிய சூழலியலாளர் ஓசை காளிதஸ், "உள்ளூர் மக்களிடம் நிலம் இருந்தபோது எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. வெளியூரிலிருந்து வந்தவர்கள் வணிக நோக்கத்துடன் நிலத்தை எப்போது கைபற்ற தொடங்கிய போதுதான் பிரச்சனை தொடங்கியது" என்கிறார்.

படத்தின் காப்புரிமை Rajasekar
படத்தின் காப்புரிமை Rajasekar

ஓசை என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் காளிதாஸ். இந்த அமைப்பு சூழலியல் செயல்பாட்டில் பல ஆண்டுகாலமாக இயங்கி வருகிறது.

படத்தின் காப்புரிமை Rajasekar
படத்தின் காப்புரிமை Rajasekar

இது குறித்து விளக்கும் அவர், "தக்காண பீட பூமியில் உள்ள பந்திப்பூர், முதுமலையையும் கீழே உள்ள மன்னார்காடு, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளையும் இணைக்கும் யானை வழித்தடமாக மசனக்குடி உள்ளது. இங்கு வணிக நோக்கத்துடன் வந்தவர்கள் உள்ளூர் மக்களிடமிருந்து நிலங்களை கைப்பற்றி எந்த சூழலியல் பிரக்ஞையும் இல்லாமல் சுற்றுலா விடுதிகளை கட்டத் தொடங்கினார்கள். கேளிக்கையும் அதன் மூலம் வரும் வருவாயும் மட்டுமே அவர்களுக்கு நோக்கமாக இருந்தது. தங்கள் வழித்தடத்தில் புதிது புதிதாக கட்டடம் முளைத்ததால் தடுமாறி போயின யானைகள். இப்படியான சூழலில் வந்திருக்கும் இந்த தீர்ப்பு நிச்சயம் வரவேற்கதக்கதே" என்கிறார்.

'கானுயிர் சுற்றுலா'

நீலகிரி இந்தியாவின் முதல் உயிர்க்கோள் காப்பகம். ஆசிய யானைகள் இந்தப் பகுதியில்தான் அதிகளவில் இருக்கின்றன. இந்த பின்னணியில் ஏன் நாம் நிலகிரியை பாதுகாக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ஓசை காளிதாஸ்.

படத்தின் காப்புரிமை Facebook
படத்தின் காப்புரிமை Rajasekar

சுற்றுலா பிரச்சனை இல்லை. ஆனால், அது இயற்கையோடு இயைந்ததாக இருக்க வேண்டும். மசனக்குடிக்கு மக்கள் வரட்டும்.கானுயிர்களை காணட்டும். ஆனால், தங்கள் சந்தோஷம் மட்டுமே பிரதானம் என்ற கேளிக்கை நோக்கில் கானுயிர்களுக்கு தொந்தரவு தர வேண்டாம் என்கிறார் .

'யானைகள் மட்டுமல்ல'

யானைகளின் வழித்தடம் மட்டுமல்ல, எண்ணற்ற கானுயிர்கள் இங்கு வசிக்கிறது என்கிறார் கானுயிர் புகைப்பட கலைஞர் ராஜசேகர்.

படத்தின் காப்புரிமை Rajasekar
படத்தின் காப்புரிமை Rajasekar
படத்தின் காப்புரிமை Rajasekar

"ஆரஞ்ச் மினிவெட், மலபார் பாராகீட், வயிட் சீகிடு பார்பெட், காப்பர் சிமீத் பார்பெட், ஆசியன் ஃபேரி ப்ளூபேர்ட், ஹார்ன் பில், மவுஸ் டீர் என ஏராளமான கானுயிர்கள் வாழ்கின்றன. ஏன் புலிகளும், சிறுத்தைகளும் கூட உள்ளன என்கிறார் அவர். அங்குள்ள விடுதிகள் இந்த கானுயிர்களை சக உயிர்களாக அணுகவதில்லை. குப்பைகளை கொட்டுகிறார்கள். நாம் நகரத்து வீதிகளில் மாடுகள் குப்பைகளை உண்ணுவதை பார்ப்போம் தானே... இப்போது அதே தான் காடுகளிலும் நடக்கிறது.காடுகளிலேயே பிளாஸ்டிக் பொருட்கள் மான்களின் உணவாக ஆகிவிட்டது" என்கிறார் அவர்.

மனிதர்களுக்கு மட்டுமானது இந்த புவி அல்ல என்பதை நாம் உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ளாதவரை நீதிமன்ற தீர்ப்புகளால் மட்டும் ஒன்றும் செய்துவிட முடியாது என்று பிபிசியிடம் தெரிவித்தார் ராஜசேகர்.

படத்தின் காப்புரிமை Rajasekar

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னோசெண்ட் திவ்யா, "நாங்கள் அளித்த தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் 27 விடுதிகள் மூடப்படும். இப்போது அதற்கான பணியில்தான் இருக்கிறோம்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்